சனி, 13 ஜூன், 2009

பூவுக்கு விலங்கு பூட்டுவதா?





உழைக்க வேண்டும்; உயர வேண்டும்; இதனால் ஊரும் உயரும்; உலகமும் உயரும். ஆனால் யார் உழைப்பது? யாருக்காக உழைப்பது? எந்த வயதில் உழைப்பது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சிந்திக்க வேண்டும்.

"பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி. பருவம் தவறிப் பயிர் செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிர்பாராத விளைவுகளே ஏற்படும். நன்மைக்குப் பதிலாக தீமைகளும், உண்மைக்குப் பதிலாகப் பொய்களும் விளைவதால் பயன் என்ன? பூக்களுக்குப் பதிலாக முட்களே முளைக்கும். நிலவுக்குப் பதிலாக நெருப்பே சுடும்.

குழந்தைத் தொழிலாளர் பெருகுவது தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் அவமானம்; மன்னிக்க முடியாத குற்றம்; நம்மை நம்பிப் பிறந்த குழந்தைகளை நாமே தவறு செய்யத் தூண்டலாமா? அவர்கள் அறியாமல் செய்த குற்றத்திற்குத் தண்டனைகளை அனுபவிக்க வேண்டியவர்கள் பெற்றோர்களே! இந்தப் பொறுப்பற்ற பெற்றோர்களுக்கே முதலில் பாடம் நடத்தப்பட வேண்டும்.

குழந்தைப் பருவம் என்பது வாழ்க்கைக்கான கல்வி கற்றல், மகிழ்ச்சியை அனுபவித்தல், தீமைகளிலிருந்து விலகிப் பாதுகாப்பாக இருத்தலாகும். இந்தக் குழந்தைப் பருவத்தை அனுபவிக்கச் செய்யும் பொறுப்பு பெரியவர்களுடையது. அதனைச் செய்யாமல் அவர்களைச் சுரண்டக் கூடாது; அவர்களது உழைப்பைத் திருடக் கூடாது.

புகழ்பெற்ற "ராய்ட்டர்' என்ற செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வில் குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களாக மூன்று நாடுகளைக் குறிப்பிட்டிருந்தது. அவை ஈராக், சோமாலியா மற்றும் இந்தியா, இந்தியாவுக்கு இந்த இழிநிலை வருவதற்கு என்ன காரணம்? குழந்தைகளிடம் நமக்குள்ள அக்கறையற்ற போக்குதான்.

உலகிலேயே அதிகமான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடும் இந்தியாதான். வீட்டுவேலை செய்வது, பேப்பர் சேகரிப்பது, எடுபிடி வேலை செய்வது போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் தொகை கூடுதல்தான்.

தொழிலகங்களில் வேலை செய்யும் குழந்தைகளுக்காவது வாரம் ஒருநாள் விடுமுறை கிடைக்கும். ஆனால் வீட்டுவேலை செய்யும் குழந்தைகளுக்கு ஓய்வும் கிடையாது; விடுமுறையும் கிடையாது. ஆண்டுமுழுவதும் உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஊதியமும் மிகக் குறைவு.

இவர்களில் பெண் குழந்தைகளே அதிகமாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலான ஏழைக் குடும்பங்களில் வீட்டிலுள்ள பிற குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுதல், சமையல் செய்தல், வீட்டைப் பராமரித்தல் என்பன பெண் குழந்தைகள் மீதே சுமத்தப்படுகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகள் படிக்கவும் முடிவதில்லை; பள்ளிப்படிப்பை முடிக்கவும் முடிவதில்லை.

இதைவிடத் திடுக்கிடச் செய்யும் மற்றொரு தகவல் ஆப்பிரிக்கக் குழந்தைகளைவிட இந்தியக் குழந்தைகளிடம் சத்துணவுப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்னும் அறிவிப்பாகும். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அங்குள்ள குழந்தைகளில் 25 விழுக்காட்டினர் சத்துணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் சுத்தமான குடிநீர் கிடைக்காமையால் ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகின்றனர் என்பது மிகப்பெரிய அவலம்.

இந்தியாவில் 10 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. 3 கோடி பேருக்கு இருக்க இடமே இல்லை. ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் குடிசை இடிக்கப்பட்டு தெருவில் நின்ற காட்சியை நினைத்துப் பார்த்தால் இதன் உண்மை தெரியும்.

குழந்தைத் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி 14 வயதுக்கு உள்பட்டவர்கள் குழந்தைகள் என அழைக்கப்படுவர். இவர்கள் சட்டத்தின் 3-ம் பிரிவில் இடம்பெற்றுள்ள 13 வகையான தொழில்கள் மற்றும் 57 வகையான தொழில் நடைமுறைகள் போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

குழந்தைகளைப் பணியில் அமர்த்துவோருக்கு 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். இந்தச் சட்ட நடைமுறைகளை மத்திய அரசும், மாநில அரசும் அவரவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்படுத்த வேண்டும்.

1987-ம் ஆண்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி தீமைகளை ஏற்படுத்தும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படாமல் காப்பதற்குத் தேவையான அரசியல் சட்டப் பிரிவுகள் மற்றும் சட்டப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிக்கலான குழந்தைத் தொழிலாளர் முறை பற்றி இந்தக் கொள்கையில் விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் விளக்கப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கைத் திட்டம், குழந்தைகளின் குடும்பங்கள் பயன் அடையும் வகையிலான பொதுவளர்ச்சித் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அம்முறையை ஒழிப்பதை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களைச் செயல்படுத்துதல் என இந்தக் கொள்கையின்படி தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டங்களைத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தீமை ஏற்படுத்தும் தொழில்களில் ஈடுபட்டுள்ள குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கான தொடர்நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவில் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் குறைவேயில்லை. ஆனால் இவை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? உலகத்திலேயே இந்தியாவில்தான் குழந்தைத் தொழிலாளர் மிகுதியாக இருப்பதாக யுனெஸ்கோ கூறுகிறது. இல்லை என்று மறுப்பதற்கு உண்மை இடம் தரவில்லை.

இந்நாட்டின் அதிகாரப்பூர்வ கணக்கின்படி ஒரு கோடியே 30 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் 6 கோடி குழந்தைத் தொழிலாளர் இருப்பதாகத் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 1986-ம் ஆண்டில் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, இதுவரை 60 ஆயிரம் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு இப்போது குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் முனைப்புடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செயல்பட்டு வருவதாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 2007-ம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் சட்டம் மற்றும் பிற சட்டங்களின்கீழ் 2,13,522 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 989 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 231 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. ரூ. 19,89,575 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 1,041 குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டுவேலை உள்ளிட்ட பிற தொழில்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 479 குழந்தைத் தொழிலாளர்கள் உடனடியாகப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களையும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பு கூறுகிறது.

அரசாங்க அறிவிப்புகளைக் கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மை அதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது. அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை பொறுப்புள்ளவர்கள் கூறாமல் இல்லை.

பெரும்பாலான குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதற்குக் காரணம் வறுமைதான் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். குடும்பத்தில் எல்லோரும் வேலைக்குப் போனால்தான் அரைவயிறாவது சாப்பிட முடியும். இந்நிலையில் பெற்றோரைக் குற்றம் கூறி என்ன பயன்? அவர்கள் வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கின்றனர்? இல்லாதபோது என்ன செய்ய முடியும்? இப்படியும் சிலர் கேட்கவே செய்கின்றனர்.

ஏழ்மை மட்டுமன்றி, இயற்கைச் சீற்றங்களின்போது பல குடும்பங்கள் வீடு, சொத்து, வாழ்வாதாரம் போன்ற அனைத்தையும் இழந்துவிடுவதால் அக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். உறவினர்கள் மற்றும் தரகர்களால் நகர்ப்புறங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் பெரும்பாலோர் கொத்தடிமைகளாக விற்கப்படுகின்றனர்.

பச்பன் பச்சாவோ அந்தோலன் அமைப்பு 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களையும், கொத்தடிமைகளையும் மீட்டுள்ளது; இது எளிய செயலாக இல்லை; உயிரையே பணயம் வைப்பதாக இருந்தது.

குழந்தைகள்தான் நமது உண்மையான சொத்துகள் என்றும், தேசத்தின் எதிர்காலம் என்றும் கொள்கை ஆவணங்கள் கூறுகின்றன. இந்தியாவில் உள்ள தொழிலாளர் சக்தியில் 55 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் திரிகின்றனர். இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நிதிநிலை அறிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. "அனைவருக்கும் கல்வி' என்னும் அரசுத்திட்டம் இன்னும் எல்லோருக்கும் சென்று சேரவே இல்லை. இப்போது படித்து வருபவர்களில் 50 சதவீதம் பேர் தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர்.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் தலைவரான சாந்தா சின்ஹா குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று கருதுகிறார். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, சத்துணவு வழங்குவது, கல்வி அளிப்பது ஆகியவை அரசாங்கக் கொள்கையின் அடிநாதமாக அமைய வேண்டும் என்றும் கூறுகிறார்.

"குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பது பெரியோர் பொன்மொழி. தெய்வத்தைக் கொண்டாடுகிறோம். குழந்தைகளைக் கொண்டாட வேண்டாமா? செதுக்க வேண்டிய சிற்பத்தைச் சிதைக்கலாமா? பூவுக்கே விலங்கு பூட்டலாமா?
"குழந்தைகளின் வருமானம் குடும்பத்துக்கே அவமானம்' என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கெடுப்பதற்கான உரிமை யாருக்கும் இல்லை; ஆளாக்க
வேண்டிய கடமை மட்டுமே அனைவருக்கும் இருக்கிறது

தயவு செய்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் இன்று முதல் சபதம் ஏற்ப்போம்

2 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

சிந்திக்க வைக்கும் அர்த்தமுள்ள பதிவு. இது உங்கள் படைப்பா? நன்றாக இருக்கிறது.
எங்கள் எல்லோருக்குள்ளும் ஒரு எழுத்தாளன் இருக்கிறான். நிறைய எழுதுங்கள்.
என்னை உங்கள் வலையத்திற்கு அழைத்ததிற்கு நன்றி.

இராயர் சொன்னது…

உங்களின் வருகைக்கு நன்றி,
முன்பு தினசரி நாளேடில் படித்தது.நீங்கள் வந்தமைக்கு நன்றி
கண்டிப்பாக எழுத முயற்சிக்கறேன்