செவ்வாய், 12 அக்டோபர், 2010

வானவில் தரைதொடல் தகுமோ?--தஞ்சாவூர்க்கவிராயர்

வானத்தின் மீது ஒரு பெரிய குடையைக் குபுக்கென்று விரித்த மாதிரி இருட்டிக்கொண்டு குவிந்தன மேகங்கள்.

இருட்டிக்கொண்டு வருகிற மேகங்களைப் பார்க்கும்போது, எங்கோ படித்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கைதான் ஞாபகத்துக்கு வரும்.

மேற்கு வங்காளத்தில் காமார்புகூர் என்ற சிற்றூர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை வயல்கள். வரப்பின் மீது ராமகிருஷ்ணர் போகிறார். மேலே வானம் கும்மென்று இருட்டிக்கொண்டு வருகிறது. அண்ணாந்து பார்க்கிறார். மேகங்களின் இருட்டுப் பின்னணியில் வெள்ளை வெளேர் என்ற கொக்குகள் கூட்டமாகப் பறந்து போகின்றன. அந்தக் காட்சி தந்த பரவசம் தாங்காமல், அப்படியே மூர்ச்சையாகி விழுந்துவிடுகிறார். சாதகம் ஏதும் செய்யாமலே சமாதிநிலை அடைந்துவிடுகிறார் ராமகிருஷ்ணர்.



பரமஹம்சர், தெய்விகப் புருஷர். நான் வெறும் அரசாங்க குமாஸ்தா. அவருக்கு மழை, இறைவனைக் காட்டியது. எனக்குத் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் வராந்தாவைக் காட்டியது.

சடசடவென மழைத் துளிகள். ஓடிப் போய் ஒதுங்கினேன். திடீரென்று பெருமழை பிடித்துக்கொண்டது. என்னைப்போலவே அங்கே மழைக்கு ஒதுங்கிய மனிதர்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் மழையை ரசிக்கிறவர்களாகத் தெரியவில்லை.


தாங்கள் பார்க்க வேண்டிய வேலையை மழை வந்து கெடுத்துவிட்ட எரிச்சல் மண்டிய முகங்கள். மழை, அங்கே நிற்கிறவர்கள் மனதில் என்னைப் போலவே பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டிருக்குமா என்று தெரியவில்லை.


ஒரு மழை நாளில்தான் அம்மா செத்துப்போனாள். வானத்தில் இருந்து என் கண்ணீர் தாரைதாரையாக ஊற்றியது. ஒரு மழை நாளில்தான் எங்கள் வீட்டில் தங்கச்சிப் பாப்பா பிறந்தது. அடை மழை. தரையில் சாக்கை விரித்து அதன் மீது பழம்புடவையைப் போட்டு தங்கச்சிப் பாப்பாவைப் படுக்கவைத்தார் அப்பா. கொட்டும் மழையில்தான் ரிசல்ட் பார்க்கப் பள்ளிக்கு ஓடினேன். நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். சொட்டச் சொட்ட மழையில் நனைந்துகொண்டே வந்தேன். சந்தோஷ மழை!

மழைக் கால மதியம் ஒன்றில்தான் உதயராணி என்னைப் பார்த்துச் சிரித்தாள். மழைதான் அவள் மனசில் காதலை விதைத்து இருக்க வேண்டும். சிரித்ததோடு நின்றுவிடாமல் கையில் ஒரு காகிதத் துண்டைத் திணித்துவிட்டும் போனாள்.

அதில் ஒரே ஒரு வரிதான் இருந்தது. 'நாளை காலேஜுக்கு வரும்போது அந்தக் கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டு வா.'

20 வருடங்கள் ஓடிவிட்டன. ''எப்பப் பாரு கட்டம் போட்ட சட்டைதானா? சரியான பைத்தியம்!'' - ஒவ்வொரு தடவை புதுச் சட்டை வாங்கும்போதும் எரிச்சல் அடைவாள் என் மனைவி.

இந்த மழை, உதயராணி வசிக்கும் ஊரிலும் பெய்யுமா? என்னைப்போலவே அவளும் இந்த நிமிஷம் மழையை ரசித்துக்கொண்டு இருப்பாளா... கூடவே, என் நினைவையும்?

மழை நாளில்தான் என் வாழ்வின் அசாதாரண சம்பவங்கள் நிகழ்கின்றன. அன்றும் அவ்விதமே நேர்ந்தது.

தற்செயலாகத்தான் திரும்பினேன். வங்கியின் பெரிய கண்ணாடித் தடுப்பு சாலையைப் பார்த்தபடி இருந்தது. உள்ளே நேர்த்தியான மேலாளர் அறை. நீல வண்ணச் சுவர்கள். தள்ளிவிடப்பட்ட திரைச் சீலைகளைத் தாண்டி, சுழல் நாற்காலியில் ஒரு பெண்மணி. களையான முகம். ஆனால், எங்கோ பார்த்த முகம். அவரும் என்னைப் பார்ப்பதுபோல் ஒரு பிரமை!

அவர் தற்செயலாகப் பார்த்து இருக்கலாம். நாமும் பார்த்தால் இங்கிதமாக இருக்காது என்று முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

சாலைக்கு மறுபுறம் இருந்த டெலிபோன் பூத்தில் என் பார்வை லயித்தது. ஓர் இளம்பெண் டெலி போனை முகத்தோடு ஒட்டவைத்துக்கொண்டு சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள். கண்ணாடித் தடுப்பு வழியே அழகான புகைபடிந்த ஓவியமாகத் தெரிந்தாள். கையில் நிறைய ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றிவைத்திருப்பாள் போல. ஒவ்வொரு நாணயமாகப் போட்டுக்கொண்டே இருந்தாள். மறுபுறம் பேசுகிறவன் கையில் அந்த நாணயங்கள் சிரிப்புச் சிரிப்பாக மாறி விழுந்து கொண்டே இருப்பதுபோல் எனக்குள் ஒருநினைவுத் திருவிழா.

சட்டென்று, 'சார் ஒரு நிமிஷம்' என்ற குரல் கேட்டது. திரும்பினேன். வெள்ளைச் சீருடை அணிந்த வங்கிச் சிப்பந்தி.

''உங்களை மேடம் உள்ளே கூப்பிடறாங்க!'' - சிப்பந்தி, வங்கி மேலாளர் கேபினைச் சுட்டிக் காட்டினார்.

'என்னை ஏன் அந்தப் பெண்மணி அழைக்க வேண்டும்?' - நான் தயங்கியபடியே சிப்பந்தியைப் பின்தொடர்ந்து வங்கி மேலாளர் அறைக்குள் நுழைந்தேன்.

மேலாளர் எழுந்து நின்று, ''வணக்கம் சார்! உட்காருங்கள்!'' என்றதும் எனக்கு ஒன்றும் புரிய வில்லை. உட்கார்ந்தேன்.

''என்ன சாப்பிடுறீங்க... காபியா, டீயா?'' சிரித்த படியே கேட்டார்.

''மேடம், நீங்க என்னை வேறு யாரோன்னு...''

''யாரோவா, நீங்க மிஸ்டர் ராமகிருஷ்ணன் தானே?''

புன்னகைத்தேன். ''நான் ராமகிருஷ்ணன்தான். உங்களைத்தான் சட்டென்று என்னால்...''

அதற்குள் அழகான கப் அண்ட் சாஸரில் காபி வந்துவிட்டது.

''முதலில் காபி சாப்பிடுங்கள்.''

நான் காபி சாப்பிடுவதைப் புன்முறுவலுடன் ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார் அந்தப் பெண்மணி. எனக்குக் கூச்சமாக இருந்தது.

''நான் கலாராணி. உதயராணியின் தங்கை. இப்ப வாவது ஞாபகம் வருதா சார்?''

மழை, மண் வாசனையை ஞாபகப்படுத்துவது போல் இருந்தது. சிரித்துவிட்டேன். ''நம்பவே முடி யலீங்க! உதயாவின் கையைப் பிடிச்சுக்கிட்டு வரு வீங்க. ஏழாவதோ, எட்டாவதோ படிச்சுட்டு இருந் தீங்கல்ல..?''

''வா, போன்னே சொல்லுங்க. உங்களுக்கு அந்த உரிமை இருக்கு. நீங்க பார்த்த அதே எட்டாங்கிளாஸ் பொண்ணுதான். இப்படி மாறிட்டேன். உங்க சாயல் மாறவே இல்லை சார்! அப்புறம் இந்தக் கட்டம் போட்ட சட்டை!''

இரண்டு பேரும் சேர்ந்து சிரித்தோம். ''எல்லாம் ஞாபகம் வெச்சுக்கிட்டா இருக்கீங்க?''

''எப்படி சார் மறக்க முடியும்? அக்காவோட விஷயம் எல்லாம் எனக்குத் தெரியும்!''

நான் தலையைக் குனிந்துகொண்டேன்.

''உதயாவோட கையைப் பிடிச்சுக்கிட்டு எங்க பார்த்தாலும் வருவீங்கதானே?'' என்றேன்.

''அவதான் என்னை இழுத்துக்கிட்டு அலைவா! இதுல கொடுமை என்னன்னா, உங்களைப் பார்க்க வும் பெரிய கோயில், பூங்காவுக்கெல்லாம் என்னைக் கூட்டிட்டு வருவா!''

''ஆமாம்!'' - நெளிந்தேன்.

''நான் ஒருத்தி நடுவில் இருக்கேன்னு கவலையே படாம ரெண்டு பேரும் பேசிட்டிருப்பீங்க. ஒரு மாதிரி தலையைச் சாய்ச்சுக்கிட்டே நீங்க பேசறதைக் கேட்கக் கேட்க... ஆசையா இருக்கும். ஆனா, நீங்க சொல்றதைக் காதுல வாங்கிக்காத மாதிரி அக்கா பெரிய கோயில் பிராகாரத்துல புல்லைப் பிச்சுப் பிச்சுப் போட்டுக்கிட்டு இருப்பா!''

கலாராணியின் விழிகளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். தொடர்ந்தார்... ''இப்பவும்தான் இருக் குதுங்களே பசங்க. பஸ்ஸிலும் ரயிலிலும் இவங்க அடிக்கிற லூட்டி... பார்க்கும்போதே பத்திக்கிட்டு வருது. பப்ளிக் பிளேஸ்ல இப்படிப் பண்றமேன்னு துளிகூட லஜ்ஜை இல்லாம...'


கலாராணியின் பேச்சைக் கேட்டு எனக்குள் மின்னல்கள். ''நீங்க ஜென்டில்மேன் சார்! அக்கா கையைக்கூடத் தொட்டது இல்லை. ரொம்ப அழகா கவிதை எழுதிஅக்காகிட்ட காண்பிப்பீங்க. உங்க ரசிகை சார் நான். உங்க கவிதைகள், கடிதங்களை எல்லாம் அக்காவுக்குத் தெரியாம எடுத்துப் படிச் சுடுவேன். நீங்க எழுதினது லவ் லெட்டர் மாதிரியே இருக்காது. ரொம்ப டீஸன்ட்டா இருக்கும். ஆனா, என்னை நீங்க கண்டுக்கவே மாட்டீங்க. என்னை ஒரு அச்சுப்பிச்சுன்னு நினைச்சிருப்பீங்க!''

''அப்படில்லாம் இல்லீங்க.''

''அக்கா உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக் கும்னு நான் ஆசையா இருந்தேன். நீங்க எங்க குடும் பத்துல ஒருத்தரா ஆயிடுவீங்கன்னு நினைச்சேன்!''

''என்ன பண்றது? நான் கொடுத்துவெச்சது அவ்வளவுதான்!'' - மெதுவாகச் சொன்னேன்.

''நோ சார்! எங்க அக்காவுக்குதான் கொடுப்பினை இல்லை. பெரிசா தியாகம் பண்றதா நினைப்பு அவளுக்கு. அப்பா காட்டினவனுக்குக் கழுத்தை நீட்டிட்டா! முட்டாள்தனம் சார். நானும்தான் அன்னிக்கு இருந்தேனே... சட்டுனு சொல்லிட்டா 'என்னை மறந்துடுங்க'ன்னு. உங்க மனசு என்ன பாடுபட்டிருக்கும்?''

எனக்கு இன்னொரு கப் காபி தேவைப்பட்டது. நினைவுகள் மேலெழும்பித் தொண்டையை அடைப்பதுபோன்ற உணர்வு. அவற்றை எப்படி விழுங்கித் தீர்ப்பது?

கலாராணி பஸ்ஸரை அழுத்த, சிப்பந்தி வந்தார். ''இன்னொரு கப் காபி வேணும்... சாருக்கு மட்டும்!''

எனக்கு உடம்பு சிலிர்த்தது. இந்தப் பெண் அப்படியே மனசைப் படித்துவிட்டதே!

''நீங்க ஒண்ணுமே பேசலை. 'உதயா, நீ நல்லா இருக்கணும். இருப்பே'ன்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டீங்க. அக்காகிட்ட, 'என்ன இப்படிப் பண்ணிட்டியே?'ன்னு கேட்டேன். உங்களைக் கல் யாணம் பண்ணிக்கிட்டா எங்களைக் கரை ஏத்த முடியாதாம். இந்தப் புத்தி முன்னாடியே இருந் திருக்கணும். கடைசியில என்னாச்சு தெரியுமா?''

''என்னாச்சு?'' - பதற்றத்துடன் கேட்டேன்.

''எங்க வீட்டுல அக்காவைத் தவிர, யாருக்குமே கல்யாணமாகலை!''

''ஏன்... ஏன்..?''
''என்னோட மத்த ரெண்டு அக்காக்களுக்கும் உடம்பு சரியில்லாமப்போச்சு. நிரந்தர நோயாளி கள்!''

''நீங்க ஏன் பண்ணிக்கலை?'' - கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டேன்.

''சிம்பிளி நாட்! கல்யாணத்தை எல்லாம் தாண்டி வெகுதூரம் வந்தாச்சு. ஆனா, ஓர் உண்மை இருக்கு. அதை உங்களுக்கு மட்டும்தான் சொல்வேன்!'' சிரித்தாள்.

''சொல்லுங்க!''

''உங்களை மாதிரி ஜென்டில்மேன் கிடைக்கலை சார்!''

''ஓ... காட்! திஸ் இஸ் டூ மச்!'' - சிரித்தேன்.

''உங்களைப்பத்திச் சொல்லுங்களேன், சார்!''

''ஒரு பெண், ஒரு பையன். பெண், டென்த் படிக்கிறா. பையன், எட்டாவது!'' என்ற நான் தவிப்புடன் கேட்டேன்... ''உதயராணி...''

''இங்கே சென்னையிலதான் இருக்கா! ரெண்டு பெண் குழந்தைகள். கொடைக்கானல் கான்வென்ட்ல படிக்குதுங்க. அப்புறம் ஒரு துயரச் செய்தி. உதயாவோட கணவர் கால மாயிட்டார். அவ தனியா தான் இருக்கா!''

''அப்படியா?''

''உங்களைப்பத்தி அடிக்கடி பேசிக்கிறது உண்டு. நான்தான் பேசுவேன். 'அது முடிஞ்சுபோன கதை. அதை ஏன்டி ஞாபகப் படுத்திட்டே இருக்கே?'ம்பா!''

''அக்கா சொல்றது சரிதானே?''

''பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது ரொம்ப ரிலீஃபா இருக்கு, சார்! அந்த ஞாபகங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும்போது ரிஜுவனேட்டிங்கா இருக்கு!''

''யு ஆர் ரைட்!''

''ஒண்ணுசொல்லட்டுமா? உங்க மேல, உங்க எழுத்து மேல எனக்கு ஒரு அட்மிரேஷனே உண்டு. அப்புறம் உங்க நடை உடை பாவனைகள். யு வேர் எலிகண்ட் இன் தோஸ் டேஸ்! ஒரு அசப்புல கல்யாண்குமார் ஜாடை இருக்கும். இப்பவும்தான். ஆனா என்ன, வயசான கல்யாண்குமார்!''

ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். மழை நின்றுவிட்டு இருந்தது.

''நான் புறப்படறேன். உங்களைச் சந்திச்சது ரொம்ப சந்தோஷம்!''

கலாராணியின் முகம் வாடிவிட்டது. ''அக்கா வோட மொபைல் நம்பர் இருக்கு... தரட்டுமா?''

நான் கலாராணியின் ஊடுருவும் பார்வை யைத் தவிர்த்துவிட்டுச் சொன்னேன்... ''வேண்டாமே! நீங்க சொன்னதுதான் சரி. இந்தச் சந்திப்பு நமது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள மட்டுமே. அவற்றைப் புதுப்பிக்க அல்ல; சரிதானே?''

கலாராணி கை கூப்பினார். ''சின்ன வயசில் நான் அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு உங்களை அண்ணாந்து பார்ப்பேன். உயரமாகத் தெரிவீங்க. இப்போதும் உங்களை அண்ணாந்துதான் பார்க்கிறேன். பெஸ்ட் விஷஸ்!''

வங்கியைவிட்டு வெளியே வந்தேன். வானம் வெளுத்திருந்தது. ஆனால், என்ன ஆச்சர்யம்!

அழகான பிரமாண்டமான வானவில் வானத்தை அலங்கரித்து இருந்தது!