திங்கள், 15 ஜூன், 2009

காதல்



ம்யாவுக்கும் ராம்கிக்கும் கல்யாணமாகி, முழுதாக மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. இன்றைக்கும் அவள் மனதில் குடிகொண்டிருக்கும் அந்த விநோத ஆசையைச் சொன்னால், கேட்பவர்கள் சிரிப்பார்கள்.
சின்ன வயதில் இருந்து நம் எல்லோரையும் போலவே நிறைய சினிமாக்கள் பார்த்து, தலையணைக்கு அடியில் மறைத்து வைத்து மாதாந்திர நாவல் படித்து வளர்ந்தவள்தான் ரம்யாவும். கதாநாயகன், கதாநாயகியிடம் 'ஐ லவ் யூ' சொல்லாத சினிமாவோ... நாவலோ உண்டா என்ன? ஏதோ அலுத்துப்போன வார்த்தைகளாக நாம் காட்டிக் கொண்டாலும் 'ஐ லவ் யூ' என்ற அந்த மூன்று வார்த்தைகளுக்கென்று ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது.சினிமா, டிராமாவெல்லாம் வேண்டாம். நிஜத்தில், நேரில், ஒரு ஆண்.. ஒரு பெண்ணிடம்.. 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையைச் சொன்னால், எப்படி இருக்கும்? என்ற கற்பனை பல இரவுகளில் அவளைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. ஆனால், 'எனக்கென ஒருவன் வருவான். அவனை என் அப்பா, அம்மா எனக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள். அவர்கள் நிச்சயித்த வண்ணம் அவனுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும். அவன் என்னிடம் திகட்டத் திகட்ட ஐ லவ் யூ சொல்வான்' என்பதே அவள் கனவுகளின் முடிவுரையாக இருக்கும்.

அந்த ஆசைதான் மூன்று வருடங்களாகியும் இன்னும் நிறைவேறாமல் அவளைத் துரத்திக் கொண்டிருக்கிறது. நம் ஊரில் நிஜமான திருமணம், சினிமா திருமணம் போலவா இருக்கிறது?

'சார், எனக்குக் கல்யாணம்' என்று இரண்டு மாதங்களாக பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி, வெட்கம் மரத்துப் போனது.

''என் பாஸ் வர்றார்.. கொஞ்சம் சிரிக்கக்கூட மாட்டியா?'' என்று ரிசப்ஷனிலேயே ராம்கியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது.. தன் வருமானம் பற்றியும், கடன்கள் பற்றியும் முதலிரவில் ராம்கி நீண்ட விளக்கங்கள் தந்தது..

- இப்படி அவளுக்கு வாய்த்தவை எல்லாமே சராசரி அனுபவங்கள்தான்.

ராம்கி மிக மிக பிராக்டிகலானவன். பிரபல கட்டட கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில் சீனியர் இன்ஜினீயராக இருக்கிறான். 'மூன்று வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லையே' என்ற நியாயமான ஏக்கத்தைத் தவிர அவனுக்குள் நிறைவேறாத ஆசை என்று எதுவும் இல்லை. சென்னையில் அவன் வாழ்ந்த 'பேச்சுலர்' வாழ்க்கையை ஒப்பிட்டால், இப்போது அவன் சொர்க்கத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். தன் வாழ்வையே மாற்றி, குடும்பஸ்தன் என்ற கௌரவத்தைத் தனக்குக் கொடுத்திருக்கும் தேவதையாகத்தான் அவன் ரம்யாவைப் பார்க்கிறான்.

ஆனால், அதை முழு நீள வசனமாக எழுதி வாசிக்கவா முடியும்? ''நான் வரணும்னெல்லாம் எதிர்பார்க்காதே.. நீ சாப்பிட்டுட்டுப் படுனு எத்தனை தடவை சொல்றேன்.. கேக்கறியா நீ? இவ்வளவு வீக்கா இருந்தா, வயித்துல குழந்தை எப்படித் தங்கும்?'' என்று அதட்டுவதுதான் அவனுக்குத் தெரிந்த அக்கறை!

அன்றும் அப்படித்தான். தான் அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்திருந்த லேடி டாக்டரிடம் போக மறந்ததற்காக கொஞ்சம் அதிகமாகவே கத்திவிட்டான் ராம்கி. கண்ணீர் பொங்கி வழிந்தது ரம்யாவுக்கு. வேகமாக உள் அறைக்கு ஓடியவள், கட்டிலில் விழுந்து குலுங்கி அழுதாள்.

''உன்னை சமாதானப்படுத்துறதுக்கு இப்போ எனக்கு டைம் இல்லை ரம்யா!''

- சொல்லிவிட்டு அவன் வாட்ச்சைப் பார்த்தபடியே கிளம்பி விட்டான்.

ரம்யாவுக்குக் கோபம் கோபமாக வந்தது. ராம்கி எப்போதும் இப்படித்தான். இதுவரை, அவர்களுக்குள் எத்தனையோ முறை சண்டை வந்திருக்கிறது. ஆனால், ஒருமுறைகூட அவன் அவளை சமாதானப் படுத்தியதில்லை. 'எந்தக் கோவமுமே ரெண்டு நாள்ல சரியாகிடும்! அது வரைக்கும் எந்தப் பதிலும் பேசாம, சும்மா இருந்தாலே போதும்!' என்பது அவன் எண்ணம். அதனால் வந்த அணுகுமுறை இது.

அவனோடு வேலை பார்ப்பவர்கள் வேண்டுமானால், இந்த அணுகுமுறையால் சந்தோஷப்பட்டிருக் கலாம். ஆனால், ரம்யாவை இந்த அணுகுமுறைதான் கொன்று எடுத்தது. 'என்னை சமாதானப்படுத்துறதுக்கு கூட நேரமில்லையாம். அப்போ அடுத்த மாசம் வரப்போற உன் பிறந்த நாளுக்காக உனக்கே தெரியாம கோட்-சூட் எடுத்துத் தைக்கக் கொடுத்திருக்குற நான், பைத்தியக்காரியா?'
- ரம்யாவுக்கு சாப்பாடு இறங்கவில்லை.

'அவன் வந்து பார்க்கும்போது நான் வீட்டுல இல்லைனா.. ம்ஹ¨ம், செத்துக் கிடந்தா எப்படி இருக்கும்?' விபரீதமாகப் போயின அவள் எண்ணங்கள்.

'இல்ல.. சும்மா போகக் கூடாது. பளிச்சுனு நேராவே நாலு வார்த்தை கேட்டுட்டுதான் போகணும் அப்பதான் அதுக்கு (!) உறைக்கும்' தோன்றிய உடனேயே போனை எடுத்தாள்.

வேலையின் இரைச்சலின் ஊடே செல்போனை எடுத்த ராம்கி, அப்படி ஒரு உணர்ச்சிவசப்பட்ட பேச்சை எதிர்பர்க்கவில்லை. ''மனுஷனாடா நீ..? மனசுனா என்னனு உனக்குத் தெரியாதா? நான் அழுதா, கோபப்பட்டா நீ சமாதானப்படுத்த மாட்டியா? தானா ரெண்டு நாள்ல சரியாகிடும்னு வெயிட் பண்ணுவியா? பளிச்சுனு ரெண்டு அடி அடிச்சா கூட எனக்கு சந்தோஷமா இருந்திருக்குமே! அது புரியலையே உனக்கு?'' என்று படு வேகமாகப் பேசியவள், பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டாள்.

'ஊருக்குப் போய் அப்பா, அம்மாவைப் பார்த்துட்டு ரெண்டு வாரம் கழிச்சுத்தான் வரணும்' - முணுமுணுத்தபடியே டிராவல் பேக்குக்குள் துணிகளைத் திணித்தாள்.

அரை மணி நேரத்தில் காலிங் பெல் அடித்தது.. திறந்தாள்.. 'முக்கியமான சைட்.. நான்தான் இதுல முழுப் பொறுப்புமே.. கம்பனிகிட்ட நல்ல பேர் வாங்கணும்..' என்ற அத்தனை பொறுப்புகளையும் தள்ளி வைத்துவிட்டு ராம்கி நின்றிருந்தான்.

சட்டென்று அவளைத் தள்ளிக் கொண்டே உள் நுழைந்தவன், அழுத்தமாக அவளை அணைத்தபடி பேசினான்.. ''உன்னை விட எனக்கு வேற எதுவுமே முக்கியம் இல்ல ரம்யா. நீ கோவமா இருந்தா, நான் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிடுவேன் தெரியுமா? இதெல்லாம் நான் சொன்னாதான் உனக்குப் புரியுமா... மரமண்டு!''

ரம்யா பதில் ஏதும் பேசாமல் அவன் சட்டையில் முகம் ஒற்றி தன் கண்ணீரைத் துடைத்தாள்.

''ஐ லவ் யூடா'' ராம்கியின் மனசுக்குள் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
அந்தப் பரவசம் மெள்ள மெள்ள மயக்கமாக உருவெடுக்க, அப்படியே கணவன் தோளில் சாய்ந்தாள் ரம்யா.

ராம்கி பயந்து போனான்.

நீங்கள் பயப்படாதீர்கள்.

எல்லாம் நல்ல சேதியாகத்தான் இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



Thanks: Aval Vikatan

2 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

அழகான கதை. அதிகமான ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் வெவ்வேற கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

இராயர் சொன்னது…

உங்கள் வருகைக்கு நன்றி