புதன், 24 ஜூன், 2009

காதல் டூயட்



''
போதும் உங்கள கட்டிக்கிட்டு நான் படற அவஸ்தை. காதல்னா என்னனு தெரியாத ஜென்மம். எத்தனை ஆசையோட, எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா..!'

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே..!''

- தன் மொபைல் மியூசிக் ஃபைலில் இருக்கும் 'டூயட்' பட பாடல் வரியை கேட்கும்போதெல்லாம், தன் கூர்நாசியை கண்ணாடியில் பார்த்து சிலிர்த்துக் கொள்வாள் தீபிகா. தாவணி போட்ட நாளில் இருந்தே தன் வருங்காலக் கணவன் குறித்து கலர் கலராக கனவுகள் சுமந்தவள். சூரியக் குமாரனாக அவன் வருவான்; திகட்டத் திகட்ட காதல் தருவான்; 'தீபு' என்ற வார்த்தையையே திருவாசகமாய் ஒலிப்பான்; தினம் தினம் நம் நாட்கள் திருவிழாவாக நகரும் இப்படியெல்லாம் நினைப்பில் மிதந்தவளுக்கு வந்த வரன்தான் குமரன்.

நிச்சயதார்த்தம் முடிந்தபின் துளிர்த்த அவர்களின் செல்பேசி உரையாடல்களின் பெரும்பகுதியில் ஷேர் மார்கெட், அமெரிக்க தேர்தல் பற்றியெல்லாம் பேசி தீபிகாவின் கனவில் அவன் தீ மூட்டியபோதும், காலங்கள் மாறும், தனக்கு கணவனானபின் குமரன் காதல் நோய்க்கு ஆளாவான் என்றெண்ணி அவனைக் கைபிடித்தாள்.

மாங்கல்ய கயிற்றின் புது மஞ்சள் சாயம் மாற ஆரம்பித்திருந்தது. ஆனால், தீபிகாவின் எதிர்பார்ப்புகளும் குமரனும் தனித்தனியேதான் இருந்தனர். அவள் முகத்தின் முன் வந்து விழுந்த கற்றை முடியை அவன் தன் விரலால் ஒதுக்கிவிடவில்லை. அலுவலகம் முடிந்து வரும்போது, அவள் கண் பொத்தி விளையாட்டு காட்டியதில்லை. ஊரே உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் மூழ்கிக்கிடந்த இரவுகூட, காரல் மார்க்ஸின் பொருளாதாரக் கோட்பாடுகளை கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவள் ஆசை ஆசையாக சமைத்துப் போட்டதை, நியூஸ் சேனல்கள் பார்த்தபடியே மென்று விழுங்கினான்.

தீபிகாவுக்கு நித்தமும் ஏமாற்றமாகக் கழிந்தது. ஆக, இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதுகள் அவளுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றின. தான் நூறு சதவிகிதம் அவனைக் காதலிப்பதாகவும், ஆனால் ஒரு சதவிகிதம்கூட அது தனக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றும் ஒரு மாய எண்ணத்தை மனதுக்குள் மெள்ள வளர்த்தெடுத்தாள்.

ஒரு இரவு நேரத் தனிமை. 'தீபு' என்று கைபிடித்தான் குமரன். தீபு... இத்தனை நாட்களாக அவனிடமிருந்த அவள் எதிர்பார்த்துக் கிடந்த அந்த ஒற்றை வார்த்தை. ஆனால், அந்த சூழ்நிலையில் அதற்குக் கிடைக்கவேண்டிய அன்பும் அங்கீகாரமும் அஸ்தமித்துப் போயிருக்க, சட்டென அவன் கைகளை உதறியவளின் குரல் விசும்பலானது.

''போதும் உங்கள கட்டிக்கிட்டு நான் படற அவஸ்தை. காதல்னா என்னனு தெரியாத ஜென்மம். எத்தனை ஆசையோட, எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா. எல்லாம் போச்சு...'

'என்னம்மா பிரச்னை.. இங்க வா..'' - எட்டி அமர்ந்திருந்தவளை இழுக்க முற்பட்டான்.

''ஒண்ணும் வேண்டாம்.. தேவைனா மட்டும் அன்பா பேசற மாதிரி நடிக்காதீங்க'' - சுருங்கிப் போனான் குமரன். அன்றிலிருந்து அவர்கள் பஞ்சணையில் காற்று வீசியது. காதல் கரைந்து கொண்டே போனது.

இருந்தாலும் நல்லவேளையாக அடுத்தடுத்த பிரளயங்கள் வெடிக்கவில்லை. சிறுவயதிலிருந்தே எதையும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பவன் என்பதால், பொறுமையாகவே இருந்தான். எங்கே நிகழ்ந்தது அந்த தவறு என்று அவனால் உணர முடிந்தது. விழுந்துகிடக்கும் மாயத் திரையை விலக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த அற்புத நாளும் வந்தது.

தன் அலுவலக பார்ட்டி ஒன்றுக்கு, மிகவும் வற்புறுத்தி தீபிகாவை அழைத்துப் போனான். திருமணத்துக்குப் பிறகு முதல் முதலாக பார்க்கிறார்கள் என்பதால், அவளே எதிர்பார்க்காத வகையில் ஏகப்பட்ட வரவேற்பு.

''நீங்க சமைச்ச காளான் மஞ்சூரியனையும் வெஜிடபிள் புலாவையும், 'என் வொய்ஃப் பண்ணினது.. சூப்பரா இருக்கும்.. சாப்பிட்டுப் பாருங்க..'னு ஆபீசுக்கே விருந்து வெச்சுடுவார் குமரன்'' - இது அக்கவுன்ட் செக்ஷன் கவிதா.

''பத்து வயசிலேயே டிராயிங் காம்படிஷன்ல கலெக்டர்கிட்ட பிரைஸ் வாங்கியிருக்கீங்களாமே.. இதுவரை நூறு தடவை சொல்லிட்டார் உங்க ஹஸ்பண்ட்..'' என்றார் பர்சனல் மேனேஜர்.

''நாங்க எல்லாம் லன்ச், டீ டைம்னு வெளிய போயிட்டா, ஐயா நைஸா அவரோட சிஸ்டம் ஸ்கிரீன் சேவரையேதான் பார்த்துட்டு இருப்பாரு. அட... உங்க போட்டோதாங்க அவனோட ஸ்கிரீன் சேவர்!'' - அவளை இன்னும் சிவக்க வைத்தான் குமரனின் நெருங்கிய தோழன் மூர்த்தி.

விருந்தோடு நடந்த விளையாட்டுப் போட்டியில், ஒவ்வொருவரும் தங்கள் மனைவிக்கு பிடித்த பத்து அம்சங்களை ஒரு பேப்பரில் எழுத வேண்டும். அத்தனையையும் சரியாக எழுதிய குமரனைப் பாராட்டிய கைதட்டல் ஓய வெகு நேரம் ஆயிற்று.

கண்களில் கண்ணீர் தழும்ப நின்றுகொண்டிருந்த தீபிகா கையில் மட்டும் சாட்டை கிடைத்திருந்தால், தன்னைத் தானே அடித்துக் கொண்டிருப்பாள்.

அலுவலகத்தில் அதுவரை 'ரிசர்வ்டு டைப்'ஆக அறியப்பட்டிருந்த குமரன் மைக் பிடிக்க, அனைவரும் அசந்து போய் பார்த்தார்கள்...

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே..!
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்
இல்லை... செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டுபோகும்... கொண்ட காதல் கொள்கை மாறாது...''

சபை என்றுகூட பார்க் காமல் வார்த்தைகள் முடியும் முன்னே ஓடிச்சென்று கணவனைக் கட்டிக் கொண்டாள் தீபிகா. 'ஹே' என கூட்டம் ஆர்ப்பரித்ததில் அவளின் அழுகைச் சத்தம் அடங்கிப் போக, ரகசியமாக அந்தக் கூர்நாசியை செல்லமாகக் கிள்ளினான் குமரன். இனி அவர்கள் பஞ்சணையில் காற்றும் உண்டு, காதலும் உண்டு!

சிலர் காதலை மௌன ராகமாக வாசிப்பார்கள். சிலர் கடை விரித்து கச்சேரி வைப்பார்கள். குமரன் இதில் முதல் வகை. தீபிகா இரண்டாம் வகை. இப்போது தீபிகாவுக்காக தன்னையும் 'இரண்டாம் வகை'யில் சேர்த்துக் கொண்டான் குமரன்.



2 comments:

Lakshmi சொன்னது…

very nice story

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

நல்ல அழகான கதை.