திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ரெளத்திரம் பழகு!

'என்னவொரு ஆணவம் இருந்தா அந்தாள் எங்கிட்ட அப்படி கேட்டிருப்பான்..? திங்கற சோறு ஜீரணமாகாம கொழுப்பெடுத்துப் போய் அலையறான். எல்லாம் திமிர். பணத் திமிர். பதவித் திமிர்!'

சாருமதியின் மனது அடித்துக்கொண்டது. அவனை... அந்த மேனேஜரை அப்படியே சுட்டெரிக்க வேண்டும்போல் இருந்தது.

'படிச்ச படிப்பு வீணாகக் கூடாது, குடும்பத்தோட பொருளாதார தேவைனு பலதையும் மனசுல வச்சுக்கிட்டு வேலைக்கு கிளம்பற பொணுங்கள வட்டம் போடறதே இந்த மாதிரி சில ஆண் ஓநாய்களுக்கு வேலையாப் போச்சு. இதை நம்ம வீட்டுக்காரர்கிட்ட சொன்னா... ஆத்திரத்துல ஆபீஸுக்கு வந்து அவனோட சட்டயைப் பிடிச்சுட்டா..? வீண் பிரச்னையாயிடுமே..? ஒருவேளை, நம்மள வேலையை விட்டுடச் சொல்லிட்டா..? மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். குடும்பச் செலவுகளுக்கு எவ்வளவோ உதவியா இருக்கு. எவனோ செய்யற தப்புக்கு நாம ஏன் அதை இழக்கணும்? வேற என்னதான் செய்யறது'.

அவளுடைய மனம் ஆத்திரத்தாலும் இயலாமையாலும் கொதித்தது. அலுவலகத்தில் நடந்த அசிங்கத்தை தனக்குள் அசைபோட்டபடி வீடுவரை நடந்தே வந்துவிட்டாள்.

உள்ளே நுழைந்தவள், காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தவற்றைக்கூட ஒழுங்குபடுத்த மனமின்றி அப்படியே சோபாவில் சரிந்து விட்டாள்.

'மனுச மனமே அலங்கோலமா கெடக்கு. வீடு எப்படிக் கெடந்தா என்ன? அப்போ... அவன் ஆரம்பத்துல இருந்தே இந்த நெனப்போடதான் எங்கிட்ட பழகினானா? மேனேஜருங்கிறதுக்காக ஒரு அயோக்கியனுக்கு இவ்ளோ நாள் நான் மரியாதை கொடுத்திருக்கேனே... ச்சீ..!'

கடந்து வந்த நாட்களை அசைபோட்டாள்.

ஒரு வருடத்துக்கு முன்தான் திருமணமாகி கணவருடன் சென்னைக்கு வந்தாள் சாருமதி. சென்னையின் ஆடம்பர வாழ்க்கைக்கு கணவன் ரமேஷின் சம்பளம் போதுமானதாக இல்லை. அவளுக்கும் வீட்டில் தனியே இருப்பது கஷ்டமாக இருக்க, அருகிலிருந்த ஒரு கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்த்து விட்டான் ரமேஷ்.

மேனேஜர் ராகவனுக்கு பி.ஏ. என்பதால், அவனிடம் அதிக நேரம் செலவிட வேண்டிய கட்டாயம் சாருமதிக்கு. ஆரம்பத்தில் மிகவும் மரியாதையாகத்தான் இருந்தான். அதிகமாக ஆண்களின் பழக்கத்தை அறிந்திடாத, அனுமதிக்காத கிராமத்தில் வளர்ந்த சாருமதிக்கு, நட்பு என்ற போர்வையில் பழகத் தொடங்கிய ராகவனின் அழுகல் குணம் தெரியாமல் போய்விட்டது.

மதியம் இவளுடன் பகிர்ந்து சாப்பிட்ட ஒரு சில சந்தர்ப்பங்களில், ''என் வொய்ஃப் சமையல்தான் பெஸ்ட்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா, அதை இப்போ உங்களோட இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் தகர்த்துடுச்சு போங்க'' என்று அவன் சொன்னதைக்கூட, தன் சமையலுக்கான பாராட்டாக மட்டுமே பார்த்தாள்.

இன்னும்... ''இந்த நாவல்ல ஒரு கேரக்டரை படிச்சப்போ எனக்கு உங்க ஞாபகம்தான் வந்தது... நீங்களும் படிச்சுப்பாருங்க...''

''எப்படி சாரு உங்களால மட்டும் எப்பவுமே இப்படி ஃபிரெஷ்ஷா இருக்க முடியுது?''

''சாரு, இந்தக் கவிதையைப் படிச்சுப் பாருங்க... உங்களோட உண்மையான அபிப்ராயத்தை சொல்லுங்க..''

இப்படி அலுவலக வேலையின் இடையிடையே அவளுடைய உணர்வுகளை, ரசனைகளை மதித்துப் பேசுவதாக அவன் பேச்சுகள் அமையும்.

அவனுடைய இந்தப் பேச்சுகளை சாரு அனுமதித்ததற்கு தெரிந்தோ தெரியாமலோ கணவன் ரமேஷ§ம் ஒரு காரணமாகிப் போனான். ஆம்... ரமேஷ§க்கு எதிலும், எந்த ரசனையும் இருக்காது. அலுவலகம் விட்டால் வீடு, டி.வி., சாப்பாடு... என இன்றைய இயந்திர வாழ்க்கையின் பிரதிநிதி அவன். அவள் உடுத்தும் உடைகளைப் பற்றியோ, அவனுக்கென பிரத்யேகமாக அவள் செய்யும் சமையலைப் பற்றியோ அவன் எதுவுமே சொன்னதில்லை. அதனால்தான், அவளையும் கவனித்து கருத்துச் சொன்ன ஒரு நண்பரை (நண்பனாக அவள் நினைத்தவனை) அவளால் மறுக்க முடியாமல் போனது.

'ச்சே... ஒரு பொண்ணுகிட்ட காமத்தோட சாயல் இல்லாம கண்ணியமா பழகறது ஆண்களுக்கு ஏன் அவ்வளவு கஷ்டமா இருக்கு? இது இந்தப் பெண் சமூகத்துக்கே சாபமா?'

அந்த நொடியில் தன் நிலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் முகம் தெரியாத அந்த அத்தனை பெண்களுக்காகவும் வருந்தினாள் சாருமதி.

''சாரு... என்னாச்சும்மா? லைட்கூட போடாம இருட்டுல உட்கார்ந்திருக்கே! ஆர் யூ ஆல்ரைட்..?''

அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான் அலுவலகம் விட்டு வந்த ரமேஷ். கவலைகளை களைத்து எழுப்பியது போல இருந்தது அவளுக்கு அவன் ஸ்பரிசம். ஆரம்பித்துவிட்டாள்...

''என்னங்க... நாளையில இருந்து நான் வேலைக்குப் போகல.''

''ஓ.கே... நோ பிராப்ளம். என்ன ரீஸன்பா... ஏதாச்சும் பிரச்னையா?''

''வந்து... அந்த மேனேஜர் ராஸ்கல் எங்கிட்ட தப்பு தப்பா பேசறாங்க. கொஞ்ச நாளா அவன் பார்வையே சரியில்லை. 'நாப்பது வயசுக்கும் மேலான ஆளு... நாம அவசரப்பட்டு தப்பா நெனச்சுடக்கூடாது'னுதான் பேசாம இருந்தேன். ஆனா இன்னிக்கு...''

''ம்ம்... இன்னிக்கு என்னாச்சு? அழாம சொல்லு.''

''சாயந்தரம், 'லஷ்மி அண்ட் கோ ஃபைல் உங்கட்ட இருந்தா கொடுங்க சார்... அக்கவுன்ட்ஸ் டேலி செய்யணும்'னு கேட்டேன். அதுக்கு அந்தாளு, 'சாருவோட ஃபைலைக்கூட என்னோட வச்சுக்க ஆசைதான்... நீங்கதான் ஒண்ணும் சொல்லமாட்டேங்கறீங்க'னு சொல்லி, என்னைப் பார்த்து ஒரு மாதிரியா சிரிக்கறான். எனக்கு அருவருப்பா போச்சு. ஒண்ணும் பேசாம வேகமா கிளம்பி வந்துட்டேன். இனிமே அந்தாளோட முகத்துலகூட நான் முழிக்கவே மாட்டேன். பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாதுங்க...''

சாருவின் கண்கள் கோபத்திலும் அவமானத்திலும் பொங்கின.

ஒன்றுமே பேசாமல் சமையலறைக்குள் போன ரமேஷ், சூடாக இரண்டு டீ டம்ளர்களுடன் வந்தான். ''ம்... டீயை எடுத்துக்கோ சாரு...''

அவனின் அந்த ரியாக்ஷனை சாரு ரசிக்கவில்லை. 'என்ன ஆம்பள இவரு..? பொண்டாட்டி என்ன சொல்லிக்கிட்டு இருக்கா... இவரு டீ குடிக்கச் சொல்றாரே...'

எரிச்சலை அடக்கிக்கொண்டு இருந்தாள்.

தொடர்ந்தான் ரமேஷ்... ''நான் சொல்றதை அமைதியா யோசிச்சுப் பாரு. பெண்களோட பதுகாப்பு, அவங்களோட தைரியம்தான்!''

வந்து விழுந்த வார்த்தைகள் அவளை நிமிர வைத்தது.

''எங்க இல்லை பிரச்னைகள்? தினமும் பேப்பரை படி... புரியும். வயலுக்கு வேலைக்குப் போற பொண்ணை தோட்டக்காரன் 'வர்றியா'னு கேட்கறான். கட்டட வேலைக்குப் போற பொண்ணை மேஸ்திரி தப்பா பார்க்கறான். ஏன்... வெளியே போற பொண்ணுங்களுக்குத்தான் பிரச்னையா? வீட்லயிருக்கற பெண்களுக்கு மாமியார் கொடுமை, மாமனார் அத்துமீறல், குடிகார புருஷன்... இன்னும் எவ்வளவோ...''

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சாரு.

''மேனேஜர் தப்பா பேசினான்னு இன்னிக்கு நீ வேலையை விட்டுடலாம். நாளைக்கே காய்கறி விக்கறவன் தப்பா பார்த்தா..? வேற கடைக்குப் போவியா? அவனும் தப்பா பார்த்தா? இதுக்கெல்லாம் ஒரே தீர்வு... நீ தைரியமா இருக்கறதுதான். அதுக்காக உன்னை ஜான்சி ராணி மாதிரி போர்க்களத்துல இறங்கி சண்டை போடச் சொல்லல. ஆனா, உங்கிட்ட தப்பா நடந்துக்க நினைக்கறவங்ககிட்ட, உன்னோட நியாயமான கோபத்தைப் பேசு. முழு எதிர்ப்பையும் காட்டு. அந்தாள்கிட்ட நாக்கை புடுகிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டுட்டு வந்திருந்தா.. இந்நேரம் அவன் பயத்துலயும் அவமானத்துலயும் புழுங்கிட்டு இருந்திருப்பான். நீ இப்படி கண்ணீரும் குழப்பமுமா உட்கார்ந்திருக்க மாட்ட" என்று அழுத்தமாக சொன்னவன்,

"இதோ பாரு சாரு, 'விருப்பம் இருந்தா வேலைக்கு போÕனு உன்கிட்ட சொல்ல மாட்டேன். தைரியம், தன்னம்பிக்கை இருந்தா நாளைக்கு ஆபீஸுக்குப் போ...'' என்றான்.

உடம்பெல்லாம் ஏதோ முறுக்கேறியது போல உணர்ந்தவள், "என்னங்க... இந்த டீ ஆறிப்போச்சு. கொஞ்சம் சூடுபடுத்தித் தர்றீங்களா... ப்ளீஸ்...?" என்று கோரிக்கை வைத்து, சூடான டீயைக் குடித்து முடித்தவள்,

''இனிமே அவன் எங்கிட்ட தப்பா பேசட்டும்... ராஸ்கல்... கோபத்துலயே கொளுத்திடறேன்! உங்க வொய்ஃப் யாருனு காட்டறேன்!''

சாருவிடமிருந்து சூடு குறையாமல் வந்துவிழுந்த வார்த்தைகளை புன்னகையோடு வாங்கிக் கொண்டிருந்தான் ரமேஷ்.

விடியக் காத்திருந்தது இரவு!


சு.ஹேமலதா

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்





ஆகஸ்ட் இரண்டாம் தேதி தம்முடைய பிறந்த நாளை தனியாக (பாவம் பையன்!!! ) கொண்டாடிய மிஸ்டர் மணிகண்டன் அவர்களுக்கு துபாய் நண்பர்கள்(அருமை செல்வன் ,பாவே,பாலாஜி ,ஆத்தா மற்றும் வெற்றி ) சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். நிற்க!!! இனிமேல் இந்த அண்ணனின் அருமை பெருமைகளை பார்க்கபோகிறோம்.

நான் ரெடி ! நீங்க ???
பார்க்க கொஞ்சம் இல்ல இல்ல அதிகமாகவே நல்ல தான் இருப்பான்,என்ன பண்றது பிகர் தான் ஏதும்?? ஹலோ தப்பா எடுத்துகாதிங்க இன்னும் கல்யாண பொண்ணு ஏதும் மாட்டல. அதனாலேயே பையன் ஒரு தேவதாஸ் போலவே சுத்திட்டு இருக்கான்.
நீங்க வேணா உதவி செய்ங்க

அப்புறம்

ரொம்ப சீன் போடுவான் ,,எப்ப போன் பண்ணினாலும் ரொம்ப பிஸி னு சொல்லுவான். தப்பா எடுத்துகாதிங்க ரொம்ப கம்பெனிக்கு நல்ல உழைப்பான்,வாங்கிற சம்பளத்துக்கு அதிகமாகவே!!


பைனலா சொல்றதெல்லாம் இது தான்
ரொம்ப நல்லவன்
ரொம்ப அறிவாளி
ரொம்ப கெட்டிக்காரன்
ஆகையால் அடுத்த பிறந்த நாளுக்காவது நாம வாழ்த்து சொல்ல மறக்கக்கூடாது நண்பர்களே!!!!!

இப்போ லேட்டா சொன்னாலும் லேடஸ்ஸ சொல்லுவோங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணி ரெண்டு மூணு குழந்தை பெற்று மனைவியோடு சந்தோஷமா இருக்க வாழ்த்தும்


அன்பு நண்பன் இராயர்