திங்கள், 23 நவம்பர், 2009

குதிரையில் வரும் ராஜகுமாரனுக்காக-வசந்த நிலா, மும்பை


* நான் ஒன்றும் ராஜகுமாரியல்ல...

வெண்புரவியில் வரும்
ராஜகுமாரன்
வந்து தூக்கிச் செல்வான்
எனும் கனவுகளோடு
காத்திருக்க...


* என் தந்தையின்
வரவிற்குள்ளே
ஒத்துக்கொள்ளும்
வரதட்சணையை
சந்தோஷமாக ஏற்றுக்
கொள்ளும்
சாதாரணமானவனுக்காக...


* அற்புதமாக
வசந்த கனவுகளோடு
காத்திருக்காமல்
என்னை மனம்
நோகாமல்
வாழ்க்கையை வழிநடத்திச்
செல்லும்
வசந்த குமாரனுக்காக
என் சின்ன வீட்டிற்குள்
சுற்றி, சுற்றி
வலம் வருகிறேன்...

* பெருங்கல் தூக்கி
ஜல்லிக்கட்டு காளையை
அடக்க வரும்
வல்லவனுக்காகவோ...
வானவில் ஜாலங்களோடு
வார்த்தை வித்தகனாக
திரைப்பட நாயகனின்
மறு அவதாரமாகவோ
என்னை வந்து
சிறையெடுக்க வரும்
சிற்பன்னனுக்காக நான்
விழிகளை மூடி
விரிய கனவு காணவில்லை...

* தினசரி அவதிகளோடு
என் வீட்டு மாலை
தின்பண்டங்களை
காபியோடு புசித்துவிட்டு
"பிடித்திருக்கிறது' என்று
சந்தோஷித்து விட்டு
ஓரக்கண்ணால் ஓர்
புன்னகை புரிந்து
"வரட்டுமா?' என
கையசைத்து செல்லும்
அன்றாட ஓட்டங்களின்
மத்தியில் அல்லல்பட்டும்
சகித்துக் கொள்ளாத
ஒரு சாதாரண மனோபாவ
மானிட இளைஞனுக்காக
காத்திருக்கும் இந்த
மங்கையை...


* எப்போது கனவுகளுக்கும்
சிணுங்கல்களுக்குள்ளும்
அழைத்துப் போகப்
போகிறாய் அன்பனே.
..