
"நான் 5.10... நீ 5.2. ஹய்யோ... ஹீல்ஸாச்சும் போட்டுக்கக் கூடாதா?''
"அத போட்டுட்டு நடக்கத் தெரியாதே. ஏற்கெனவே ஒரு தடவை ஸ்லிப் ஆயிருக்கேன்.''
"இது என்ன 'தொளதொள'னு சுடிதார். டைட்டா தைச்சுப் போடத் தெரியாதா?''
"உடம்பைப் பிடிக்கற மாதிரி சுடிதார் போடுறதெல்லாம் எனக்குப் பிடிக்காதுப்பா..!''
- இப்படியாக ரகுவின் எதிர்பார்ப்புகளும் சுமதியின் நழுவல்களும் நீண்டன.
விளைவு.. 'அவசரப்பட்டுட்டோமோ... சென்னையில வளர்ந்த பொண்ணாப் பார்த்து கல்யாணம் செஞ்சிருக்கலாமோ?' என்று மனதுக்குள் தடுமாறினான் ரகு.
அவனுடைய மேனேஜர் ஸ்ரீராம், அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தவர். அவருடைய மனைவி சென்னையில் படித்து வளர்ந்தவர். "ரகு... ஸாரி, உங்க கல்யாணத்துக்கு வர முடியல. நாளைக்கு சாயங்காலம் நானும் என் வொய்ஃபும் உங்க வீட்டுக்கு வர்றோம். லைட்டா ஏதாச்சும் டின்னர் போதும். செய்வாங்கதானே உங்க மனைவி..?''
- ஸ்ரீராம் கேட்டபோது ரகுவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் பொங்கினாலும், இவர்களுக்கு முன் பெருமையுடன் நிறுத்துமளவுக்கு சுமதி இல்லையே என்று தயங்கினான். இருந்தாலும் மறுக்கமுடியாமல், "வித் பிளஷர் சார்'' என்றான்.
ஸ்ரீராம் தம்பதிக்காக காத்திருந்த நேரத்தில், ஒரு தட்டில் ஜாக்கெட், குங்குமம், மஞ்சள், வெற்றிலை, பாக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுமதி.
"எதுக்கு இது..?'' - வெறுப்பாகக் கேட்டான் ரகு.
"முதல் முதலா உங்க மேனேஜர் வொய்ஃபோட வீட்டுக்கு வர்றாங்க. அவங்களுக்கு வச்சு கொடுக்கத்தான்..."
தலையில் அடித்துக் கொண்டான் ரகு. "அதெல்லாம் வேணாம். அவங்க உன்ன மாதிரி ஜாக்கெட் எல்லாம் போட மாட்டாங்க. எப்பவும் மாடர்ன் டிரெஸ்தான்'' - சுமதியை சுருக்கெனக் குத்தினான்.
"ஜாக்கெட் போடுறாங்களோ இல்லையோ, வர்றவங்களுக்கு வெச்சு கொடுக்கணும்கிறது சம்பிரதாயம்.''
"சொன்னா கேளு. என்னைக் கேவலப்படுத்தாத...''
'க்க்க்ர்ர்ர்ர்ர்....'
காலிங் பெல் அழைப்பு இருவரின் வாதத்துக்கு பிரேக் போட்டது.
'ஹாய்', 'பா....ய்' என்றே பழக்கப்பட்டுவிட்ட மானேஜர் தம்பதிக்கு... இரண்டு கையையும் சேர்த்து வணக்கம் சொல்லி சுமதி வரவேற்றது, பூரி, புலாவ் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்கு இட்லி, வடை செய்திருந்தது, மருந்துக்குக்கூட ஒரு சில வார்த்தைகளாவது ஆங்கிலத்தில் உரையாடாதது, கிளம்பும்போது விடாமல் அந்த ஜாக்கெட் அயிட்டங்களை தட்டில் வைத்துக் கொடுத்தனுப்பியது என... எல்லாவற்றையுமே ரகு தலைகுனிவாக உணர்ந்தான். மறுநாள் அலுவலகத்தில் நிறைந்த சங்கடங்களுடன் மானேஜர் ஸ்ரீராமை எதிர் கொண்டான்.
"என்ன சொன்னாங்க என் சிஸ்டர்'' என்றார் ஸ்ரீராம்.
சற்றே தடுமாறினான் ரகு.
"அதாங்க.. உங்க வொய்ஃப்! நேத்து எங்களை அவ்ளோ உரிமையா அண்ணா, அண்ணினு வாய் நிறைய உறவு சொல்லி கூப்பிட்டாங்க. அவங்க வீட்டைப் பத்தி அவளோ அழகா பேசினாங்க. ரொம்ப ஹோம்லி. எல்லாத்தையும்விட, நாங்க புறப்படும்போது அவங்க அன்பா கொடுத்த அந்த தாம்பூலம்... வெரி நைஸ்! என் வொய்ஃப்கூட அவங்களோட வேர்க்கடலை சட்னிக்கு ஃப்ளாட் ஆயிட்டா. யூ ஆர் வெரி லக்கி ரகு'' என்றபடியே இறுக்கமாக கைகொடுத்து ரகுவை அனுப்பினார் ஸ்ரீராம்.
தன் ஸீட்டில் வந்து அமர்ந்தவனுக்கு அந்த 'ஹோம்லி' சுமதியின் அழகு புலப்படத் தொடங்கியது; அசுர வேகத்தில் அது அவன் நெஞ்சமெல்லாம் படர்ந்தது. மனதுக்குள் அவளை ஒருமுறை ஆரத்தழுவினான். பத்தவில்லை. ஆபீஸ் எப்போது முடியும் என வாட்சையே பார்த்துக் கிடந்தான்!
0 comments:
கருத்துரையிடுக