வெள்ளி, 23 அக்டோபர், 2009

தம்பதிகள் ஐந்து வகை...அதில் நீங்கள் எந்த வகை ?





'கோ.. கோ.. ஈகோ' என்று ஈகோவைத் தூக்கித் தூர எறியுங்கள். 'தோல்விகள்கூட காதலில் வெற்றிகளே' என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்!
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாததால்... திரும்பிய பக்கமெல்லாம் 'டைவர்ஸ்' குரல் கேட்கிறது.

"இது சரிப்பட்டு வரவே வராது... இனி டைவர்ஸ்தான் ஒரே வழி!"என இப்போது முண்டியடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் இளம் தம்பதிகள்! உலகம் முழுக்க ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை எகிறிக் கொண்டே போவதாக கவலை தருகின்றன புள்ளிவிவரங்கள்.

“சரிப்பட்டு வரலேனா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா!"என்பதுதான் லேட்டஸ்ட் அறிவுரை வேறு!

என்னவாயிற்று நம் குடும்ப வாழ்க்கை, கலாசாரத்துக்கு?!

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும், மனைவியும் வேலைக்கு ஓடும் இந்தக் காலத்தில், இருவரும் இருந்து பேச, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வார இறுதி நாட்கள், விடுமுறை என அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு கிடைக்கும் நேரத்திலும், பேச்சு விவாதமாகி, முடிகிறது சண்டையில். சண்டை நீண்டு, கடைசியில் கேட்கிறது விவாகரத்து!

''ஒருவரின் குணம், குற்றம், விருப்பு, வெறுப்பு, ஆசை, விரக்தி... என அனைத்தையும் அவர் மற்றவர்களுக்கு உணர்த்துவது, அவரின் உரையாடல் மூலம்தான். கணவன்மனைவிக்கு இடைப்பட்ட அந்த உரையாடலில், சண்டைகளும் சச்சரவுகளும் இயல்புதான். ஆனால், அதையெல்லாம் மீறி அவர்களின் வார்த்தைகளில் 'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற அன்பு அடிக்கடி உணர்த்தப்பட்டு, உணரப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் தாம்பத்யத்தின் உயிர்!" என்று இல்லற விதி சொல்கிறார் ரினாடா பாரிஸ். இவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியலாளர். மனித உறவுகள் பற்றிய சிறப்புச் சிந்தனையாளர் (Relationship Specialist).

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அமெரிக்காவில் குடும்ப விரிசல்களை சரி செய்து கொண்டிருக்கும் இந்த குடும்பநல ஆலோசகரின் முயற்சியால் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவங்களையெல்லாம் வைத்தே... ஆறு நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் ரினாடா பாரிஸ்.

''உலகம் முழுக்க இருக்கும் தம்பதிகளை அவர்களுக்கு இடையேயான உரையாடலின் அடிப்படையில் ஐந்து வகைகளுக்குள் அடக்கி விடலாம். நீங்கள் எந்த வகை என்பது, உங்கள் சுயமதிப்பீட்டுக்கு..." என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் ரினாடா, ஒவ்வொரு வகையையும் பிரித்து மேய்கிறார். அவரின் வார்த்தைகள், தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே மனோ ரீதியாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும் 'ரொமான்ஸ் லென்ஸ்' என்றே சொல்லலாம்.

'அமைதித் தம்பதி' (The Silent Couple): இதுதான் முதல் வகை. அமைதி என்றதும் உம்மணாமூஞ்சி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் நிறைய பேசுவார்கள்!

'பார்த்தீங்களா... எல்லை தாண்டி இந்தியாவுக்குள்ள சீனா பண்ற அட்டகாசத்தை..!'

'சுற்றுச்சூழல் பத்தி அருந்ததிராய் எழுதியிருக்கற அந்தப் புத்தகத்தைப் படிச்சீங்களா?'

இப்படி உலக நடப்புகளை எல்லாம் பேசித் தீர்ப்பார்கள். ஆனால், தங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்!

'ஏன் டல்லா இருக்கிறே? எதாவது பிரச்னையா?' என்றெல்லாம் அக்கறையாக விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும், 'ஒண்ணுமில்ல' என்று சொல்லிவிட்டால், 'சரி ஏதோ பர்சனல் (!) பிராப்ளம் போல' என்று விட்டுவிடுவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால், ஆத்மார்த்த புரிதலோ, அன்போ இருக்காது. 'வீட்டில் நமக்கு ஒரு துணை உண்டு' என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்... அவ்வளவுதான்!

'சண்டையைத் தவிர்க்கும் தம்பதி' (The Argument -Avoiding couple): இது இரண்டாவது வகை. 'சரி விடும்மா... நீ சொல்றபடியே பண்ணிடலாம்!' என்பது இந்த வகை தம்பதிகளின் உரையாடல் முடியும் புள்ளி. 'தேவையில்லாம எதுக்குச் சண்டை' என அடுத்தவர் சொல்வதை ஒப்புக் கொள்வது, அல்லது ஒன்றுமே பேசாமல் மௌனமாகி விடுவது இவர்களின் வழக்கம். எனவே, மனதிலிருப்பதை வெளிப்படையாக, அந்நியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள். திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலன்டாகிவிடுவார்.

சண்டைக் கோழி தம்பதி (The Argument-Avoiding Couple): 'எப்போ சண்டை வரும்' என்று காத்திருக்கும் மூன்றாவது வகை. 'சாப்பாட்டுல ஏதோ குறையுதே...' என்று எதார்த்தமாகச் சொன்னாலும், 'உங்க அம்மா சமைச்சா மட்டும்தான் உங்களுக்குப் புடிக்கும்' என்று சீறுவார்கள். பூதக் கண்ணாடி போட்டு தன் பார்ட்னரிடம் குற்றம் கண்டிபிடித்து சண்டை பிடிக்கும் சீரியஸ் கேஸ் இவர்கள். பெரும்பாலும் இவர்களின் உரையாடல்கள் மனக்கசப்பில்தான் முடியும். இவர்கள் பெரும்பாலும் நிம்மதியின்றி மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்£ர்கள்.

'நட்புத் தம்பதி' (The Friends/Partners Couple): இவர்கள் நான்காவது வகை! நல்ல நட்புடன் அலுவலகம், குடும்பம் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷ§வல் கப்பிள் என்று இவர்களைச் சொல்லலாம். ஆனாலும், இவர்களுக்கிடையே அழுத்தமான குடும்ப உறவு, தாம்பத்ய நெருக்கம் இருக்காது. இருந்தும், வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது.

'நெருக்கமான தம்பதி' (The Fully Intimate Couple): இவர்கள் ஐந்தாவது வகை. 'இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்' என்பதுவரை வெளிப்படையாக பேசுவார்கள். எந்த விஷயத்தையும் ஒருவருக்கு ஒருவர் மறைக்க மாட்டார்கள். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும்தான் இதன் ஹைலைட். அதனாலேயே ஆழமான குடும்ப உறவும், புரிதலும் இவர்களுக்கிடையில் இருக்கும். சொல்லப்போனால், இப்படி வாழ்வதற்கு அதிக பக்குவமும், அன்பும் தேவை. மிகச் சில தம்பதிகள்தான் இந்த வகைக்குள் வருவார்கள்!

இப்படி வகைப்படுத்தும் ரினாடா பாரிஸ், அனைவரும் இதில் ஐந்தாம் வகைக்கு முன்னேறுவதற்காக, தங்களுக்கு இடையேயான உரையாடலை அந்நியோன்யமாக எப்படி ஆக்கிக் கொள்ளலாம் எனபதற்கும் அற்புதமான ஆலோசனைகளையும் சொல்கிறார். அவை

முதலில், கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசும் பழக்கம் வரவேண்டும்.

உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம், மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்கவேண்டும். 'நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று நின்றால், நோ யூஸ்!

பொறுமையும் அவசியம். உங்கள் பார்ட்னர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். க்ளைமாக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா?! எனவே, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, நடுவில் குதிக்காதீர்கள். எந்த முடிவையும் இருவரும் கலந்து பேசி எடுங்கள்!

உங்கள் துணையின் நம்பிக்கைகளை, விருப்பு, வெறுப்புகளை புண்படும்படி விமர்சிக்காதீர்கள்.

''உங்களாலதான்..." என்று குற்றம் சுமத்திப் பேசாதீர்கள். குற்றம், அனுமார் வால் போல நீண்டு கொண்டே இருக்கும்!

மனம் திறந்து உண்மையைப் பேசுங்கள். ஒருவேளை நீங்கள் பேசியது பொய் என்று துணைக்கு தெரியவரும் பட்சத்தில், உங்கள் மீதுள்ள நம்பிக்கை சிதைந்து, பின் உங்கள் உரையாடல் எப்போதுமே 'ஹெல்த்தி'யாக இருக்காது!

சின்னச் சின்னப் பாராட்டுகள் மிகவும் முக்கியம்.

உங்கள் துணை பேசுவதை கேட்காதீர்கள் (!)... கவனியுங்கள்! அதென்ன வித்தியாசம்? அவர் பேசும் வார்த்தைகளை காதில் வாங்குவது, கேட்பது; மனதில் வாங்குவது, கவனிப்பது. அவர் என்ன சொல்கிறார், என்ன மனநிலையில் சொல்கிறார், என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் கவனித்தால்தான் புரியும். உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை இந்தக் கவனிப்புதான் சொல்லும்! அதிகம் கவனித்தால், அதிகம் அந்நியோன்யமாவீர்கள்!

அப்போ, கவனிப்போமா..?!

நன்றி : அவள் விகடன்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்




''ஒரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் எந்த காரியம் செய்தாலும் தன் மனைவியின் கருத்தைக் கேட்டே செய்வார். ஒரு நாள், 'நாம் மட்டும்தான் இப்படி மனைவியின் பேச்சைக் கேட்கிறோமா... அல்லது அமைச்சரவையில் உள்ள மற்றவர்களும் கேட்டு நடக்கிறார்களா..?' என்று அரசருக்கு சந்தேகம். அமைச்சர்களிடமே கேட்டுவிட்டார். 'நாங்களும் அரசர் வழியில் மனைவியரின் பேச்சைக் கேட்டே நடக்கிறோம்’ என்றார்கள் அத்தனை பேரும்.

அடுத்து, 'இந்த விஷயத்தில் குடி மக்கள் எப்படி?' என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்த அரசர் ஊரையே கூட்டி, 'மனைவி பேச்சைக் கேட்பவர்கள் எல்லாம் வலதுபுறமும்... கேட்காதவர்கள் இடதுபுறமுமாக செல்லுங்கள்' என்றார். ஒருவர் மட்டும் இடதுபுறமாகச் செல்ல... 'நீங்கள் ஒருவர் மட்டும்தான் மனைவியின் பேச்சைக் கேட்காதவர். பிடியுங்கள் பொற்கிழி பரிசை' என்று நீட்டினார் அரசர்.

உடனே, 'மனைவியின் பேச்சைக் கேட்காமல் வாங்கமாட்டேன்' என்று அவர் சொல்ல, அரசருக்கு கோபம் வந்துவிட்டது. 'பிறகு எதற்காக இடதுபுறமாக சென்றீர்கள்?’ என்று கேட்டார்.

'வீட்டிலிருந்து புறப்பட்டபோது, கூட்டத்தோடு கூட்டமாகச் செல்லாதீர்கள். தனியாக நில்லுங்கள் என்று என் மனைவிதான் சொல்லியனுப்பினார்' என்று பதில் தந்தார் அந்த நபர்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்ற உண்மையை உணர்த்தத்தான் இந்தக் கதையைச் சொல்கிறேன்.

ஆகையால் எல்லோரும் அவங்க அவங்க மனைவி சொல்றத கேட்டு நடக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது


செவ்வாய், 13 அக்டோபர், 2009

எதிர் துருவங்கள்



யாராவது அமுதம் வேண்டாம் என்று சொல்வார்களா? மதுமிதா சொல்வாள்!

ஆம்... 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்பதை தீவிரமாக மனதுக்குள் ஜபித்துக் கொண்டிருப்பவள் மதுமிதா. காரணம்... அவள் கணவன் திவாகர் அவளிடம் அன்பை வெளிப்படுத்தும் அதீத முறைகள்தான்!

"சர்ப்ரைஸ் கொடுக்கறேன்னு சில நாள், நான் எழுந்து கோலம் போடப் போறதுக்கு முன்னாடியே வாசல் கூட்டி, தெளிச்சு வச்சுடறார். தெருவுல பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?"

"எனக்கு பிங்க் கலர் பிடிக்கும்னு சொன்னேன்ங்கறதுக்காக ஒரே நேரத்துல பத்து பிங்க் கலர் சுடிதார் எடுத்துட்டு வர்றார். வேஸ்ட்தானே?"

"அவங்க அண்ணா, அண்ணிகிட்ட... 'நான் என் பொண்டாட்டிய செல்லமா 'ஏஞ்சல்'னுதான் கூப்பிடுவேன்'ங்கறார். மானம் போகுது"

- இப்படியாக நீளுகின்றன மதுமிதாவின் குற்றச்சாட்டுகள்.

"என் பொண்டாட்டி மேல உயிரையே வச்சிருக்கேன். அதை அவகிட்ட நான் பின்ன எப்படிப்பா எக்ஸ்பிரஸ் பண்ணுவேன்?

- டாஸ்மாக் கடை ஒன்றின் பக்கத்து டேபிளில் இருந்த முகம் தெரியாத நபரிடம் திவாகர் உளறிய வார்த்தைகள் இவை. டாஸ்மாக் போகும் அளவுக்குக் குடும்பத்தில் அப்படி என்ன குழப்பம் கும்மி-யடிக்க ஆரம்பித்துவிட்டது?

திருமணமாகி ஐந்து மாதங்-கள்கூட முடியவில்லை. மாலை மயங்கிய நேரங்களில் பூவோடு வந்தவனை, "எதுக்கு இவ்வளவு பூ? கொஞ்சமா வாங்கிட்டு வாங்-கனு சொன்னா... கேட்க மாட்டீங்களே!" என்றாள் மது.

அடுத்த நாள் வருத்தம் மறைத்து, "இன்னிக்கு நான் டின்னர் பண்றேன்" என்று ஆசையாகக் கிளம்பியவனை, "ஆம்பளையா... லட்சணமா இருங்க" என்றாள் கண்டிப்புடன்.

மற்றொரு நாள்... "உனக்குப் பிடிச்ச பாஸந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்" என்றவனை, "ஐயோ... இந்த அஞ்சு மாசமா நீங்க அதையே வாங்கிக் கொடுத்ததுல எனக்கு பாஸந்தியே வெறுத்திடுச்சுப்பா" என்றாள். இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருத்தங்கள் எழுந்தன அவர்களுக்குள். விளைவு... திவாகர் வாங்கி வந்த பூவின் வாசம் சில தினங்களாக தொடர்ந்து மறுக்கப்பட்டது. அவன் டாஸ்மாக் வாசம் பிடிக்கத் துவங்கிவிட்டான்.

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்குமாம். ஆனால், இங்கே அதற்கு நேரெதிர்.

திவாகர் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக குட்டிக்கரணம்கூட அடிக்-கும் ரகம். நண்பர்களுக்கு அவர்களின் குடும்ப போட்டோக்களைத் தேடிப் பிடித்து பிறந்த நாளுக்கு ஃப்ரேம் செய்து கொடுத்து, அவர்கள் சந்தோஷப்-படுவதைப் பார்த்து, தான் சந்தோஷப்படும் பிரியக்காரன். நண்பர்களுக்கே இப்படி சர்ப்ரைஸ்கள் கொடுத்து சந்தோஷப்படுத்துபவன், தன் மனைவிக்காக எத்தனை சர்ப்ரைஸ்களை தேக்கி வைத்திருப்பான்? அதன் வெளிப்பாடுகள்தான் இப்போது மதுமிதாவின் குற்றச்சாட்டுகளாக வடிவெடுத்து நிற்கின்றன.

மதுமிதாவும் அன்பானவள்தான். ஆனால், அவள் வளர்ந்த சூழலில் நிலவிய அன்பு பரிமாறல்கள் அத்தனையும் வேறு ரகம். எப்போதாவது அம்மாவைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் அப்பாவின் அன்பும், கல்யாண நாளில் மனைவிக்கு புடவை வாங்கிக்கொடுத்து 'நல்லாயிருக்கா?' எனும் அண்ணனின் அன்பும்தான் அவள் அறிந்தது.

ஆனால், திவாகர் காட்டும் அன்பு அனைத்துமே இவளுக்கு அதிர்ச்சி ரகம்தான். இருவரையும் ஊர் கூடி உறவு பந்ததில் இணைத்து வைக்க, முதலிரவு அன்று கைகளில் பால் ஏந்தி வந்தவளை, "ஒரு சேஞ்சுக்கு பீர் தரமாட்டீங்களா?" என்று திவாகர் கேலி செய்ய, 'ஐயையோ... ஒரு அயோக்கியன்கிட்ட மாட்டிக்கிட்டோமே' என்று அன்றே பதறிப்போனாள் மது. தொடர்ந்த நாட்களில் சந்தடி சாக்கில் புதுப் பொண்டாட்டியை முத்தமிட துடித்த திவாகரை ரவுடியாகவே பார்த்தாள். அவனின் சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாமே அவளுக்கு திகட்டச் செய்தன. தள்ளித் தள்ளிச் சென்றாள். ஆனால், அது எத்தனை நாளைக்கு நீடிக்கும். அன்று காத்திருந்தது... அவர்களின் இடைவேளைக்கான க்ளைமாக்ஸ்!

திவாகர் மேல் எழுந்த அதிருப்தியை மறக்க, டி.வி. சீரியல் பார்க்க ஆரம்பித்திருந்தாள் மது. சீரியலில் கை தவறி கதாநாயகி காபி டம்ளரை கீழே கொட்டி விட, 'பளார்' என கன்னத்தில் அறைந்தான் அவள் கணவன். மதுவுக்கு திவாவின் நினைவு வந்தது. அன்று ஆபீஸுக்கு கிளம்பியவன், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவள் கைதவறி சாம்பாரை கொட்டிவிட, "அட... சாம்பார்லகூட மார்டன் ஆர்ட் வரைவியா நீ?" என்றபடியே வேறு சட்டை மாற்றிக்கொண்டான்.

அடுத்து ஒரு சீரியல். உடம்பு முடியாமலிருக்கும் தன் மனைவியை என்னவென்றுகூட கேட்காமல் இருந்த அந்த சீரியல் கணவனைப் பார்த்தபோது, இவள் தலைவலிக்கு தைலம் தடவிவிட்ட திவாவின் விரல்களை நெஞ்சம் தேடியது.

இரவு இன்னுமொரு சீரியல். மளிகை வாங்கக் கொடுத்த நூறு ரூபாய்க்கு தன் மனைவியிடம் கறார் கணக்கு கேட்டுக்கொண்டிருந்தான் அந்த சீரியல் ஹீரோ. திருமணம் முடிந்த மாதமே மது பெயரில் பேங்க் அக்கவுன்ட் ஆரம்பித்து தந்த திவாவின் ஞாபகம் மட்டுமல்ல... அவன் சீக்கிரமாக வரும் மாலை நேரங்களில் தன்னைச் சுற்றி சுற்றி வருவது, காதுக்குள் 'ஏஞ்சல்' என்று கிசுகிசுப்பது, உள்ளங்கையில் முதல் முத்தம் வைப்பது என... ஒவ்வொன்றாக அவள் மனதுக்குள் மின்னின.

'எத்தனையோ பெண்கள் கணவனோட அன்புக்காக ஏங்கிக்கிட்டிருக்கும்போது, அன்பே கணவனா கிடைச்ச திவாவை புரிஞ்சுக்காம விட்டுட்டோமே' என்று முழு மனதாக வருந்தினாள் மது. வாசலில் திவாவின் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்தவள், இந்த கணத்துக்காகத்தான் காலமெல்லாம் காத்திருந்தது போல அவனைக் கட்டிக் கொண்டாள்.

"என்ன... மோகினிப் பேய் இன்னும் சாப்பிடாம இருக்கு?!" என்று வழக்கம் போல திவா கிண்டலடிக்க, "ம்ம்... ஜோடிப் பேய்க்காக காத்திட்டு இருக்கு" என்று தானும் அவன் மொழி பேசினாள்!

ஆம்! இங்கே எதிர் எதிர் துருவங்கள் சமபுள்ளியில் மையம் கொண்டுவிட்டன.

சனி, 10 அக்டோபர், 2009

33 சதவீதம்! (சிறுகதை) - ராஜ்கதிர்


திருமணத்திற்கு பின் நான் சந்திக்காத என் தோழியை, சில வருடங்களுக்கு பிறகு சந்தித்தே தீர வேண்டிய சூழ்நிலை... நான் கல்யாணம் செய்து கொள்ள போவதால் உருவானது. ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறகு, ஒரு ஆடவரின் நட்பை தொடர்வதில் பல சிக்கல்கள் உண்டு... அவளின் கணவனின் புரிதலில் உள்ளது. ஆனால், கணவனுக்கு, தன் நட்பை புரிய வைப்பது மட்டுமல்ல, தன் எண்ணத்தை, அதன் உறுதியை தெளிய வைக்கக்கூடிய அபார திறமை படைத்தவளே என் தோழி.
என் திருமண அழைப்பிதழ் கொடுக்க, அவர்கள் வீடு நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் நான்கு மணி நேர பயணம் செய்ய வேண்டும். ரயிலில் சக பயணிகள் அனைவரும், நிம்மதியாக உறக்கத்தில் மூழ்கியிருந்தனர். கண் மூடியவாறு சிந்திக்கலானேன்... மூடிய இமைகளுக்குள் என் வருங்கால மனைவியின் முகம், என் இதயத்தை மகிழ்வித்தது. என் மனைவியாக போகிறவளோடு, பலமுறை மொபைல் போனில் பேசி பழகியதில், அவள் என்ன மாதிரி எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேனோ, அதே அலைவரிசையில் செட்டாகி இருந்தாள்.பெண்கள் பத்தாம்பசலிகளாக இல்லாமல், சற்று துணிவான எண்ணம் கொண்டிருக்க வேண்டும்; எதற்கும் பயப்படாமல் போராடும் குணமும், தன் எண்ணத்தை உறுதியோடு வெளிப்படுத்தி, தன் மீது தவறு இல்லாத பட்சத்தில் எதற்காகவும், யாருக்காவும், தன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில், தேவையற்ற பிடிவாத குணமும் கொண்டிருக்காமல், அப்படியிருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று சில எண்ணங்கள் கொண்டிருந்தேன்.


நான் சந்திக்க இருக்கும் தோழியும் அவ்வித எண்ணங்களோடு இருந்ததால், எங்கள் நட்பு உண்டானது. அந்நாள் ஒரு குடியரசு தினம். அன்று மதியம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தபோது, ரோட்டில் ஒரு பெண்ணின் சப்தம். கதவை திறந்து பார்த்தால், கையில் செருப்போடு, ஒரு இளைஞனை அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
சற்று தள்ளி லேடீஸ் சைக்கிள், கீழே விழுந்து கிடந்தது. சைக்கிள் கேரியரில் கல்லூரி புத்தகம், டிபன் பாக்ஸ் இருந்தது. வெள்ளை நிற பாவாடை, தாவணி அணிந்து, இந்திய தேசிய கொடி குத்தியிருந்தாள்; கண்களில் கோபக்கனல் தெரித்தது.
"மடப்பயலே செருப்பு பிஞ்சிரும்டா...' என்று சொல்லி அடித்தே விட்டாள். அந்த இளைஞன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒடியே விட்டான்.


சில மாதங்களுக்கு பிறகு, நான் பயிலும் இந்தி வகுப்பில், அந்தப் பெண்ணும் சேர்ந்தாள். தயங்கி, தயங்கி பேச துவங்கினேன். சக மாணவனாக நினைத்து தான் பேசியதாக எண்ணினேன்; ஆனால், அவள் எந்த ஆடவனுடனும் வெகு சகஜமாக உரையாட கூடியவள் தான் என்று பின்னர் தெரிந்தது. அந்நிகழ்ச்சியை பற்றி கேட்டவுடன், "அந்த ராஸ்கல் என்கூட பேசியிருந்தாலோ, என்னை கிண்டல் பண்ணி இருந்தாலோ கூட எனக்கு கோபம் வந்திருக்காது. பொம்பளைய போகப் பொருளாத்தான் பார்க்க தெரிஞ்சிருக்கான்; நினைக்கிறான். சிரஞ்சில தண்ணி நிரப்பி, என் இடுப்புல அடிச்சான். கடவுள் பொம்பளைகள தன் காம உணர்வை தீர்த்துக்கிறதுக்காக படைச்சதா தான் எல்லா ஆம்பளைகளும் நினைக்கிறாங்க...
"சக மனுஷியா பார்க்காம, ஒரு அடிமையாத்தான் பெண்களை வைத்திருக்காங்க. உங்களுக்கு தெரியுமா... என் அம்மா கூட பேசி, நாலு மாதமாகிறது. அன்னிக்கு தெரு முனையில நின்னு ஒரு பையன் கூட பேசிக்கிட்டு இருந்தேன்னு, "எப்ப பாரு ஆம்பளை மாதிரி நெஞ்சை நிமித்துகிட்டு நடக்கிறேன்!'ன்னு சப்தம் போட்டாங்க.
"பெண்கள் என்றாலே, அடக்க ஒடுக்கமாத்தான் இருக்கணும்ன்னு சட்டமா என்ன? இந்த உலகத்தில், எங்க விருப்பப்படி நல்லவிதமா, சுதந்திரமா வாழ எங்களுக்கு உரிமை இல்லையா?
"என் பக்கத்து வீட்டு பையன், எனக்கு வைச்ச பெயர், "திமிரு பிச்சவ!' ஏன் தெரியுமா? அந்த செருப்படிபட்டவனோட நண்பன் இவன். என் அண்ணன், எனக்கு சூட்டிய நாமம், "அடங்காப்பிடாரி!' அவன் சட்டையை நான் துவைச்சிப் போடலையாம்.2009 வருஷம் முடியப்போது, இன்னும் எதுவும் மாறலைங்க. பாருங்க, 33சதவீதம் கேட்கிறாங்க. பூஜ்ய சதவீத உரிமையே பெண்களுக்கு இல்லேன்னு போன பிறகு...'


"ஏன்,எல்லாத்தையும் நீங்க மாத்துங்களேன்...'
"மாத்தத்தான் போறேன். என் சக தோழிகளை சேர்த்து, பெண்ணுரிமைக்காக போராடத்தான் போறேன்; என் வாழ்நாள் லட்சியமாவும், சபதமாகவும் எடுத்து செய்யத்தான் போறேன், பாருங்க!' "சரிங்க, வாழ்த்துக்கள்... பெரியாரம்மா...' என்றதற்கு, சிரித்து கொண்ட அந்த தோழியை, சந்திக்க தான் இந்த ரயில் பயணம். பணிநிமித்தமாக நான் வெளிநாடு சென்று விட்டதால், சில வருடங்களாக என் தோழியை நேரில் சந்திக்கவில்லை. அவர் திருமணத்திற்கு கூட நான் செல்லவில்லை; வாழ்த்து மட்டுமே அனுப்பினேன். ஒருமுறை போனில் பேசும் போது, தற்போது வசிக்கும் இடம் மற்றும் அவர் கணவரின் பணிகுறித்து கேட்டறிந்தேன்.
சென்னை வந்து, நண்பன் தங்கியிருக்கும் ரூமில் குளித்து உடைமாற்றி, அவனை அலுவலகத்தில் இறக்கி விட்டு, வண்டியில் என் தோழி குடியிருக்கும் ஏரியா நோக்கி சென்றேன்.
ஒரு கடையில் பழங்கள், வெற்றிலை பாக்கு வாங்கி கொண்டிருந்தபோது, எதிரே உள்ள ஓட்டலை அப்போது தான் கவனித்தேன். அந்த ஓட்டலிலிருந்து வெளியே வந்தது என் தோழியே தான்.


என் தோழியின் உடல் சற்று கனத்திருந்தது. முகமெல்லாம் சற்று புஷ்டியாக, கன்னம் உப்பியிருந்தது. கல்யாணமாகி, குழந்தை பெற்ற பிறகு, பெண்கள் உடலமைப்பில் ஏற்படும் மாற்றம், என் தோழியிடத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் என் தோழியின் நடையில், ஒரு மாற்றம்; வியந்தேன். ரோட்டில் ஒரு பெண்ணை அழைப்பது சரியல்ல என்பதால், அவர் செல்லும் வரை காத்திருந்து, வண்டியை மெதுவாக அவர் பின்னே செலுத்தினேன்.
ஒரு கையில் கூடை நிறைய காய்கறிகள், மறு கையில் ஓட்டலில் வாங்கிய பார்சல் என, நெற்றியில் வடியும் வியர்வையை கூட துடைக்க சிரமப்பட்டவாறே, மெதுவாக நடந்து கொண்டிருந்தார். ரோட்டின் ஓரத்தில் இருந்த பெட்டி கடை சென்று, அந்த கடையில் ஏதோ வாங்கி, தன் நடையை தொடர்ந்தார். அவர் வீடு செல்லும் வரை வண்டியை மெதுவாக செலுத்தி, காம்பவுன்ட் கேட்டை திறந்ததும், வண்டியை வேகப்படுத்தி கேட் அருகே நின்று, ""ஹலோ...'' என்றேன்.
"யாரோ?' என பார்த்தவர், ""என்னங்க... என்னை தெரியல...?'' என்ற என் குரலை கேட்டதும், ""ஓ... நீங்களா, என்ன இவ்வளவு தூரம்?'' என்றார். ""ஒரு நல்ல விஷயம் தான். உங்கள பார்த்து சொல்லணும்ன்னு தான் வந்தேன்.''
""சொல்லுங்க...'' என்னை அப்படியே வெளியே நின்னே பேசி அனுப்பி விடலாம் என்று நினைத்திருப்பார் போல. ""ஏங்க, இது உங்க வீடு தானே? உள்ளே கூப்பிட மாட்டீங்களா?''
ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தவர், ""சரி, வாங்க...'' என அழைத்தார்.
""உங்க நம்பருக்கு போன் பண்ணேன், கிடைக்கலையே...'' என்றவாறு வீட்டினுள் சென்றதும், ""ஏய், பொம்பள... டிபன், சிகரட் வாங்கிட்டு வந்திட்டியா?'' என்ற கரகர குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து, ""ஏய், பொம்பள... ஸ்கூலுக்கு நேரமாச்சு. எனக்கு யூனிபார்ம் மாட்டிவிடு...'' என்ற ஒரு மழலை குரல். கரகர குரல் என் தோழியின் கணவர் குரல் என்றும், மழலை குரல் அவர் குழந்தையின் குரலாக இருக்க கூடுமோ என, யோசித்துக் கொண்டே அந்த ஹாலிலே நின்று கொண்டிருந்தேன்.
ரூமிற்குள் சென்று வந்த தோழி, நான் நின்று கொண்டிருப்பதை பார்த்து, ""அங்க உட்காருங்க...'' என்று இருக்கையை காண்பித்துவிட்டு, தொலைக்காட்சியை ஆன் செய்து, உள்ளே சென்றார். அரைமணி நேரம், நான் அங்கே காத்திருந்தேன். என் தோழியே பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள். அவள் கணவருக்கும், மகனுக்கும் டிபன் கொடுத்து, மகனுக்கு உடை மாற்றி, தன் கணவர் சிகரட் பற்ற வைக்க லைட்டர் தேடி, சிகரட் பற்ற வைத்து, கணவரின் பாதணியை மாட்டிவிட்டு, தன் மகனுக்கு ஷூவை மாட்டினாள். லன்ச் பேகை எடுத்து வந்து, தன் மகனை அனுப்பிவிட்டு உள்ளே வந்த சில நொடிகளில், ""ஏய், பொம்பள...'' என குரல் கேட்டதும், படுக்கையறையில் உள்ள ஒரு பைலோடு வெளியே வந்து, தன் கணவரிடம் கொடுத்து விட்டு வந்தார். வீட்டிலிருந்து வெளியே போகும் போது, என் தோழியின் கணவர், ""ஹலோ, வாங்க...'' என்று சென்றது, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது; எங்கே பேசாமலேயே சென்று விடுவார் என்று தான் நினைத்திருந்தேன்.


""ஒரு நிமிஷம்...'' என்று கூறி, ரூமிற்குள் சென்று ஒரு டம்ளரோடு வந்து, ""இந்தாங்க, இதை குடிங்க...'' என்று கொடுத்தது கூட என்னை வியப்படைய செய்தது.
""சரி, இப்ப சொல்லுங்க. என்ன விசேஷம்?'' என்று கேட்டவாறு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
""என்னங்க... உங்க நடவடிக்கையில, முற்றிலும் மாற்றம் தெரியுதே. நான் பார்த்து வியந்த, பெருமைப்பட்ட யுவதியா நீங்க தெரியலையே, ஏன்?''
""அத விடுங்க... என்ன ரொம்ப முக்கியமான விஷயம்?''
""எனக்கு கல்யாணம்ங்க. அதான், உங்கள நேரில பார்த்து, அழைப்பிதழ் கொடுத்து போலாம்ன்னு வந்தேன். நிறைய அதிர்ச்சியா இருக்குங்க, இங்க வந்த பிறகு. நான் உங்க வாழ்க்கையை வேற மாதிரி கற்பனை பண்ணி வைச்சிருந்தேன். நீங்களும் ஒரு சராசரி இந்தியப் பெண்ணா இருக்கிற மாதிரி தான் தெரியறது...''
""கண்டிப்பா... உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியாது; என் வாழ்த்துக்கள். அப்புறம், நீங்க சொன்ன அந்த சராசரி இந்தியப் பெண்ணால தான் நம்ம இந்திய நாட்டோட கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் எல்லாம் காப்பாற்றப்படுது.


""நம்ம நாட்டு பெண்ணுக்கு கல்யாணத்திற்கு முன் பெத்தவங்களால அவுங்க சுதந்திரம் பறிக்கப்படுது; கல்யாணத்திற்கு பிறகு கணவனால. எப்பவும் இந்த நாட்ல பெண்களுக்கு சுதந்திரமோ, தனி மனித உரிமையோ இல்லைங்க; அவர்கள் விருப்பம் போல் பெண்களால வாழ முடியாது; வாழவும் விடமாட்டாங்க.
""மீறினால், குடும்ப கட்டமைப்பு சிதறும். நான் தனித்து தான் வாழணும். ஏகப்பட்ட களங்கத்தை சுமத்திருவாங்க. நான் சாப்பிடுறேனோ, இல்லையோ, என் கணவரையும், பிள்ளையும் நான் கவனிக்கணும்; என் கணவர் சொல்ற வேலையை ஒரு அடிமை போல் செய்யணும்.
""பெண்ணுரிமை... பெண் சுதந்திரம்ன்னு நான் பேசிக்கிட்டு இருந்தேன்னா... நான் வாழாவெட்டியாத்தான் வாழ நேரிடும். இது அனுபவப்பூர்வமா நான் கண்ட உண்மை. என் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு, நான் ஒரு மாதர் சங்கத்தில உறுப்பினராகி, பெண்ணுரிமை பேசிட்டு திரிஞ்சதால, எங்க தெருவுல, என்னை ராங்கிக்காரியா ஆக்கிட்டாங்க.
""என்னை பெண் பார்க்க வந்த இருபத்தி ஏழு மாப்பிள்ளைகிட்ட என்னை பற்றி என்னென்னமோ சொல்லி பயமுறுத்திட்டாங்க. எங்க குடும்பத்தால அத தாங்க முடியல. என்னை கொஞ்சம், கொஞ்சமா வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னை வேற ஒரு ஊர்ல கொண்டு போயி வைச்சு, ரகசியமா எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க.
""என் கணவரும் என்னை அடக்கி ஆள நினைச்சதால, அடிக்கடி எங்களுக்குள்ள சண்டை வரும். கடைசியா, ஒரு தடவை என் உரிமைக்காக சண்டை போட்டு, ஒரு வருஷம் நான், வாழா வெட்டியா இருந்தேன். ஆம்பளைகள், பெண்ணை அடிமையா வச்சிக்கிறதல தான் குறியா இருக்காங்க; பெண்ணுரிமை பற்றி வாய் கிழிய பேசுற ஆண்களோட வீட்ல கூட, அவன் பெண்டாட்டியை அடிமையாத்தான் வைச்சிருக்கான்.''


""எல்லா ஆண்களும் அப்படியில்லைங்க... பெண்கள சரிசமமா நினைக்கிற என்னை போல சிலர், இருக்கத்தான் செய்றாங்க...''
""இப்ப அப்படி தான் சொல்வீங்க; நாளைக்கு உங்க பெண்டாட்டி உங்கள எதிர்த்து பேசினா, நீங்க சொன்ன வேலையை செய்யாம போனா, அவளை வெறுக்க ஆரம்பிச்சிருவீங்க. ஏன், அவள டைவர்ஸ் கூட பண்ண துணிஞ்சிருவீங்க. ஒரு பெண் வாழவெட்டியா பிறந்த வீட்ல இருக்கிறது ஆயுள் தண்டனையை விட பெரிய கொடுமைங்க...
""என்னைப் பற்றின கவலையில, எங்க அப்பாவுக்கு உடம்பு ரொம்ப படுத்த ஆரம்பிச்சிருச்சு. என் கால்ல விழாத குறையா, "மாப்பிள்ளை கூட அனுசரிச்சு வாழ முயற்சி செய்!'ன்னு கெஞ்சினார். என் தங்கச்சி ஒரு படி மேலே போய், "கொஞ்சம் விஷம் இருந்தா, கொடுத்து என்னை கொன்னுடுக்கா...'ன்னு சொன்னாள்.
""என்னால அவளுக்கு கல்யாணம் ஆக மாட்டேங்குதுன்னு அழறா... அந்த ஒரு வருஷம் நரக வேதனை அனுபவிச்சேன். இந்த நாட்ல பெண்களுக்கு எங்கங்க சுதந்திரம், உரிமை இருக்கு? என்ன தான் பெண்கள் பெரிய படிப்பு படிச்சிருந்தாலோ, பெரிய பதவியில இருந்தாலோ அவுங்க ஆண்களுக்கு பின்னாடி தான் இருக்காங்க...
""ஒரு பெண் கலெக்டரா இருந்தா கூட, பின்னாடி நின்னு அவள இயக்குறது ஒரு ஆண். ஏன், ஒரு பெண் முதல்வர் கூட, தன்னிச்சையா ஏதாவது செய்ய முடிஞ்சதா? அவள் புருஷன் தானே எல்லாம் பார்த்தார். ஒரு பாஸ்போட் அதிகாரியா ஒரு பெண் இருந்தாங்களே, அவர் ஊழலுக்கு பின்னால இருந்த அவர் புருஷன் ஒரு ஆண் தானே?


""தப்பு செய்யற பெண்களுக்கு பின்னால நிக்கிறது கூட ஒரு ஆண் தான். பெண்கள் தன்னிச்சையா இயங்க முடியாது.பெண்கள் வேலைக்கு போறது கூட, அவள் சுதந்திரத்துக்காக இல்லைங்க; அவள் கொண்டு வர்ற பணத்துக்காக தான். ஒருவேளை, கோடி, கோடியா சொத்து, பணம் வைச்சிருக்கிற பெண்ணுக்கு வேணா தனி உரிமை, சுதந்திரம் இருக்கலாமோ, என்னவோ...?
""என் வீட்டுக்காரர் என்னை, "ஏய் பொம்பள'ன்னு தான் கூப்பிடுவார்; அவரைப் பார்த்து, என் மகனும் கூப்பிடுறான். அவர் அப்படி கூப்பிடுறத செல்லமா அழைக்கிறதா நான் நினைச்சிக்குவேன். அவுங்க அப்பா, அவர் அம்மாவை அப்படித்தான் கூப்பிடுவாராம்.
""நம்ம பாரத நாட்டில, பெண்கள் இப்படித் தான் இருக்கணும்ன்னு தலைவிதிங்க; இதை யாராலும் மாத்த முடியாது. நான் ஒரு சராசரி இந்தியப் பெண்ணா மாறினதுல என்னங்க ஆச்சரியம். தயவுசெய்து நீங்க, உங்க மனைவியை ஒரு அடிமையா நடத்தாம இருக்க, முயற்சி செய்யுங்க, என்ன?'' என்றார். தொலைபேசி ஒலிக்க, எழுந்து சென்று பேசிவிட்டு வந்தார். ""என் வீட்டுக்காரர்தான்... நீங்க போயிட்டீங்களா?ன்னு கேட்டார்.''
நான் வாங்கி வந்த பழங்களையும், அழைப்பிதழையும், என் தோழியிடம் கொடுத்து, ""கல்யாணத்துக்கு அவசியம்
வர முயற்சி செய்யுங்க...'' என்று, விடைபெற்று வெளியே வந்தேன்