சனி, 4 ஜூலை, 2009

காதல் ரகசியம்


சுமேஷூக்கு ஆபீஸில் வேலையே ஓடவில்லை. வெண்ணிலாவை இரண்டு நாளைக்கு முன் கண்மூடித்தனமாகத் திட்டியதும்.. அவள் அழுகையை நடிப்பென்று விமர்சித்ததும்.. அதனால் இந்த இரண்டு நாட்களாக அவளிடம் பேச்சு வார்த்தையே அற்றுப் போயிருப்பதும்.. அவள் தயார் செய்து வைக்கும் டிபன் பாக்ஸை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் யந்திரம் போல கிளம்பி வருவதும்.. மாறி மாறி அவனை வதைத்துக் கொண்டிருந்தன.

வெண்ணிலாவுக்கு 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்பதுதான் வேதம். தன்னைக் கொட்டிய தேளைக் கூட அடிக்க விட மாட்டாள். 'தூரத்துல எங்கயாவது கொண்டு போய் விட்டுடலாமே' என்று கெஞ்சுவாள். பிறந்த வீட்டில், இருபது லவ் பேர்ட்ஸூம், ஒரு கிளியும், மூன்று பூனைக் குட்டிகளும் வளர்த்தவள். தெருநாய்களுக்கெல்லாம் அன்னை தெரசாவாகத் தெரிந்தவள். இன்றும் அந்த அன்பு தொடர்கிறது. ஆனால், சுமேஷூக்கு இதெல்லாம் பிடிக்காது என்பதால் வீட்டுக்குள் எந்த ஜீவராசியும் பிரவேசிப்பதில்லை.

ஒன்றுமில்லை.. அன்று பக்கத்து வீட்டு நாய்க்குட்டியை வெண்ணிலாவின் கையில் பார்த்தவுடன்தான் சுமேஷூக்குள் எழுந்தது அந்தப் பேய்க் கோபம். ''நீ எக்கேடும் கெட்டுப் போ.. வீட்டுல மூணு வயசுல ஒரு குழந்தை இருக்கான்ல..? இந்த சனியன் அவனைக் கடிச்சு வச்சா என்ன பண்றது..?'' என்று ஆரம்பித்தவன், ''மிருகங்களோட பழகுறவளை மிருக ஜென்மம்னுதான் சொல்லணும்.. நீயெல்லாம் ஒரு மிருகத்தையே கட்டிக்கிட்டிருக்க வேண்டியதுதானே'' என்று தீ கக்க ஆரம்பித்தான். எல்லாம் ஆபீஸ் டென்ஷனின் பக்க விளைவுகள்தான். வீட்டுக்கு வீடு வாசப்படி!

''ச்சே.. என்ன மனுஷன் நான்..? கல்யாணமாகி அஞ்சு வருஷம் கழிச்சும் சொந்தப் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கலையே.. அவ எப்பவுமே இப்படித்தான்னு தெரியுமே.. அதுக்குப் போய் அவளை..'' அவன் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. 'இன்னிக்காவது நானே போன் பண்ணி மன்னிப்புக் கேட்டுடணும்..' விறுவிறுவென செல்போனை எடுத்தவன், வெண்ணிலாவின் எண்ணைத் தேடினான். வசந்த்.. வெங்கட்.. விஜய்.. என்ன இது? வெண்ணிலாவின் பெயரையே காணவில்லை!

'எப்பிடி..? ஒரு வேளை நான் தூங்கிட்டிருந்தப்போ அவளே எடுத்து அழிச்சிருப்பாளோ? அந்த அளவுக்கா அவளைக் காயப்படுத்திட்டோம்?' - சுமேஷூக்குக் குற்றவுணர்ச்சி தாங்க முடியவில்லை. 'ஒருவேளை, அந்த நம்பரை மனசுல வச்சிருக்கானானு டெஸ்ட் பண்றாளோ? இப்ப என்ன பண்றது?' - யோசனைகள் ஓடிக் கொண்டிருக்கும்போதே அவன் செல்போன் ஒலித்தது.

அழைப்பவரின் பெயர் வித்தியாசமாக, 'உன் செல்லம் பாவமில்ல..?' என்று நீளமாக வந்தது. எடுத்தான். மறுமுனையில் ''சாப்ட்டீங்களா?'' என்றாள் வெண்ணிலா. கள்ளி! சுமேஷூக்குத் தெரியாமல் அவன் போனை எடுத்து தன் பெயரைத்தான் இப்படி மாற்றியிருக்கிறாள். ''ஸாரி, சுமி! இனிமே நான் நாய்க்குட்டி, பூனைக் குட்டியையெல்லாம் தொடவே மாட்டேன்'' - அவளே தொடர்ந்து பேசினாள்.

'பாவி, மன்னிப்பு கேட்கும் விஷயத்தில் கூட தன்னை முந்திக் கொள்கிறாளே.. இந்த அழகான ராட்சஸி!' என்று பரவசம் பாய்ந்தது அவனுக்குள். 'கடவுளே.. இது பெட்ரூமா இருக்கக் கூடாதா' என்று மனசுக்குள் காட்டுக் கத்தல் கத்தினான். உடனடியாக ஆபீஸில் பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தான் சுமேஷ். அடுத்த நாள் காலையும் ஒரு மணி நேரம் பர்மிஷன் போட வேண்டியது வந்தது!

வெண்ணிலா எப்போதுமே இப்படித்தான். கல்யாணம் ஆனதிலிருந்து சுமேஷின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரொமான்ஸ் குறையாமல் வைத்திருந்தாள். அவனுக்குப் பிடித்தவற்றை குறித்து வைத்துக் கொண்டு சமைப்பது, ஆட்டோமொபைல் கம்பெனியில் மேலாளராக இருக்கும் அவனுக்கு, புதிதாக அறிமுகமாகவிருக்கிற கார்கள் பற்றிய செய்தியை வெட்டி எடுத்துக் கொடுப்பது.. என்று தனது அன்பால் ஒவ்வொரு நாளையுமே அசத்தி விடுவாள்.

இத்தனை செய்கிறவளுக்கு சுமேஷ் என்னதான் பரிசு தருவான்? வெறும் புடவையும் நகையுமா? இல்லை! வித்தியாசமாக ஒன்று தர ஆசைப்பட்டான். அதற்காகத்தான் ஒரு நாள் திட்டமிட்டான்.

''டி.நகர் வரை வர்றேல்ல.. அப்பிடியே ஒரு ஆட்டோ எடுத்துட்டு என் ஆபீஸ்க்கு வந்திடு. ரெண்டு பேருமா சேர்ந்து வீட்டுக்குப் போய்டலாம்'' என்று காலையிலேயே அவன் கட்டளையிட, அவள் குழந்தையும் ஷாப்பிங் கவர்களுமாக அங்கு போய்ச் சேர்ந்தாள்.

வாசல் வரை வந்து உள்ளே அழைத்துப் போனவன், தன் அறைக்குள் தன் ஸீட்டின் மீது வெண்ணிலாவை உட்கார வைத்து அழகு பார்த்தான். அந்த இருக்கைக்குப் பக்கத்திலேயே ஒரு கண்ணாடி ஜன்னல், 'அது மூன்றாவது மாடி' என்பதை அறிவித்தது. அந்த வளாகத்திலேயே உள்ள மாமரம் ஒன்று தன் கிளைகளால் அந்த ஜன்னலை வருடியிருந்தது. ''குட்டிப் பையா.. மாங்கா பாரு..'' என்று ஜன்னலைக் காட்டி, குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதில் மும்முரமானாள் வெண்ணிலா.

''நிலா.. அந்த டிராவைத் திறயேன்'' என்றான் சுமேஷ்.

திறந்தால் அதற்குள் கவர் பிரித்த ஒரு பாப்கார்ன் பாக்கெட் இருந்தது. அதிலிருந்து ஒன்றிரண்டு பாப்கார்ன்களை எடுத்தான். கண்ணாடி ஜன்னலை லேசாகத் திறந்து, சற்று நீண்டிருக்கும் ஸ்லாபில் அந்த பாப்கார்னை வைத்து மூடினான்.

''வெய்ட் பண்ணு.. சில விருந்தாளிங்க வருவாங்க'' என்று அவன் சொல்லி முடிக்கும் முன், பெரிய்ய்ய்ய வாலை ஆட்டியபடி ஓடி வந்தார்கள் அந்த விருந்தாளிகள். பாப்கார்னை தங்கள் முன்னங்கால்களால் எடுத்துச் சாப்பிட்ட அந்தச் சின்னஞ்சிறிய அணில்களை.. திறந்த வாயும் விரிந்த கண்களுமாகப் பார்த்த நிலா சந்தோஷத்தில் தன்னை மறந்து குதித்தே விட்டாள்.

வீடு திரும்புகிற வழியெல்லாம் அணில் பேச்சுத்தான்! ''ச்சே! என்ன அழகு சுமி..! ஒருமுறை டி.வி-யில மட்டும்தான் அணிலை இவ்வளவு க்ளோஸா பார்த்திருக்கேன். ச்சோ ச்வீட்.. ஐ லவ்யூடா'' எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். தாமதமாகத்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது.

'சுமி.. உங்களுக்குத்தான் இந்த ஸில்லி ஜீவன்களைப் பிடிக்காதே.. இப்படி பாப்கார்ன் போட்டு ரசிக்கிறதெல்லாம் எப்போத்துல இருந்து?'' என்றாள் அவள். பைக்கைக் கொஞ்சம் ஸ்லோ செய்து, ஹெல்மெட் கண்ணாடியை எடுத்து விட்டுக் கொண்டு அவன் சத்தமாக பதில் சொன்னான்.. ''கல்யாணம் ஆனதுல இருந்து!''

''கடவுளே இது பெட்ரூமா இருக்கக் கூடாதா?'' - வாய்விட்டே சொல்லிவிட்டாள் வெண்ணிலா!!

.


4 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

ஹலோ! இது நீங்கள் எழுதினதா என்று முதலில் சொல்லுங்கள். பிறகு கருத்துப் போடுகிறேன்.

இராயர் சொன்னது…

ஹலோ!! முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.
இங்கே நான் பகிர்ந்து கொள்வது அனைத்தும் படித்ததில் பிடித்தது மட்டுமே!!
நல்ல கருத்துக்கள் நண்பர்களை அடைவது மிக்க மகிழ்ச்சி

ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்!!


அன்புடன்
இராயர்

FunScribbler சொன்னது…

நல்ல கதை!:)

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

ஹலோ ராயர், கதை மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் தான் எழுதினதோ என்று அறியத்தான் கேட்டேன். நீங்கள் தப்பாக எடுத்து விட்டீர்களா?