சனி, 27 ஜூன், 2009

இனிய இல்லறம்

''எங்க வீடுன்னா உங்களுக்கு ஒரு இளக்காரம்! எப்பவும் இப்பிடித்தான். எங்க பிரபா கல்யாணத்துக்குக்கூட பெரிய்ய வி.ஐ.பி மாதிரி சரியா தாலி கட்டுற நேரத்துக்குத்தான் வந்தீங்க..''

ஆரம்பித்து விட்டாள் பிருந்தா! எரிச்சலாக இருந்தது தனேசுக்கு.

''அது எவ்வளவு 'டைட்' ஆன டைம்னு உனக்கே தெரியும். ஆபீஸ்ல ஆடிட்டிங் நடந்துட்டு இருந்தது. அந்த சமயத்துல நான் கல்யாணத்துக்கு வந்ததே பெரிய விஷயம்.. இதை நான் உன்கிட்ட பல தடவை சொல்லியிருக்கேன்..'' - குரலில் உஷ்ணம் காட்டிச் சொன்னான் தனேஷ்.

''ஆமா.. பெரிய டைட். உங்க ஆபீஸ் வேலை எப்பதான் லூஸா இருந்திருக்கு? பிறந்த வீட்டுல வச்சு அவமானப்பட்ட நான்தான் லூசு. ஊரே கேட்டுச்சு.. 'பிருந்தா மாப்பிள்ளை வரலையா?'னு!''

இரண்டு வருடம் முன்னால் நடந்து முடிந்த பிருந்தாவின் தங்கை பிரபாவின் கல்யாணம், இன்று வரையிலுமே பல சண்டைகளுக்கான அஸ்திவாரமாக இருக்கிறது.

''எங்கம்மாவுக்கு நாலு நாளா காய்ச்சல். என்ன ஏதுனு ஒரு போன் போட்டு விசாரிங்களேன்.. குறைஞ்சா போய்டுவீங்க?'' என்று அவள் காலையில் சொல்ல,

''காய்ச்சல்தானே பிருந்தா.. சரியாகிடும். இதைப் போய் நான் என்னனு விசாரிக்க? நீ கேட்டிருப்ப இல்ல..'' என்று இவன் பதில் சொல்ல..

''உங்கம்மாவுக்குப் போன வாரம் அடிபட்டதே.. அதை மட்டும் கேக்கத் தெரியுது. எங்க அம்மான்னா..'' என்று துவங்கி, அவள் பேசியது.. இல்லை.. கத்தியதுதான் முதல் பாரா! திட்டத் துவங்கி விட்டால்.. வாயில் என்ன வருகிறது என்பதுகூடத் தெரியாது பிருந்தாவுக்கு!

எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறாள்? பாவம்.. வயதான காலத்தில் பாத்ரூமில் விழுந்து அடிபடுவதும், நாலு நாள் காய்ச்சலும் சமமா? அடிபட்டுக் கிடக்கும் அம்மாவைப் போய்ப் பார்த்து வரக்கூட நேரம் இல்லாமல் வேலை வேலை என்று கிடக்கிறவனிடம் பேசுகிற பேச்சா இது? இருந்தாலும் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி கேட்டான்..

''அம்மாகிட்ட பேசினியா பிருந்தா? 'பிருந்தாவைப் பேசச் சொல்லுப்பா'னு சொன்னாங்க. கீழ விழுந்ததுல நல்ல அடி.. பாவம்!'' - இவ்வளவுதான் சொன்னான். ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாள்.

''எதுக்கு விசாரிக்கணும்? இல்ல.. எதுக்குனு கேக்குறேன். சின்னதா ஒரு அடி.. அதுக்கு அவங்க அங்கருந்து டிராமா பண்றாங்க. நீங்க இங்கருந்து துடிக்கறீங்க.. கேமரா முன்னாடி நடிச்சா, ஆஸ்கர் கெடைக்கும்!''

இதற்கு மேல் அந்த இடத்தில் ஒரு விநாடி இருந்தாலும் பூகம்பம் வெடிக்கும் என அவனுக்குத் தெரியும். சட்டையை எடுத்து மாட்டியவன், விட்ட ஒரே உதையில் ஸ்டார்ட் ஆனது பைக்!

காலையில் குளிக்காமல்.. சாப்பிடாமல்.. கிளம்பிப் போனவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இரவு எட்டு மணி வரை வீம்பாக இருந்த பிருந்தாவுக்கு அதற்கு மேல் நிலைகொள்ளவில்லை. கோபமாகக் கிளம்பிப் போனாரே.. அந்தக் கோபத்தையெல்லாம் வண்டியை ஓட்டுவதில் காட்டி.. எங்காவது விழுந்து.. நினைவே உலுக்கிப் போட்டது.

வேக வேகமாக செல்போனை அழுத்தினாள்.. 'ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என்று வந்த பதிவு செய்யப்பட்ட குரல், அவள் பயத்தை அதிகப்படுத்தியது. தனேஷின் அலுவலகத்துக்கு போன் செய்தால் அடித்துக் கொண்டே இருந்தது.

மணி ஒன்பதாகி.. பத்தும் ஆக.. பதறிப் போனாள் பிருந்தா. எத்தனை கோபம் என்றாலும் இவ்வளவு நேரமாக வராமல் இருக்க மாட்டாரே!

''கடவுளே.. என் புருஷனை பத்திரமா மீட்டு வந்து குடுத்தா 108 தேங்கா உடைக்கிறேன்!'' என்று வேண்டுதலும் விம்மலுமாய் நேரம் கரைந்து கொண்டிருந்தபோதுதான் அவளுடைய செல்போன் ஒலித்தது.. அவள் தம்பியின் பெயரைக் காட்டியபடி! இந்த நேரத்தில் இவன் ஏன் போன் செய்கிறான்? ஒருவேளை இவருக்கு ஏதாவது ஆகி.. இவனுக்கு தகவல் போய்.. கடவுளே..

''ஹலோ..'' என்று சொல்ல நினைத்தாளே தவிர, கேவல்தான் முந்திக் கொண்டு வந்தது. மறுமுனையில் ஹலோ சொன்னது தம்பி அல்ல.. தனேஷ்! அவன் குரலைக் கேட்டதும்தான் உயிரே வந்தது அவளுக்கு.

நடந்தது என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டவளுக்கு அத்தனையும் கனவு போலதான் இருந்தது! வேலை விஷயமாக திடீரென்று கிளம்பி சென்னை வந்த அவள் தம்பி, ஒரு விபத்தைச் சந்தித்ததும், அரை மயக்கத்தில் அவனே போன் பண்ணி தனேஷை அழைத்ததும், தனேஷ் போய் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டதும்..

வீட்டுக்கு வருகிறவர், போகிறவரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறார் பிருந்தாவின் அப்பா..

''பிருந்தா மாப்பிள்ளைதான் சரியான நேரத்துக்கு ஆஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப் போயிருக்கார். லேட்டா போயிருந்தா ரத்தம் நிறைய வீணாப் போயிருக்குமாம். அது பெரிய ஆஸ்பிடல் இல்லியா? ஒடனே அம்பதாயிரம் ரூபா கட்டணும்னு சொன்னாங்களாம். பணத்தைப் பொரட்டி, கட்டி, ஆபரேஷன் பண்ணினா நடக்கவே முடியாம போய்டுமோனு பயந்தவனுக்கு ஆறுதல் சொல்லி, எங்களுக்கும் பதமா போனைப் பண்ணி வர வச்சு.. இவரு எங்களுக்கு மருமகன் இல்ல.. மகன்!''

'தன் குடும்பத்தின் மேல் துளிக்கூட அக்கறை இல்லை' என்று தான் முந்தின தினம்தான் குற்றம் சாட்டிய கணவனைப் பற்றி உருகி உருகி தன் தந்தை பேச, குற்ற உணர்வு தாங்காமல் அவள் கன்னங்களில் வழிந்தோடியது கண்ணீர்.
'என் கணவர் இத்தனை அன்பு நிறைந்தவரா? இல்லை இல்லை.. அன்பே உருவானவரா? இத்தனை நல்ல இதயத்தையா இந்த அளவுக்குக் காயப்படுத்தி இருக்கிறேன்! என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பேசியிருக்கிறேன்! ச்சே! நானெல்லாம் என்ன ஜென்மம்!'

அழுது கொண்டே இருக்கிறாள் பிருந்தா.

அவளுக்காவது பரவாயில்லை.. தனேஷைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்படிக்கூட ஒரு வாய்ப்பு கிடைக்காமல் எத்தனை கணவர்களோ! எத்தனை மனைவிகளோ!

நாம் எப்படிப்பட்ட துணை? யோசிப்போம்!

5 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

முதல் கருத்துச் சொல்வதில் மகிழ்ச்சி. மிக அழகான கதை. பல வீடுகளில் தினசரி நடக்கும் விடயம் என்றாலும் உணர்வு பூர்வமாக இருக்கிறது.

*இயற்கை ராஜி* சொன்னது…

unga stories ellam padichen..super ah irukku..

aanaa enga ellathilaum ladies thappu panra maathiriye eluthareenga

இராயர் சொன்னது…

பெண்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை

ஆண்கள் பெண்கள் தானே இந்த உலகம்
இது சரியான பதில் இல்லைதானே!!!

பெண்களால் தான் எல்லாமே நடக்கிறது எனபது என் நினைப்பு

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

இராயர் அமிர்தலிங்கம் கூறியது...

// பெண்களால் தான் எல்லாமே நடக்கிறது எனபது என் நினைப்பு//

மிகவும் தப்பான கருத்து இராயர். எந்த விடயத்தை எடுத்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையும் . பொறுப்பும் இருக்கணும். ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே! என்று சில ஆண்கள் தப்பிக் கொள்ளப் பார்க்கிறார்கள்....அவர்களில் ஒருவராக இருக்காதீர்கள்.

ivingobi சொன்னது…

Dear Mr Rayar.... Story superb...... last la vachinga paaru oru punch....
very good.....