சனி, 10 அக்டோபர், 2009

33 சதவீதம்! (சிறுகதை) - ராஜ்கதிர்


திருமணத்திற்கு பின் நான் சந்திக்காத என் தோழியை, சில வருடங்களுக்கு பிறகு சந்தித்தே தீர வேண்டிய சூழ்நிலை... நான் கல்யாணம் செய்து கொள்ள போவதால் உருவானது. ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறகு, ஒரு ஆடவரின் நட்பை தொடர்வதில் பல சிக்கல்கள் உண்டு... அவளின் கணவனின் புரிதலில் உள்ளது. ஆனால், கணவனுக்கு, தன் நட்பை புரிய வைப்பது மட்டுமல்ல, தன் எண்ணத்தை, அதன் உறுதியை தெளிய வைக்கக்கூடிய அபார திறமை படைத்தவளே என் தோழி.
என் திருமண அழைப்பிதழ் கொடுக்க, அவர்கள் வீடு நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் நான்கு மணி நேர பயணம் செய்ய வேண்டும். ரயிலில் சக பயணிகள் அனைவரும், நிம்மதியாக உறக்கத்தில் மூழ்கியிருந்தனர். கண் மூடியவாறு சிந்திக்கலானேன்... மூடிய இமைகளுக்குள் என் வருங்கால மனைவியின் முகம், என் இதயத்தை மகிழ்வித்தது. என் மனைவியாக போகிறவளோடு, பலமுறை மொபைல் போனில் பேசி பழகியதில், அவள் என்ன மாதிரி எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேனோ, அதே அலைவரிசையில் செட்டாகி இருந்தாள்.பெண்கள் பத்தாம்பசலிகளாக இல்லாமல், சற்று துணிவான எண்ணம் கொண்டிருக்க வேண்டும்; எதற்கும் பயப்படாமல் போராடும் குணமும், தன் எண்ணத்தை உறுதியோடு வெளிப்படுத்தி, தன் மீது தவறு இல்லாத பட்சத்தில் எதற்காகவும், யாருக்காவும், தன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில், தேவையற்ற பிடிவாத குணமும் கொண்டிருக்காமல், அப்படியிருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று சில எண்ணங்கள் கொண்டிருந்தேன்.


நான் சந்திக்க இருக்கும் தோழியும் அவ்வித எண்ணங்களோடு இருந்ததால், எங்கள் நட்பு உண்டானது. அந்நாள் ஒரு குடியரசு தினம். அன்று மதியம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தபோது, ரோட்டில் ஒரு பெண்ணின் சப்தம். கதவை திறந்து பார்த்தால், கையில் செருப்போடு, ஒரு இளைஞனை அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
சற்று தள்ளி லேடீஸ் சைக்கிள், கீழே விழுந்து கிடந்தது. சைக்கிள் கேரியரில் கல்லூரி புத்தகம், டிபன் பாக்ஸ் இருந்தது. வெள்ளை நிற பாவாடை, தாவணி அணிந்து, இந்திய தேசிய கொடி குத்தியிருந்தாள்; கண்களில் கோபக்கனல் தெரித்தது.
"மடப்பயலே செருப்பு பிஞ்சிரும்டா...' என்று சொல்லி அடித்தே விட்டாள். அந்த இளைஞன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒடியே விட்டான்.


சில மாதங்களுக்கு பிறகு, நான் பயிலும் இந்தி வகுப்பில், அந்தப் பெண்ணும் சேர்ந்தாள். தயங்கி, தயங்கி பேச துவங்கினேன். சக மாணவனாக நினைத்து தான் பேசியதாக எண்ணினேன்; ஆனால், அவள் எந்த ஆடவனுடனும் வெகு சகஜமாக உரையாட கூடியவள் தான் என்று பின்னர் தெரிந்தது. அந்நிகழ்ச்சியை பற்றி கேட்டவுடன், "அந்த ராஸ்கல் என்கூட பேசியிருந்தாலோ, என்னை கிண்டல் பண்ணி இருந்தாலோ கூட எனக்கு கோபம் வந்திருக்காது. பொம்பளைய போகப் பொருளாத்தான் பார்க்க தெரிஞ்சிருக்கான்; நினைக்கிறான். சிரஞ்சில தண்ணி நிரப்பி, என் இடுப்புல அடிச்சான். கடவுள் பொம்பளைகள தன் காம உணர்வை தீர்த்துக்கிறதுக்காக படைச்சதா தான் எல்லா ஆம்பளைகளும் நினைக்கிறாங்க...
"சக மனுஷியா பார்க்காம, ஒரு அடிமையாத்தான் பெண்களை வைத்திருக்காங்க. உங்களுக்கு தெரியுமா... என் அம்மா கூட பேசி, நாலு மாதமாகிறது. அன்னிக்கு தெரு முனையில நின்னு ஒரு பையன் கூட பேசிக்கிட்டு இருந்தேன்னு, "எப்ப பாரு ஆம்பளை மாதிரி நெஞ்சை நிமித்துகிட்டு நடக்கிறேன்!'ன்னு சப்தம் போட்டாங்க.
"பெண்கள் என்றாலே, அடக்க ஒடுக்கமாத்தான் இருக்கணும்ன்னு சட்டமா என்ன? இந்த உலகத்தில், எங்க விருப்பப்படி நல்லவிதமா, சுதந்திரமா வாழ எங்களுக்கு உரிமை இல்லையா?
"என் பக்கத்து வீட்டு பையன், எனக்கு வைச்ச பெயர், "திமிரு பிச்சவ!' ஏன் தெரியுமா? அந்த செருப்படிபட்டவனோட நண்பன் இவன். என் அண்ணன், எனக்கு சூட்டிய நாமம், "அடங்காப்பிடாரி!' அவன் சட்டையை நான் துவைச்சிப் போடலையாம்.2009 வருஷம் முடியப்போது, இன்னும் எதுவும் மாறலைங்க. பாருங்க, 33சதவீதம் கேட்கிறாங்க. பூஜ்ய சதவீத உரிமையே பெண்களுக்கு இல்லேன்னு போன பிறகு...'


"ஏன்,எல்லாத்தையும் நீங்க மாத்துங்களேன்...'
"மாத்தத்தான் போறேன். என் சக தோழிகளை சேர்த்து, பெண்ணுரிமைக்காக போராடத்தான் போறேன்; என் வாழ்நாள் லட்சியமாவும், சபதமாகவும் எடுத்து செய்யத்தான் போறேன், பாருங்க!' "சரிங்க, வாழ்த்துக்கள்... பெரியாரம்மா...' என்றதற்கு, சிரித்து கொண்ட அந்த தோழியை, சந்திக்க தான் இந்த ரயில் பயணம். பணிநிமித்தமாக நான் வெளிநாடு சென்று விட்டதால், சில வருடங்களாக என் தோழியை நேரில் சந்திக்கவில்லை. அவர் திருமணத்திற்கு கூட நான் செல்லவில்லை; வாழ்த்து மட்டுமே அனுப்பினேன். ஒருமுறை போனில் பேசும் போது, தற்போது வசிக்கும் இடம் மற்றும் அவர் கணவரின் பணிகுறித்து கேட்டறிந்தேன்.
சென்னை வந்து, நண்பன் தங்கியிருக்கும் ரூமில் குளித்து உடைமாற்றி, அவனை அலுவலகத்தில் இறக்கி விட்டு, வண்டியில் என் தோழி குடியிருக்கும் ஏரியா நோக்கி சென்றேன்.
ஒரு கடையில் பழங்கள், வெற்றிலை பாக்கு வாங்கி கொண்டிருந்தபோது, எதிரே உள்ள ஓட்டலை அப்போது தான் கவனித்தேன். அந்த ஓட்டலிலிருந்து வெளியே வந்தது என் தோழியே தான்.


என் தோழியின் உடல் சற்று கனத்திருந்தது. முகமெல்லாம் சற்று புஷ்டியாக, கன்னம் உப்பியிருந்தது. கல்யாணமாகி, குழந்தை பெற்ற பிறகு, பெண்கள் உடலமைப்பில் ஏற்படும் மாற்றம், என் தோழியிடத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் என் தோழியின் நடையில், ஒரு மாற்றம்; வியந்தேன். ரோட்டில் ஒரு பெண்ணை அழைப்பது சரியல்ல என்பதால், அவர் செல்லும் வரை காத்திருந்து, வண்டியை மெதுவாக அவர் பின்னே செலுத்தினேன்.
ஒரு கையில் கூடை நிறைய காய்கறிகள், மறு கையில் ஓட்டலில் வாங்கிய பார்சல் என, நெற்றியில் வடியும் வியர்வையை கூட துடைக்க சிரமப்பட்டவாறே, மெதுவாக நடந்து கொண்டிருந்தார். ரோட்டின் ஓரத்தில் இருந்த பெட்டி கடை சென்று, அந்த கடையில் ஏதோ வாங்கி, தன் நடையை தொடர்ந்தார். அவர் வீடு செல்லும் வரை வண்டியை மெதுவாக செலுத்தி, காம்பவுன்ட் கேட்டை திறந்ததும், வண்டியை வேகப்படுத்தி கேட் அருகே நின்று, ""ஹலோ...'' என்றேன்.
"யாரோ?' என பார்த்தவர், ""என்னங்க... என்னை தெரியல...?'' என்ற என் குரலை கேட்டதும், ""ஓ... நீங்களா, என்ன இவ்வளவு தூரம்?'' என்றார். ""ஒரு நல்ல விஷயம் தான். உங்கள பார்த்து சொல்லணும்ன்னு தான் வந்தேன்.''
""சொல்லுங்க...'' என்னை அப்படியே வெளியே நின்னே பேசி அனுப்பி விடலாம் என்று நினைத்திருப்பார் போல. ""ஏங்க, இது உங்க வீடு தானே? உள்ளே கூப்பிட மாட்டீங்களா?''
ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தவர், ""சரி, வாங்க...'' என அழைத்தார்.
""உங்க நம்பருக்கு போன் பண்ணேன், கிடைக்கலையே...'' என்றவாறு வீட்டினுள் சென்றதும், ""ஏய், பொம்பள... டிபன், சிகரட் வாங்கிட்டு வந்திட்டியா?'' என்ற கரகர குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து, ""ஏய், பொம்பள... ஸ்கூலுக்கு நேரமாச்சு. எனக்கு யூனிபார்ம் மாட்டிவிடு...'' என்ற ஒரு மழலை குரல். கரகர குரல் என் தோழியின் கணவர் குரல் என்றும், மழலை குரல் அவர் குழந்தையின் குரலாக இருக்க கூடுமோ என, யோசித்துக் கொண்டே அந்த ஹாலிலே நின்று கொண்டிருந்தேன்.
ரூமிற்குள் சென்று வந்த தோழி, நான் நின்று கொண்டிருப்பதை பார்த்து, ""அங்க உட்காருங்க...'' என்று இருக்கையை காண்பித்துவிட்டு, தொலைக்காட்சியை ஆன் செய்து, உள்ளே சென்றார். அரைமணி நேரம், நான் அங்கே காத்திருந்தேன். என் தோழியே பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள். அவள் கணவருக்கும், மகனுக்கும் டிபன் கொடுத்து, மகனுக்கு உடை மாற்றி, தன் கணவர் சிகரட் பற்ற வைக்க லைட்டர் தேடி, சிகரட் பற்ற வைத்து, கணவரின் பாதணியை மாட்டிவிட்டு, தன் மகனுக்கு ஷூவை மாட்டினாள். லன்ச் பேகை எடுத்து வந்து, தன் மகனை அனுப்பிவிட்டு உள்ளே வந்த சில நொடிகளில், ""ஏய், பொம்பள...'' என குரல் கேட்டதும், படுக்கையறையில் உள்ள ஒரு பைலோடு வெளியே வந்து, தன் கணவரிடம் கொடுத்து விட்டு வந்தார். வீட்டிலிருந்து வெளியே போகும் போது, என் தோழியின் கணவர், ""ஹலோ, வாங்க...'' என்று சென்றது, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது; எங்கே பேசாமலேயே சென்று விடுவார் என்று தான் நினைத்திருந்தேன்.


""ஒரு நிமிஷம்...'' என்று கூறி, ரூமிற்குள் சென்று ஒரு டம்ளரோடு வந்து, ""இந்தாங்க, இதை குடிங்க...'' என்று கொடுத்தது கூட என்னை வியப்படைய செய்தது.
""சரி, இப்ப சொல்லுங்க. என்ன விசேஷம்?'' என்று கேட்டவாறு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
""என்னங்க... உங்க நடவடிக்கையில, முற்றிலும் மாற்றம் தெரியுதே. நான் பார்த்து வியந்த, பெருமைப்பட்ட யுவதியா நீங்க தெரியலையே, ஏன்?''
""அத விடுங்க... என்ன ரொம்ப முக்கியமான விஷயம்?''
""எனக்கு கல்யாணம்ங்க. அதான், உங்கள நேரில பார்த்து, அழைப்பிதழ் கொடுத்து போலாம்ன்னு வந்தேன். நிறைய அதிர்ச்சியா இருக்குங்க, இங்க வந்த பிறகு. நான் உங்க வாழ்க்கையை வேற மாதிரி கற்பனை பண்ணி வைச்சிருந்தேன். நீங்களும் ஒரு சராசரி இந்தியப் பெண்ணா இருக்கிற மாதிரி தான் தெரியறது...''
""கண்டிப்பா... உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியாது; என் வாழ்த்துக்கள். அப்புறம், நீங்க சொன்ன அந்த சராசரி இந்தியப் பெண்ணால தான் நம்ம இந்திய நாட்டோட கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் எல்லாம் காப்பாற்றப்படுது.


""நம்ம நாட்டு பெண்ணுக்கு கல்யாணத்திற்கு முன் பெத்தவங்களால அவுங்க சுதந்திரம் பறிக்கப்படுது; கல்யாணத்திற்கு பிறகு கணவனால. எப்பவும் இந்த நாட்ல பெண்களுக்கு சுதந்திரமோ, தனி மனித உரிமையோ இல்லைங்க; அவர்கள் விருப்பம் போல் பெண்களால வாழ முடியாது; வாழவும் விடமாட்டாங்க.
""மீறினால், குடும்ப கட்டமைப்பு சிதறும். நான் தனித்து தான் வாழணும். ஏகப்பட்ட களங்கத்தை சுமத்திருவாங்க. நான் சாப்பிடுறேனோ, இல்லையோ, என் கணவரையும், பிள்ளையும் நான் கவனிக்கணும்; என் கணவர் சொல்ற வேலையை ஒரு அடிமை போல் செய்யணும்.
""பெண்ணுரிமை... பெண் சுதந்திரம்ன்னு நான் பேசிக்கிட்டு இருந்தேன்னா... நான் வாழாவெட்டியாத்தான் வாழ நேரிடும். இது அனுபவப்பூர்வமா நான் கண்ட உண்மை. என் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு, நான் ஒரு மாதர் சங்கத்தில உறுப்பினராகி, பெண்ணுரிமை பேசிட்டு திரிஞ்சதால, எங்க தெருவுல, என்னை ராங்கிக்காரியா ஆக்கிட்டாங்க.
""என்னை பெண் பார்க்க வந்த இருபத்தி ஏழு மாப்பிள்ளைகிட்ட என்னை பற்றி என்னென்னமோ சொல்லி பயமுறுத்திட்டாங்க. எங்க குடும்பத்தால அத தாங்க முடியல. என்னை கொஞ்சம், கொஞ்சமா வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னை வேற ஒரு ஊர்ல கொண்டு போயி வைச்சு, ரகசியமா எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க.
""என் கணவரும் என்னை அடக்கி ஆள நினைச்சதால, அடிக்கடி எங்களுக்குள்ள சண்டை வரும். கடைசியா, ஒரு தடவை என் உரிமைக்காக சண்டை போட்டு, ஒரு வருஷம் நான், வாழா வெட்டியா இருந்தேன். ஆம்பளைகள், பெண்ணை அடிமையா வச்சிக்கிறதல தான் குறியா இருக்காங்க; பெண்ணுரிமை பற்றி வாய் கிழிய பேசுற ஆண்களோட வீட்ல கூட, அவன் பெண்டாட்டியை அடிமையாத்தான் வைச்சிருக்கான்.''


""எல்லா ஆண்களும் அப்படியில்லைங்க... பெண்கள சரிசமமா நினைக்கிற என்னை போல சிலர், இருக்கத்தான் செய்றாங்க...''
""இப்ப அப்படி தான் சொல்வீங்க; நாளைக்கு உங்க பெண்டாட்டி உங்கள எதிர்த்து பேசினா, நீங்க சொன்ன வேலையை செய்யாம போனா, அவளை வெறுக்க ஆரம்பிச்சிருவீங்க. ஏன், அவள டைவர்ஸ் கூட பண்ண துணிஞ்சிருவீங்க. ஒரு பெண் வாழவெட்டியா பிறந்த வீட்ல இருக்கிறது ஆயுள் தண்டனையை விட பெரிய கொடுமைங்க...
""என்னைப் பற்றின கவலையில, எங்க அப்பாவுக்கு உடம்பு ரொம்ப படுத்த ஆரம்பிச்சிருச்சு. என் கால்ல விழாத குறையா, "மாப்பிள்ளை கூட அனுசரிச்சு வாழ முயற்சி செய்!'ன்னு கெஞ்சினார். என் தங்கச்சி ஒரு படி மேலே போய், "கொஞ்சம் விஷம் இருந்தா, கொடுத்து என்னை கொன்னுடுக்கா...'ன்னு சொன்னாள்.
""என்னால அவளுக்கு கல்யாணம் ஆக மாட்டேங்குதுன்னு அழறா... அந்த ஒரு வருஷம் நரக வேதனை அனுபவிச்சேன். இந்த நாட்ல பெண்களுக்கு எங்கங்க சுதந்திரம், உரிமை இருக்கு? என்ன தான் பெண்கள் பெரிய படிப்பு படிச்சிருந்தாலோ, பெரிய பதவியில இருந்தாலோ அவுங்க ஆண்களுக்கு பின்னாடி தான் இருக்காங்க...
""ஒரு பெண் கலெக்டரா இருந்தா கூட, பின்னாடி நின்னு அவள இயக்குறது ஒரு ஆண். ஏன், ஒரு பெண் முதல்வர் கூட, தன்னிச்சையா ஏதாவது செய்ய முடிஞ்சதா? அவள் புருஷன் தானே எல்லாம் பார்த்தார். ஒரு பாஸ்போட் அதிகாரியா ஒரு பெண் இருந்தாங்களே, அவர் ஊழலுக்கு பின்னால இருந்த அவர் புருஷன் ஒரு ஆண் தானே?


""தப்பு செய்யற பெண்களுக்கு பின்னால நிக்கிறது கூட ஒரு ஆண் தான். பெண்கள் தன்னிச்சையா இயங்க முடியாது.பெண்கள் வேலைக்கு போறது கூட, அவள் சுதந்திரத்துக்காக இல்லைங்க; அவள் கொண்டு வர்ற பணத்துக்காக தான். ஒருவேளை, கோடி, கோடியா சொத்து, பணம் வைச்சிருக்கிற பெண்ணுக்கு வேணா தனி உரிமை, சுதந்திரம் இருக்கலாமோ, என்னவோ...?
""என் வீட்டுக்காரர் என்னை, "ஏய் பொம்பள'ன்னு தான் கூப்பிடுவார்; அவரைப் பார்த்து, என் மகனும் கூப்பிடுறான். அவர் அப்படி கூப்பிடுறத செல்லமா அழைக்கிறதா நான் நினைச்சிக்குவேன். அவுங்க அப்பா, அவர் அம்மாவை அப்படித்தான் கூப்பிடுவாராம்.
""நம்ம பாரத நாட்டில, பெண்கள் இப்படித் தான் இருக்கணும்ன்னு தலைவிதிங்க; இதை யாராலும் மாத்த முடியாது. நான் ஒரு சராசரி இந்தியப் பெண்ணா மாறினதுல என்னங்க ஆச்சரியம். தயவுசெய்து நீங்க, உங்க மனைவியை ஒரு அடிமையா நடத்தாம இருக்க, முயற்சி செய்யுங்க, என்ன?'' என்றார். தொலைபேசி ஒலிக்க, எழுந்து சென்று பேசிவிட்டு வந்தார். ""என் வீட்டுக்காரர்தான்... நீங்க போயிட்டீங்களா?ன்னு கேட்டார்.''
நான் வாங்கி வந்த பழங்களையும், அழைப்பிதழையும், என் தோழியிடம் கொடுத்து, ""கல்யாணத்துக்கு அவசியம்
வர முயற்சி செய்யுங்க...'' என்று, விடைபெற்று வெளியே வந்தேன்