செவ்வாய், 12 அக்டோபர், 2010

வானவில் தரைதொடல் தகுமோ?--தஞ்சாவூர்க்கவிராயர்

வானத்தின் மீது ஒரு பெரிய குடையைக் குபுக்கென்று விரித்த மாதிரி இருட்டிக்கொண்டு குவிந்தன மேகங்கள்.

இருட்டிக்கொண்டு வருகிற மேகங்களைப் பார்க்கும்போது, எங்கோ படித்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கைதான் ஞாபகத்துக்கு வரும்.

மேற்கு வங்காளத்தில் காமார்புகூர் என்ற சிற்றூர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை வயல்கள். வரப்பின் மீது ராமகிருஷ்ணர் போகிறார். மேலே வானம் கும்மென்று இருட்டிக்கொண்டு வருகிறது. அண்ணாந்து பார்க்கிறார். மேகங்களின் இருட்டுப் பின்னணியில் வெள்ளை வெளேர் என்ற கொக்குகள் கூட்டமாகப் பறந்து போகின்றன. அந்தக் காட்சி தந்த பரவசம் தாங்காமல், அப்படியே மூர்ச்சையாகி விழுந்துவிடுகிறார். சாதகம் ஏதும் செய்யாமலே சமாதிநிலை அடைந்துவிடுகிறார் ராமகிருஷ்ணர்.



பரமஹம்சர், தெய்விகப் புருஷர். நான் வெறும் அரசாங்க குமாஸ்தா. அவருக்கு மழை, இறைவனைக் காட்டியது. எனக்குத் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் வராந்தாவைக் காட்டியது.

சடசடவென மழைத் துளிகள். ஓடிப் போய் ஒதுங்கினேன். திடீரென்று பெருமழை பிடித்துக்கொண்டது. என்னைப்போலவே அங்கே மழைக்கு ஒதுங்கிய மனிதர்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் மழையை ரசிக்கிறவர்களாகத் தெரியவில்லை.


தாங்கள் பார்க்க வேண்டிய வேலையை மழை வந்து கெடுத்துவிட்ட எரிச்சல் மண்டிய முகங்கள். மழை, அங்கே நிற்கிறவர்கள் மனதில் என்னைப் போலவே பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டிருக்குமா என்று தெரியவில்லை.


ஒரு மழை நாளில்தான் அம்மா செத்துப்போனாள். வானத்தில் இருந்து என் கண்ணீர் தாரைதாரையாக ஊற்றியது. ஒரு மழை நாளில்தான் எங்கள் வீட்டில் தங்கச்சிப் பாப்பா பிறந்தது. அடை மழை. தரையில் சாக்கை விரித்து அதன் மீது பழம்புடவையைப் போட்டு தங்கச்சிப் பாப்பாவைப் படுக்கவைத்தார் அப்பா. கொட்டும் மழையில்தான் ரிசல்ட் பார்க்கப் பள்ளிக்கு ஓடினேன். நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். சொட்டச் சொட்ட மழையில் நனைந்துகொண்டே வந்தேன். சந்தோஷ மழை!

மழைக் கால மதியம் ஒன்றில்தான் உதயராணி என்னைப் பார்த்துச் சிரித்தாள். மழைதான் அவள் மனசில் காதலை விதைத்து இருக்க வேண்டும். சிரித்ததோடு நின்றுவிடாமல் கையில் ஒரு காகிதத் துண்டைத் திணித்துவிட்டும் போனாள்.

அதில் ஒரே ஒரு வரிதான் இருந்தது. 'நாளை காலேஜுக்கு வரும்போது அந்தக் கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டு வா.'

20 வருடங்கள் ஓடிவிட்டன. ''எப்பப் பாரு கட்டம் போட்ட சட்டைதானா? சரியான பைத்தியம்!'' - ஒவ்வொரு தடவை புதுச் சட்டை வாங்கும்போதும் எரிச்சல் அடைவாள் என் மனைவி.

இந்த மழை, உதயராணி வசிக்கும் ஊரிலும் பெய்யுமா? என்னைப்போலவே அவளும் இந்த நிமிஷம் மழையை ரசித்துக்கொண்டு இருப்பாளா... கூடவே, என் நினைவையும்?

மழை நாளில்தான் என் வாழ்வின் அசாதாரண சம்பவங்கள் நிகழ்கின்றன. அன்றும் அவ்விதமே நேர்ந்தது.

தற்செயலாகத்தான் திரும்பினேன். வங்கியின் பெரிய கண்ணாடித் தடுப்பு சாலையைப் பார்த்தபடி இருந்தது. உள்ளே நேர்த்தியான மேலாளர் அறை. நீல வண்ணச் சுவர்கள். தள்ளிவிடப்பட்ட திரைச் சீலைகளைத் தாண்டி, சுழல் நாற்காலியில் ஒரு பெண்மணி. களையான முகம். ஆனால், எங்கோ பார்த்த முகம். அவரும் என்னைப் பார்ப்பதுபோல் ஒரு பிரமை!

அவர் தற்செயலாகப் பார்த்து இருக்கலாம். நாமும் பார்த்தால் இங்கிதமாக இருக்காது என்று முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

சாலைக்கு மறுபுறம் இருந்த டெலிபோன் பூத்தில் என் பார்வை லயித்தது. ஓர் இளம்பெண் டெலி போனை முகத்தோடு ஒட்டவைத்துக்கொண்டு சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள். கண்ணாடித் தடுப்பு வழியே அழகான புகைபடிந்த ஓவியமாகத் தெரிந்தாள். கையில் நிறைய ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றிவைத்திருப்பாள் போல. ஒவ்வொரு நாணயமாகப் போட்டுக்கொண்டே இருந்தாள். மறுபுறம் பேசுகிறவன் கையில் அந்த நாணயங்கள் சிரிப்புச் சிரிப்பாக மாறி விழுந்து கொண்டே இருப்பதுபோல் எனக்குள் ஒருநினைவுத் திருவிழா.

சட்டென்று, 'சார் ஒரு நிமிஷம்' என்ற குரல் கேட்டது. திரும்பினேன். வெள்ளைச் சீருடை அணிந்த வங்கிச் சிப்பந்தி.

''உங்களை மேடம் உள்ளே கூப்பிடறாங்க!'' - சிப்பந்தி, வங்கி மேலாளர் கேபினைச் சுட்டிக் காட்டினார்.

'என்னை ஏன் அந்தப் பெண்மணி அழைக்க வேண்டும்?' - நான் தயங்கியபடியே சிப்பந்தியைப் பின்தொடர்ந்து வங்கி மேலாளர் அறைக்குள் நுழைந்தேன்.

மேலாளர் எழுந்து நின்று, ''வணக்கம் சார்! உட்காருங்கள்!'' என்றதும் எனக்கு ஒன்றும் புரிய வில்லை. உட்கார்ந்தேன்.

''என்ன சாப்பிடுறீங்க... காபியா, டீயா?'' சிரித்த படியே கேட்டார்.

''மேடம், நீங்க என்னை வேறு யாரோன்னு...''

''யாரோவா, நீங்க மிஸ்டர் ராமகிருஷ்ணன் தானே?''

புன்னகைத்தேன். ''நான் ராமகிருஷ்ணன்தான். உங்களைத்தான் சட்டென்று என்னால்...''

அதற்குள் அழகான கப் அண்ட் சாஸரில் காபி வந்துவிட்டது.

''முதலில் காபி சாப்பிடுங்கள்.''

நான் காபி சாப்பிடுவதைப் புன்முறுவலுடன் ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார் அந்தப் பெண்மணி. எனக்குக் கூச்சமாக இருந்தது.

''நான் கலாராணி. உதயராணியின் தங்கை. இப்ப வாவது ஞாபகம் வருதா சார்?''

மழை, மண் வாசனையை ஞாபகப்படுத்துவது போல் இருந்தது. சிரித்துவிட்டேன். ''நம்பவே முடி யலீங்க! உதயாவின் கையைப் பிடிச்சுக்கிட்டு வரு வீங்க. ஏழாவதோ, எட்டாவதோ படிச்சுட்டு இருந் தீங்கல்ல..?''

''வா, போன்னே சொல்லுங்க. உங்களுக்கு அந்த உரிமை இருக்கு. நீங்க பார்த்த அதே எட்டாங்கிளாஸ் பொண்ணுதான். இப்படி மாறிட்டேன். உங்க சாயல் மாறவே இல்லை சார்! அப்புறம் இந்தக் கட்டம் போட்ட சட்டை!''

இரண்டு பேரும் சேர்ந்து சிரித்தோம். ''எல்லாம் ஞாபகம் வெச்சுக்கிட்டா இருக்கீங்க?''

''எப்படி சார் மறக்க முடியும்? அக்காவோட விஷயம் எல்லாம் எனக்குத் தெரியும்!''

நான் தலையைக் குனிந்துகொண்டேன்.

''உதயாவோட கையைப் பிடிச்சுக்கிட்டு எங்க பார்த்தாலும் வருவீங்கதானே?'' என்றேன்.

''அவதான் என்னை இழுத்துக்கிட்டு அலைவா! இதுல கொடுமை என்னன்னா, உங்களைப் பார்க்க வும் பெரிய கோயில், பூங்காவுக்கெல்லாம் என்னைக் கூட்டிட்டு வருவா!''

''ஆமாம்!'' - நெளிந்தேன்.

''நான் ஒருத்தி நடுவில் இருக்கேன்னு கவலையே படாம ரெண்டு பேரும் பேசிட்டிருப்பீங்க. ஒரு மாதிரி தலையைச் சாய்ச்சுக்கிட்டே நீங்க பேசறதைக் கேட்கக் கேட்க... ஆசையா இருக்கும். ஆனா, நீங்க சொல்றதைக் காதுல வாங்கிக்காத மாதிரி அக்கா பெரிய கோயில் பிராகாரத்துல புல்லைப் பிச்சுப் பிச்சுப் போட்டுக்கிட்டு இருப்பா!''

கலாராணியின் விழிகளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். தொடர்ந்தார்... ''இப்பவும்தான் இருக் குதுங்களே பசங்க. பஸ்ஸிலும் ரயிலிலும் இவங்க அடிக்கிற லூட்டி... பார்க்கும்போதே பத்திக்கிட்டு வருது. பப்ளிக் பிளேஸ்ல இப்படிப் பண்றமேன்னு துளிகூட லஜ்ஜை இல்லாம...'


கலாராணியின் பேச்சைக் கேட்டு எனக்குள் மின்னல்கள். ''நீங்க ஜென்டில்மேன் சார்! அக்கா கையைக்கூடத் தொட்டது இல்லை. ரொம்ப அழகா கவிதை எழுதிஅக்காகிட்ட காண்பிப்பீங்க. உங்க ரசிகை சார் நான். உங்க கவிதைகள், கடிதங்களை எல்லாம் அக்காவுக்குத் தெரியாம எடுத்துப் படிச் சுடுவேன். நீங்க எழுதினது லவ் லெட்டர் மாதிரியே இருக்காது. ரொம்ப டீஸன்ட்டா இருக்கும். ஆனா, என்னை நீங்க கண்டுக்கவே மாட்டீங்க. என்னை ஒரு அச்சுப்பிச்சுன்னு நினைச்சிருப்பீங்க!''

''அப்படில்லாம் இல்லீங்க.''

''அக்கா உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக் கும்னு நான் ஆசையா இருந்தேன். நீங்க எங்க குடும் பத்துல ஒருத்தரா ஆயிடுவீங்கன்னு நினைச்சேன்!''

''என்ன பண்றது? நான் கொடுத்துவெச்சது அவ்வளவுதான்!'' - மெதுவாகச் சொன்னேன்.

''நோ சார்! எங்க அக்காவுக்குதான் கொடுப்பினை இல்லை. பெரிசா தியாகம் பண்றதா நினைப்பு அவளுக்கு. அப்பா காட்டினவனுக்குக் கழுத்தை நீட்டிட்டா! முட்டாள்தனம் சார். நானும்தான் அன்னிக்கு இருந்தேனே... சட்டுனு சொல்லிட்டா 'என்னை மறந்துடுங்க'ன்னு. உங்க மனசு என்ன பாடுபட்டிருக்கும்?''

எனக்கு இன்னொரு கப் காபி தேவைப்பட்டது. நினைவுகள் மேலெழும்பித் தொண்டையை அடைப்பதுபோன்ற உணர்வு. அவற்றை எப்படி விழுங்கித் தீர்ப்பது?

கலாராணி பஸ்ஸரை அழுத்த, சிப்பந்தி வந்தார். ''இன்னொரு கப் காபி வேணும்... சாருக்கு மட்டும்!''

எனக்கு உடம்பு சிலிர்த்தது. இந்தப் பெண் அப்படியே மனசைப் படித்துவிட்டதே!

''நீங்க ஒண்ணுமே பேசலை. 'உதயா, நீ நல்லா இருக்கணும். இருப்பே'ன்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டீங்க. அக்காகிட்ட, 'என்ன இப்படிப் பண்ணிட்டியே?'ன்னு கேட்டேன். உங்களைக் கல் யாணம் பண்ணிக்கிட்டா எங்களைக் கரை ஏத்த முடியாதாம். இந்தப் புத்தி முன்னாடியே இருந் திருக்கணும். கடைசியில என்னாச்சு தெரியுமா?''

''என்னாச்சு?'' - பதற்றத்துடன் கேட்டேன்.

''எங்க வீட்டுல அக்காவைத் தவிர, யாருக்குமே கல்யாணமாகலை!''

''ஏன்... ஏன்..?''
''என்னோட மத்த ரெண்டு அக்காக்களுக்கும் உடம்பு சரியில்லாமப்போச்சு. நிரந்தர நோயாளி கள்!''

''நீங்க ஏன் பண்ணிக்கலை?'' - கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டேன்.

''சிம்பிளி நாட்! கல்யாணத்தை எல்லாம் தாண்டி வெகுதூரம் வந்தாச்சு. ஆனா, ஓர் உண்மை இருக்கு. அதை உங்களுக்கு மட்டும்தான் சொல்வேன்!'' சிரித்தாள்.

''சொல்லுங்க!''

''உங்களை மாதிரி ஜென்டில்மேன் கிடைக்கலை சார்!''

''ஓ... காட்! திஸ் இஸ் டூ மச்!'' - சிரித்தேன்.

''உங்களைப்பத்திச் சொல்லுங்களேன், சார்!''

''ஒரு பெண், ஒரு பையன். பெண், டென்த் படிக்கிறா. பையன், எட்டாவது!'' என்ற நான் தவிப்புடன் கேட்டேன்... ''உதயராணி...''

''இங்கே சென்னையிலதான் இருக்கா! ரெண்டு பெண் குழந்தைகள். கொடைக்கானல் கான்வென்ட்ல படிக்குதுங்க. அப்புறம் ஒரு துயரச் செய்தி. உதயாவோட கணவர் கால மாயிட்டார். அவ தனியா தான் இருக்கா!''

''அப்படியா?''

''உங்களைப்பத்தி அடிக்கடி பேசிக்கிறது உண்டு. நான்தான் பேசுவேன். 'அது முடிஞ்சுபோன கதை. அதை ஏன்டி ஞாபகப் படுத்திட்டே இருக்கே?'ம்பா!''

''அக்கா சொல்றது சரிதானே?''

''பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது ரொம்ப ரிலீஃபா இருக்கு, சார்! அந்த ஞாபகங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும்போது ரிஜுவனேட்டிங்கா இருக்கு!''

''யு ஆர் ரைட்!''

''ஒண்ணுசொல்லட்டுமா? உங்க மேல, உங்க எழுத்து மேல எனக்கு ஒரு அட்மிரேஷனே உண்டு. அப்புறம் உங்க நடை உடை பாவனைகள். யு வேர் எலிகண்ட் இன் தோஸ் டேஸ்! ஒரு அசப்புல கல்யாண்குமார் ஜாடை இருக்கும். இப்பவும்தான். ஆனா என்ன, வயசான கல்யாண்குமார்!''

ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். மழை நின்றுவிட்டு இருந்தது.

''நான் புறப்படறேன். உங்களைச் சந்திச்சது ரொம்ப சந்தோஷம்!''

கலாராணியின் முகம் வாடிவிட்டது. ''அக்கா வோட மொபைல் நம்பர் இருக்கு... தரட்டுமா?''

நான் கலாராணியின் ஊடுருவும் பார்வை யைத் தவிர்த்துவிட்டுச் சொன்னேன்... ''வேண்டாமே! நீங்க சொன்னதுதான் சரி. இந்தச் சந்திப்பு நமது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள மட்டுமே. அவற்றைப் புதுப்பிக்க அல்ல; சரிதானே?''

கலாராணி கை கூப்பினார். ''சின்ன வயசில் நான் அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு உங்களை அண்ணாந்து பார்ப்பேன். உயரமாகத் தெரிவீங்க. இப்போதும் உங்களை அண்ணாந்துதான் பார்க்கிறேன். பெஸ்ட் விஷஸ்!''

வங்கியைவிட்டு வெளியே வந்தேன். வானம் வெளுத்திருந்தது. ஆனால், என்ன ஆச்சர்யம்!

அழகான பிரமாண்டமான வானவில் வானத்தை அலங்கரித்து இருந்தது!


செவ்வாய், 29 டிசம்பர், 2009

மஹா பலி -சுஜாதா

கிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்' என்று ஆர வாரத்துடன் போட்டோ பிடித் துக்கொள்ள... சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப்பள்ளி'யின் ஆசிரியை கள் டீசல் வேனில் இருந்து உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்துவத்தை விளக் கும்வகையில், ''இங்கதான்டி 'சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளிச் சத்தம் எதிரொலிக்க, பிள்ளையார்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்ட்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?'

இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன் கரைக் கோயிலின் அருகில் வந்து கடற்கரைப் பக்கம் சென்றான். 1200 வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான்.

''கேமரா வேணுங்களா... நிக் கான், ஜப்பான்... ரேபான் கண் ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?''

அவன் மௌனமாக இருக்க,

''செருப்பு வேணுங்களா? ஜோடி இருபது ரூபாதாங்க... கோலாப்பூரி...''

''.....''

'பேச மாட்டீங்களா?''

அவனுக்குப் பள்ளிச் சிறுவன் போல அறியாத முகம். கருநீலத் தில் தொளதொள சட்டை அவன் சிவந்த நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. முதுகில் பட்டைவார் இறுக்கி பை வைத்திருந்தான். ஒருவேளை வடக்கத்திக்காரனாக இருப்பானோ என்று ''சேட், பந்த்ரா ரூபாய் மே லேலோ போணி!'' என்றான் செருப்பு விற்ற சிறுவன்.

அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்துவிட்டு, கடலலைகளின் கோபத்தை மழுப்ப அமைக்கப்பட்ட கருங்கல் தடைகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தவரை அணுகினான்.

''எக்ஸ்கியூஸ் மி...''

அவர் திரும்ப, ''புரொஃபசர் சந்திரகுமார்?''

''யெஸ்...''

''என் பெயர் அஜய். நான்தான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந் தேன். செக்ரெட்டரிக்கு விளம் பரம் கொடுத்திருந்தீர்கள்.''

''ஓ! நீதானா அது? 'யங்'காக இருக்கிறாயே?!''

''எனக்கு 25 வயது!''

''எனக்கு ஏறக்குறைய 70'' என்றார். ''கண்தான் சரியாகத் தெரியவில்லை. ராத்திரி கார் ஓட்ட முடியவில்லை. பொய்ப் பற்கள்... ஒருமுறை 'பைபாஸ்' ஆகி விட்டது. கடன் வாங்கின ஆயுள்!''

''மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ்'' என்றான்.

கரைக் கோயிலின் கோபுரத்தைச் சிரத்தையாக அமிலம்வைத்துச் சுத்தம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

''ஒரு வருஷமாவது இருப்பதாக வாக்களித்தால்தான் உனக்கு வேலை. சான்றிதழ்களை அப்புறம் பார்க்கிறேன். என் புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும்... பிரசுரகர்த்தர்கள் கெடு.''

''என்ன புத்தகம்?''

புல் போர்வையையும் கம்பி கேட்டையும் கடந்து சாலை நோக்கி நடந்தார்கள்.

''பல்லவர் காலச் சிற்பக்கலை பற்றி ஓர் அந்தரங்கப் பார்வை...''

பஸ் நிறைய மாணவர்கள் இறங்கி, விநோதமான 'போஸ்'களில் படம் பிடித்துக்கொண்டு, ''என்ன மச்சி... கலர்ஸ் எல்லாம் ஒரு பக்கமா ஒதுங்கிருச்சு!''

''இவர்களுக்கா பல்லவச் சிற் பக் கலை பற்றிச் சொல்லப்போகி றீர்கள்?''

''ஏன்?'

''பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உண வகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசாரமற்றது.''

''நீயும் இந்தத் தலைமுறைதானே?''

''ஆம். ஆனால், வேறு சாதி.''

அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ''பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?''

''கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து இருக்கும் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக் கலை பற்றியும் தெரியும்.''

அவர் அவனைச் சிநேகபாவத்துடன் பார்த்து, ''ஐ லைக் யூ!''

''எப்போது வேலைக்கு வர லாம்?''

''இப்போதே என்னுடன் வா... உன் பைகள் எல்லாம் எங்கே?''

''எல்லாம் என் முதுகுக்குப் பின்னால்!''

''இவ்வளவுதானா?''

''இதில்கூடப் புத்தகங்கள்தான் அதிகம்.''

''செஸ் ஆடுவாயா?''

''சுமாராக.''

''சுமாராக ஆடி என்னிடம் தோற்பவர்கள்தான் எனக்கு வேண்டும். பேசப் பேச உன்னைப் பிடித்திருக்கிறது. லூயிஸ் தாமசும் படிப்பேன் என்று சொல் லாதே...''

''மெடுஸா அண்ட் தி ஸ்னெய்ல்"

'கிரேட் யங்மேன். உன்னை எனக்கு நிச்சயம் பிடித்துவிடப் போகிறது. என் பெண் வினிதா சம்மதித்தால் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவேன்.''

இருவரும் வெளியே சாலைக்கு வர, அவர் கார் அருகில் சென்று, ''மாருதி ஓட்டுவாயா?''

''நான் ஓட்டாத வாகனமே இல்லை!'' என்று சிரித்தான்.

''சிகரெட் பிடிப்பாயா?''

''இல்லை.''

''கல்யாணம் ஆகிவிட்டதா?''

''இல்லை.''

''பர்ஃபெக்ட்! சம்பளம் எத்தனை வேண்டும்?''

''உங்கள் இஷ்டம்.''

மாருதி காரைத் திறந்து, முதுகுச் சுமையைப் பின் இருக்கைக்குத் தள்ளிவிட்டு, முன்னால் ஏறிக் கொண்டான்.

''ஓட்டுகிறாயா?''

''இல்லை, இந்தப் பிரதேசமே எனக்குப் புதிது.''

''எந்த ஊர் நீ?''

''எதும் என் ஊர் இல்லை.''

கடற்கரையோரம் சென்றபோது மௌனமாக வந்தான். அருச்சு னன் தவத்தைக் கடந்து, கல்பாக் கம் சாலையைத் தவிர்த்து, ஊருக்கு வெளியே சென்று நீல, மஞ்சள் நைலான் வலைகளையும், மீன் நாற்றத்தையும் கடந்து கடலோர வீட்டு வாசலில் சென்றபோது, வெள்ளைச் சடை நாய் வந்து வாலை ஆட்டியது.

''அமைதியான இடம்... இவன் பெயர் ஸ்னோ. இங்கேயே இருப் பதில் உனக்குத் தயக்கம் ஏதும் உண்டா?''

''இல்லை.''

''அலை ஓசை பழகிவிடும். மாடியில் என் மகனின் அறை இருக்கிறது. எடுத்துக்கொள். மகன் அமெரிக்காவில் இருக்கிறான், டெக் நிறுவனத்தில். மகள் சென்னையில் படிக்கிறாள். விடுமுறைக்கு வருவாள்.''

''அப்படியா?!'' - உள்ளே வந்து சித்திரங்களைப் பார்த்தான்.

''யாருக்கு ஷகால் பிடிக்கும்?''

''எனக்கு. உனக்கு..?''

''கன்டின்ஸ்கி.''

''ஏதோ ஒரு விதி என்னிடம் கொண்டுசேர்த்திருக்கிறது உன்னை. நான் இதுவரை தேடிய ஆதர்ச இந்திய இளைஞன் கிடைத்துவிட் டதுபோலத் தோன்றுகிறது.''

அவன் புன்னகைத்தான். ''மிகைப்படுத்துகிறீர்கள்...''

'எதுவரை படித்திருக்கிறாய்?''

''கல்லூரிக்கு முழுதும் போகவில்லை. படிப்பு தடைப்பட்டுவிட்டது. பி.ஏ. ஹிஸ்டரி படித் தேன்.''

''எங்கே படித்தாய்?''

''லண்டனில்.''

''விட்டுவிட்டாயா?''

''ஆம். பெற்றோரை ஒரு விபத் தில் இழந்த பின்...''

அவன் பையிலிருந்து சாமான் களை எடுத்துவைத்தான். பெரும் பாலும் புத்தகங்கள்... 101 கவிதை கள், லையால் வாட்ஸன் கட்டு ரைகள், ரயில்வே அட்டவணை, சதுரங்கம் பற்றிய பாபி ஃபிஷரின் புத்தகம், 'தி டவ் ஆஃப் பவர்', மெக்கியாவல்லியின் 'பிரின்ஸ்', மோதியின் 'ஜூரிஸ் புடன்ஸ்'...

''உன்னை வகைப்படுத்த முடியவில்லை.''

மறுபடி புன்னகைத்தான். பதில் சொல்ல விரும்பாதபோதெல்லாம் மையமாகப் புன்னகைப்பான் என்பது புரிந்தது.

முதல் மாதத்தில் அவன் முழுத் திறமையும் படிப்படியாகப் புரிந்தது.

அஜய் ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டுக் கொடுப்பான். சந்திரகுமாருக்குத் தேவையான ஐஸ் டீ, லெமன் கார்டியல் தேன் கலந்து கொடுப்பான். இரவு அவர் எழுதிவைத்திருப்பதை எல்லாம் பிழையே இன்றி மிகச் சுத்தமாக எலெக்ட்ரிக் டைப்ரைட்டரில் அடித்துக் கொடுத்துவிடுவான். ஒன்றிரண்டு திருத்தங்கள்தான் இருக்கும். புத்தகத்தின் உள்ளடக் கம் பற்றிப் பேசவே மாட்டான். மாலை செஸ் ஆடுவார்கள். ஒரு நாள் அவன் தோற்பான். ஒரு நாள் இவர்... சில நாள் ட்ரா!

ராத்திரி அவருக்குக் கண்பார்வை மங்கியதால், படித்துக்காட்டினான். ஒருநாள், ''மாறுதலுக் காக ஏதாவது உன் புத்தகத்தில் இருந்து படித்துக்காட்டேன்'' என்றார்.

''என் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்காது.''

''நான் தற்போது எழுதும் புத்தகத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?''

''இது நம் நாட்டுக்குத் தேவைஅற்றது.''

''எப்படிச் சொல்கிறாய்?'' என்றார் கோபப்படாமல்.

''மகேந்திரன் கட்டிய தூணுக் கும் ராஜசிம்மன் கட்டிய தூணுக் கும் வித்தியாசங்கள் பற்றி ஒரு அத்தியாயமே விளக்கும் புத்தகத் தால் இன்றைய இந்தியாவுக்கு என்ன பயன்?''

''நம் கலாசார மரபு தெரிய வேண்டாமா?''

''தெரிந்து..?''

''நம் இந்தியாவை ஒன்றுசேர்த்த இந்த மரபு இப்போது தேவை இல்லை என்கிறாயா?''

''இந்தியா ஒன்றல்ல! இந்த மஹாபலிபுரம் பல்லவ ராஜ்யமாக இருந்தது. அவன் விரோதி புலி கேசி சாளுக்கிய ராஜ்யம்... அது போல் சோழ மண்டலம்...வேங்கி... இந்தியாவாக இல்லை. இந்தியா பிரிட்டிஷ்காரன் அமைத்தது.''

''எங்கள் தலைமுறை அப்படி நினைக்கவில்லை. நாங்கள் சுதந் திர வேட்கைப்பட்டு, தியாகங்கள் செய்தோம்.''

''காரணம், உங்களை எல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான். இப்போது நம் எதிரி நாமேதான்.''

''இருந்தும் இந்த நாட்டை ஒன்றுசேர்ப்பது கலாசாரம்.''

''இல்லை... ஏழ்மை!''

''உனக்குச் சிற்பங்கள் பிடிக் காதோ?''

''கரைக் கோயிலின் ஆர்க்கி டெக்சர் எனக்குப் பிடிக்கிறது. எனக்கு அதன் அழகை நிலவொளி யில் பார்க்கப் பிடிக்கும். அதை அமைத்த பெயரில்லாத சிற்பி தான் என் ஹீரோ. மகேந்திரவர் மன் அல்ல.''

''மனம் மாறுவாய்'' என்றார் சந்திரகுமார் புன்னகையுடன்.

வினிதா தசராவுக்கு வந்திருந்தபோது அவனை அறிமுகப்படுத்தினார். ''வினித், திஸ் இஸ் அஜய்... வினிதா என் பெண்.''

''ஹாய், யு லைக் மியூஸிக்?''

''பிடிக்கும்...''

''ஃபில் காலின்ஸ்?'' என்றாள் எதிர்பார்ப்புடன்.

''மொஸார்ட்'' என்றான்.

''யக்...'' என்றாள் அருவருப்புடன்.

''புக்ஸ்? ஜெஃப்ரி ஆர்ச்சர்...''

''ஃபிக்ஷன் ரெண்டாம்பட்சம்... ஐ ரீட் போயம்ஸ்.''

''போயம்ஸ்! மைகாட்...''

''தேர் கோஸ் மை மேரேஜ் அலையன்ஸ்...'' என்றார் சந்திரகுமார்.

''எங்கிருந்து அப்பா இந்தப் பிராணியைப் பிடிச்சுட்டு வந் தீங்க? ஹி இஸ் நாட் நார்மல்!'' என்றாள் வினிதா.

இருவருக்கும் ஒரே ஒரு பொது அம்சம் - மே மாதத்தில் பிறந்தவர்கள் இருவரும். அவளுடன் விகற்பமில்லாமல் பழகினான். அவளைக் கவிதைகள் படிக்கவைத்தான். மொஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வீடியோ பார்க்கவைத்தான்.

ஒருநாள் மாலை 'ரொம்பப் போர் அடிக்கிறது' என்று கட்டா யப்படுத்தி அவனை ஊருக்குள் அழைத்துச் சென்றாள். ''கடற் கரைப் பக்கம் வாக்மென் போட்டுக்கொண்டு நடக்கப்போகிறேன். நீயும் வருகிறாயா?''

கட்டாயத்தின் பேரில்தான் சென்றான். திரும்பி வந்ததும், ''இரவு எனக்கு நிலவொளியில் கரைக் கோயிலைப் பார்க்க வேண்டும்.''

''அழைத்துச் செல்கிறேன்!''

அவர்கள் சென்றதும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். இருவரும் நெருக்கமாகப் பழகுவது திருப்தி யாக இருந்தது. ''அவனைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி விசாரிக்க வேண்டும். இவனைப்போல் மாப்பிள்ளை கிடைப்பது மிக அரிது.'

இருவரும் போனதும் வீடு வெறிச்சென்று இருந்தது. மேஜையில் அவன், அவளுக்குப் படித்துக்காட்டிக்கொண்டு இருந்த புத்தகத்தை எடுத்தார். காது மடங்கியிருந்த பக்கத்தில் திறந் தது... 'How did you die?'

கவிதையின் தலைப்பே சற்று அதிர்ச்சி தந்தது.

'Death comes with a crawl,
or comes with a pounce
And whether he is slow or spry
It is not the fact that
you are dead that counts
But only, how did you die?'

வாசலில் ஜீப்பில் இருந்து ஒருவர் மெள்ள இறங்கி வந்து, சுற்றிலும் சவுக்குத் தோட்டத்தைப் பார்த்தபடியே அணுகினார்.

''புரொஃபசர் சந்திரகுமார்?''

''யெஸ்...''

''ஐ'ம் ஃப்ரம் தி போலீஸ் ஸ்பெ ஷல் பிராஞ்ச்'' என்று அடை யாள அட்டையைக் காட்டி, ''இந்த போட்டோவில் உள்ள வனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?''

கண்ணாடி போட்டுக்கொண்டு வெளிச்சத்தில் பார்த்தார். மீசை இல்லை; கிராப்பு வெட்டப்பட்டுச் சுருக்கமாக இருந்தது. இருந்தும் திட்டவட்டமாகச் சொல்ல முடிந்தது.

''இவன் பெயர் அஜய். என் செக்ரெட்டரி...''

''இவன் உண்மையான பெயர் அஜய் இல்லை. அவன் இங்கே இருக்கிறானா?''

''என் மகளுடன் கடற்கரைக்குப் போயிருக்கிறான். இப்போது வந்துவிடுவான். ஏதோ அடையாளக் குழப்பம் போலிருக்கிறது.''

வந்தவர் மிக வேகமாகச் செயல்பட்டார் ரேடியோவில். ''சார்லி, திஸ் இஸ் தி ப்ளேஸ்... வி காட் ஹிம்!''

''விவரமாகச் சொல்லுங்க ளேன்?''

''இவன் யார் தெரியுமா? மை காட்! எங்கே கடற்கரைக்கா?''

''இன்ஸ்பெக்டர், இதில் ஏதோ தப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பையன் என்னுடன் இருக்கும் செக்ரெட்டரி... ரொம்ப நல்ல பையன்.''

''புரொஃபசர், இவன் யார் தெரியுமா? எல்லா போலீஸாலும் தேடப்படும் மிகப் பெரிய தீவிரவாதி... மொத்தம் 18 கொலைகள் இவன் கணக்கில் உள்ளன.''

''சம்திங் பாஸிட்டிவ்லி ராங்... ஆள் மாறாட்டம்... போட்டோ தப்பு'' என்றார்.

''அவன் இங்கேதான் தங்கி இருக்கிறானா?''

''ஆம்...''

''எந்த அறையில்?''

''மாடியில்!''

''என்னுடன் வாருங்கள்...'' சரசரவென்று மாடிப்படி ஏறினவரைத் தயக்கத்துடன் பின்தொடர்ந்து, அஜய் தங்கியிருந்த அறைக்குள் முதன்முதலாக நுழைந்தார். ''என் செக்ரெட்டரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மணியான பையன். மிகுந்த புத்திசாலி. அழகுணர்ச்சி உள்ள வன், படித்தவன், சிந்திப்பவன்...''

அதிகாரி அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் இரை தேடும் சிங்கம் போல அறைக்குள் அலைந்தார். ஒழுங்கான அறை. சுவரில் கலையம்சத்துடன் நவீன சித்திரம் மாட்டியிருந்தது. அலமாரிப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்திருந்தான். மேஜை மேல் காகிதங்கள் அடுக்காக... ஜன்னல் மலர் ஜாடியில் ரோஜா.

அதிகாரி அவன் மேஜை இழுப் பறைகளைச் 'சரக்... சரக்...' என்று திறந்தார். மலர் ஜாடிகள் உருண் டன. காகிதங்கள் பறந்தன. பூட்டு கள் உடைந்தன.

''புரொஃபசர், இங்கே வந்து பார்க்கிறீர்களா, உம் நம்பிக்கைக் குரிய காரியதரிசியின் சொத்துக் களை?''

சந்திரகுமார் அருகே சென் றார்.

''இது உங்களுடையது அல்லவே?''

மேஜையின் மேல்மட்ட இழுப் பறையில் துப்பாக்கி இருந்தது. கீழ் அறையில் ஒரு காலாஷ் நிக்காஃப் ரைஃபிளின் பாகங்களும், மேகஸின்களும் இருந்தன. ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் இருந்தது.

''ஐ கான்ட் பிலீவ் இட்... திஸ் இஸ் இம்பாஸிபிள்!''

''இவன் பெயர் அஜய் அல்ல... இவன் பெயர் டோனு. கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் மகளுடன் எங்கே போய் இருக்கிறான்?''

''கடற்கரைக்கு என்று சொன் னேனே!''

''பதற்றப்படாதீர்கள், அவனுக்கு நாங்கள் இங்கு வந்து தேடுவது தெரியாது. அவனும் உங்கள் மகளும் திரும்பும் வரை பதுங்கி இருக்கலாம்.''

ஜீப்பைப் போகச் சொல்லி ஆணை கொடுத்தார். தபதப வென்று பத்து போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து வாசல் கத வைச் சாத்திக்கொண்டார்கள்.

''வெயிட்... யு கான்ட் டூ திஸ்... அவன் வேறு யாரையோ...''

''ஷட் அப் ஓல்ட்மேன்... கீப் கொயட்! ஒரு பயங்கரவாதிக்கு, தீவிரவாதிக்குப் புகலிடம் அளித் திருக்கிறீர்கள். வாயை மூடிக் கொண்டு நடப்பதைக் கவனிப் பது உசிதம்!''

''என்ன செய்யப்போகிறீர்கள்? காட்! என் மகள்... என் மகள் அவனுடன் இருக்கிறாள்!''

''அவளைக் காப்பாற்ற

முயற்சிக்கிறோம்.''

அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது. அலமாரியில் இருக்கும் ஸார்பிட்டால் தேவைப்பட்டது. நாக்கு உலர்ந்தது. 'என்னவோ ஒரு பெரிய தப்பு நேர்ந்திருக்கிறது... ஆள்மாறாட்டத் தப்பு. இவன் இல்லை... தடுக்க வேண்டும்.'

''வர்றாங்க. எல்லாரும் தயாரா இருங்க. அநாவசியமா சுட வேண் டாம். நான் சொல்லும்போது சுட்டாப் போதும்!''

ஜன்னல் வழியே, வினிதாவுடன் அஜய் மெதுவாகப் பேசிக் கொண்டே வருவது தெரிந்தது. அவர்கள் கைகோத்துக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது அவன் தோளில் தட்டி ஆரவார மாகச் சிரித்தாள்.

''ரெடி!''

ஒரு கணம் உலகமே நின்றது.

இங்கே துல்லியமாகத் துப் பாக்கிகளின் ட்ரிக்கரைத் தயாரிக் கும் சத்தம் கேட்டது. வீட்டை நோக்கி வந்துகொண்டு இருந்த வன், தரையில் ஈரம் இருந்ததைப் பார்த்தான். அதில் பதிந்திருந்த பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்தான். நின்றான். வின்னி யிடம் ஏதோ சொன்னான். அவள் வியப்புடன் கீழே பார்த்தாள்.

''நாம் வந்திருப்பதைக் கண்டு பிடித்துவிட்டான், பூட்ஸ் அடை யாளங்களைப் பார்த்து. ஓடுங்க... பிடிங்க!''

இதற்குள் அஜய், வின்னியை முன்னால் இழுத்துத் தன்னை மறைத்துக்கொண்டான்.

போலீஸார் வெளியே வெள்ள மாகப் பாய்ந்தார்கள். அங்கிருந்து கத்தினான். தன் பையில் இருந்து எடுத்த துப்பாக்கியை வின்னியின் நெற்றியில் பதித்து, ''ஸ்டாப்! கிட்ட வந்தா பெண் இறந்து போவாள்... நில்லு!''

'சினிமாவில்தான் இந்த மாதிரி காட்சிகள் வரும்' என்று சந்திர குமார் நினைத்தார். 'இப்போது கூட அனைத்தும் கனவு' என்று விழிக்கத் தயாராக இருந்தார்.

அவர் பெண்ணை அவன் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி காரில் திணித்து ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது, போலீஸார் 'வாக்கிடாக்கி'யில் ஆணைகள் பிறப்பித்தனர். ''க்விக்! செண்ட் த ஜீப்... ஹி இஸ் ரன்னிங்...''

புரொஃபசரைப் புறக்கணித்து விட்டு அனைவரும் ஓடினார்கள். நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் கேட் வரை ஓடியது. புரொஃபசர் வெலவெலத் துப்போய், ''என் மகள்... என் மகளைக் காப்பாற்றுங்கள்...''

இரவு எட்டு மணிக்கு அவர்கள் திரும்பி வந்து, அவரைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.

''என்ன ஆச்சு... என் மகளுக்கு என்ன ஆச்சு..?''

''ஓ! ஷி இஸ் ஆல்ரைட்...''

''பையன்?''

''கடற்கரையில் சுட வேண்டி இருந்தது...'' அவர்கள் அந்த இடத்தை அணுக, வின்னி அவரை நோக்கி ஓடி வந்தாள்.

''வின்னி, தப்பித்தாயா! வின்னி, ஆர் யு ஆல்ரைட்?'' என்று அவளைக் கட்டிக்கொண்டு நெற்றி யில் முத்தங்கள் அளித்தார். ''எங்கேயாவது அடிபட்டதா?''

''இல்லை அப்பா... அவன் என்னை எதும் செய்யவில்லை.''

''எதும் செய்யவில்லையா?!''

''நான் அகப்பட்டுவிட்டேன். என்னை நிச்சயம் சுட்டுவிடு வார்கள். சாவதற்கு முன் கடற் கரைக் கோயிலை ஒரு முறை நிலவில் பார்த்து விட வேண்டும்'' என்றான். அதற்காகத்தான் என்னைப் பணயக் கைதியாக அழைத்துச் சென்றான். இங்கே வந்ததும் என்னை விடுவித்து விட்டான்!''

சந்திரகுமார் கரைக் கோயிலைப் பார்த்தார். அதன் விளிம்புகளில் வெள்ளி பூசியிருந்தது. தூரத்தில் கடலலைகளின் சுருட்டல்களின் மீதும் வெள்ளி பிரவாகித்தது. அலை புரளும் ஓசை அவ்வப்போது உருண்டது.

''அப்பா, அவர்கள் அவனை... அவனை...'' என்று விசித்து அழு தாள்.

கடற்கரைக் கோயிலின் அருகே மணல்வெளியில், நிலவில் நனைந்துகிடந்தான் அவன். மாருதியின் ஹெட்லைட் வெளிச் சத்தில் மார்பில் பாய்ந்திருந்த குண்டின் ரத்த உறைவு தெரிந்தது. சந்திரகுமார் கிட்டே போய் அவனைப் பார்த்தார்.

'உங்களையெல்லாம் ஒருமைப் படுத்த ஒரு பொது எதிரி இருந் தான்... இப்போது நம் எதிரி நாமேதான்!'

''மைகாட்! வாட் வென்ட் ராங்?'' என்றார் சந்திரகுமார்.

''என்ன?''

''நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலி வாங்கும்படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட் டோம்? நன்றாகத்தானே ஆரம் பித்தோம்! எங்கே தப்பு செய் தோம்? எங்கே... எங்கே...?''

''அந்தக் கேள்வியெல்லாம் கேட்கறதில்லை நாங்கள்'' என்றார் அதிகாரி!


வியாழன், 24 டிசம்பர், 2009

சினிமா விமர்சனம்--வேட்டைக்காரன்








பாட்ஷா + பகவதி + திருப்பாச்சி +சத்யம் = வேட்டைக்காரன்.

நான்காவது அட்டெம்ப்ட்டில் பிளஸ் டூ பாஸ் செய்யும் தூத்துக்குடி மாணவன் ரவியாக விஜய் (அடேங்கப்பா!). நேர்மையான என்கவுன்டர் போலீஸ் ஸ்ரீஹரியைப்போல போலீஸ் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. சென்னை கல்லூரிக்குப் படிக்க வந்த இடத்தில் ரவுடிகளின் அட்டகாசம் (விஜய் படக் கதை வந்துவிட்டதா?). ஊரையே உலையில் அடித்துப் போடு கிறார்கள் ஒரு அப்பா, மகன் கம் வில்லன் கோஷ்டி. விஜய் அவர்களோடு மோதுகிற சூழல் வருகிறது. ''கிரி மினலுக்கு போலீஸ் வரணும். மிருகத் துக்கு வேட்டைக்காரன்தான் வரணும்'' என்று தொடை தட்டுகிறார் விஜய் (டைட்டில் வந்துவிட்டதா?). சவால், சவடால், டாடா சுமோ, கத்தி, ரத்தம், இத்யாதி... இத்யாதிதான் மீதிக் கதை.

பேரரசு டைப் கதை. இம்மி மாறாமல் விஜய் புகழ் பாடி ஆக்ஷன் உறுமி வாசித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாபுசிவன். அறிந்த காட்சிகள், தெரிந்த திருப்பங்கள் எனப் படத்தில் எல்லாமே பழசு (டைட்டில் உட்பட!) படத்தில் செம ஃப்ரெஷ் விஜய். காதலில் குழைகிறார். நட்பில் நெகிழ்கிறார். ஆக்ஷ னில் உறுமுகிறார். ஆனால், அலுத்துச் சலித்த அதே ரவுடி வேட்டையை எத்தனை முறை பார்ப்பது? போதாக்குறைக்கு விஜய் நடித்த பல படங்களின் ஸீன்களே இதில் ரிப்பீட். ஆக்ஷன் போர்ஷன் முழுக்க விஜய் நடக்கிறார், பறக்கிறார், சட்டையை உதறுகிறார், பஞ்ச் அடிக்கிறார், சவால்விடுகிறார்... றார்...

சின்ன போர்ஷனில் பெரிய பொண்ணு... அனுஷ்கா! முதலில் காதலிக்கிறார். பிறகு, ஆரோக்கி யமான இடைவெளிவிட்டு மீண்டும் காதலிக்கிறார். அப்புறம் ஹீரோயினை வில்லன்கள் கடத்த வேண் டுமே? எல்லாம் இருக்கிறது. அழகான அனுஷ்கா இதில் ஆன்ட்டி மாதிரி தெரிகிறாரே... என்ன பிரச்னை?

சாயாஜி ஷிண்டேவுக்கு 32-வது தடவையாக வில்ல போலீஸ் வேடம். கடைசியில் வழக்கம்போலத் திருந்துகிறார். சாயாஜியை வில்லன் பழி வாங்க வேண்டுமே? அவரது சின்னவீட்டை அப்படியே அலேக் பண்ணுகிறார். பிரமாதம்... 'கீப்' இட் அப்!

படத்தின் மூன்று வில்லன்களில் சலீம் கோஸ் மட்டுமே அடக்கி வாசிக்கிறார். மற்றவர்கள் ஸ்பீக்கருக்குப் பக்கத்தில் நின்று பேசுவது மாதிரி கத்தித் தீர்க்கிறார்கள். படத்தில் வில்லன்களை இவ்வளவு சோப்ளாங்கி ஆக்கியிருக்க வேண்டாம். எக்கச்சக்க பில்டப்கள் கொடுத்து அறிமுகம் ஆகும் படா வில்லன்கள் 'அவனைத் தடுக்க முடியாது' என்று விஜய் முன் வாலன்ட்டரி கைப்புள்ள ஆகிறார்கள். கொசு மாதிரி பொசுக் என்று உயிரை விடுகிறார்கள். இருப்பதில் கொஞ்சமாவது ஆறுதல் தருவது சத்யன்தான். காதலித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணும் இடத்தில் ரசிக்கவைக்கிறார்.

வேட்டை படத்தில் லாஜிக்கைக் கோட்டைவிட்டு விட்டார்கள். தமிழ்நாட்டுக்கே பிரபலமான என் கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் குடும்பமே கொல்லப் படுவதும், அவருக்குப் பார்வை பறிபோவதும் யாருக்கும் தெரியாதாம்! லூசுத்தனமாக நண்பனின் கடையையே தீவைத்துக் கொளுத்துகிறார் சலீம் கோஸ். எம்.எல்.ஏ-கூட இல்லாத சலீம் கோஸ் நினைத்த அன்றே மந்திரியாகப் (?!) பொறுப்பேற்கிறார். விஜய் ஊரையே கலக்கிக்கொண்டு இருக்க அவரைப் பற்றித் தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கிறார் அனுஷ்கா.

கேமராமேன் கோபிநாத் கேமராவின் வேலை எல்லாம் விஜய்யைப் பல கோணங்களில் சுற்றிச் சுழல்வதுதான். விஜய் ஆண்டனியின் இசையில் அனைத்துப் பாடல்களும் தாளம் போடவைக் கின்றன. குறிப்பாக 'கரிகாலன் காலைப் போல' பாடல் மெலடியும் துள்ளல் இசையும் கலந்த அழகிய கலவை. வழக்கமாக விஜய் நடனங்களில் தெரியும் எனர்ஜியான துள்ளல் வேட்டைக்காரனில் இல்லையே... ஏங்ணா?

பார்த்துச் சலித்த பழைய புலி. அதனாலேயே உறுமவதெல்லாம் இருமுவது மாதிரி கேட்கிறது!!


Thanks to Viktan

திங்கள், 23 நவம்பர், 2009

குதிரையில் வரும் ராஜகுமாரனுக்காக-வசந்த நிலா, மும்பை


* நான் ஒன்றும் ராஜகுமாரியல்ல...

வெண்புரவியில் வரும்
ராஜகுமாரன்
வந்து தூக்கிச் செல்வான்
எனும் கனவுகளோடு
காத்திருக்க...


* என் தந்தையின்
வரவிற்குள்ளே
ஒத்துக்கொள்ளும்
வரதட்சணையை
சந்தோஷமாக ஏற்றுக்
கொள்ளும்
சாதாரணமானவனுக்காக...


* அற்புதமாக
வசந்த கனவுகளோடு
காத்திருக்காமல்
என்னை மனம்
நோகாமல்
வாழ்க்கையை வழிநடத்திச்
செல்லும்
வசந்த குமாரனுக்காக
என் சின்ன வீட்டிற்குள்
சுற்றி, சுற்றி
வலம் வருகிறேன்...

* பெருங்கல் தூக்கி
ஜல்லிக்கட்டு காளையை
அடக்க வரும்
வல்லவனுக்காகவோ...
வானவில் ஜாலங்களோடு
வார்த்தை வித்தகனாக
திரைப்பட நாயகனின்
மறு அவதாரமாகவோ
என்னை வந்து
சிறையெடுக்க வரும்
சிற்பன்னனுக்காக நான்
விழிகளை மூடி
விரிய கனவு காணவில்லை...

* தினசரி அவதிகளோடு
என் வீட்டு மாலை
தின்பண்டங்களை
காபியோடு புசித்துவிட்டு
"பிடித்திருக்கிறது' என்று
சந்தோஷித்து விட்டு
ஓரக்கண்ணால் ஓர்
புன்னகை புரிந்து
"வரட்டுமா?' என
கையசைத்து செல்லும்
அன்றாட ஓட்டங்களின்
மத்தியில் அல்லல்பட்டும்
சகித்துக் கொள்ளாத
ஒரு சாதாரண மனோபாவ
மானிட இளைஞனுக்காக
காத்திருக்கும் இந்த
மங்கையை...


* எப்போது கனவுகளுக்கும்
சிணுங்கல்களுக்குள்ளும்
அழைத்துப் போகப்
போகிறாய் அன்பனே.
..

வெள்ளி, 23 அக்டோபர், 2009

தம்பதிகள் ஐந்து வகை...அதில் நீங்கள் எந்த வகை ?





'கோ.. கோ.. ஈகோ' என்று ஈகோவைத் தூக்கித் தூர எறியுங்கள். 'தோல்விகள்கூட காதலில் வெற்றிகளே' என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்!
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாததால்... திரும்பிய பக்கமெல்லாம் 'டைவர்ஸ்' குரல் கேட்கிறது.

"இது சரிப்பட்டு வரவே வராது... இனி டைவர்ஸ்தான் ஒரே வழி!"என இப்போது முண்டியடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் இளம் தம்பதிகள்! உலகம் முழுக்க ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை எகிறிக் கொண்டே போவதாக கவலை தருகின்றன புள்ளிவிவரங்கள்.

“சரிப்பட்டு வரலேனா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா!"என்பதுதான் லேட்டஸ்ட் அறிவுரை வேறு!

என்னவாயிற்று நம் குடும்ப வாழ்க்கை, கலாசாரத்துக்கு?!

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும், மனைவியும் வேலைக்கு ஓடும் இந்தக் காலத்தில், இருவரும் இருந்து பேச, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வார இறுதி நாட்கள், விடுமுறை என அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு கிடைக்கும் நேரத்திலும், பேச்சு விவாதமாகி, முடிகிறது சண்டையில். சண்டை நீண்டு, கடைசியில் கேட்கிறது விவாகரத்து!

''ஒருவரின் குணம், குற்றம், விருப்பு, வெறுப்பு, ஆசை, விரக்தி... என அனைத்தையும் அவர் மற்றவர்களுக்கு உணர்த்துவது, அவரின் உரையாடல் மூலம்தான். கணவன்மனைவிக்கு இடைப்பட்ட அந்த உரையாடலில், சண்டைகளும் சச்சரவுகளும் இயல்புதான். ஆனால், அதையெல்லாம் மீறி அவர்களின் வார்த்தைகளில் 'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற அன்பு அடிக்கடி உணர்த்தப்பட்டு, உணரப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் தாம்பத்யத்தின் உயிர்!" என்று இல்லற விதி சொல்கிறார் ரினாடா பாரிஸ். இவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியலாளர். மனித உறவுகள் பற்றிய சிறப்புச் சிந்தனையாளர் (Relationship Specialist).

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அமெரிக்காவில் குடும்ப விரிசல்களை சரி செய்து கொண்டிருக்கும் இந்த குடும்பநல ஆலோசகரின் முயற்சியால் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவங்களையெல்லாம் வைத்தே... ஆறு நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் ரினாடா பாரிஸ்.

''உலகம் முழுக்க இருக்கும் தம்பதிகளை அவர்களுக்கு இடையேயான உரையாடலின் அடிப்படையில் ஐந்து வகைகளுக்குள் அடக்கி விடலாம். நீங்கள் எந்த வகை என்பது, உங்கள் சுயமதிப்பீட்டுக்கு..." என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் ரினாடா, ஒவ்வொரு வகையையும் பிரித்து மேய்கிறார். அவரின் வார்த்தைகள், தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே மனோ ரீதியாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும் 'ரொமான்ஸ் லென்ஸ்' என்றே சொல்லலாம்.

'அமைதித் தம்பதி' (The Silent Couple): இதுதான் முதல் வகை. அமைதி என்றதும் உம்மணாமூஞ்சி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் நிறைய பேசுவார்கள்!

'பார்த்தீங்களா... எல்லை தாண்டி இந்தியாவுக்குள்ள சீனா பண்ற அட்டகாசத்தை..!'

'சுற்றுச்சூழல் பத்தி அருந்ததிராய் எழுதியிருக்கற அந்தப் புத்தகத்தைப் படிச்சீங்களா?'

இப்படி உலக நடப்புகளை எல்லாம் பேசித் தீர்ப்பார்கள். ஆனால், தங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்!

'ஏன் டல்லா இருக்கிறே? எதாவது பிரச்னையா?' என்றெல்லாம் அக்கறையாக விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும், 'ஒண்ணுமில்ல' என்று சொல்லிவிட்டால், 'சரி ஏதோ பர்சனல் (!) பிராப்ளம் போல' என்று விட்டுவிடுவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால், ஆத்மார்த்த புரிதலோ, அன்போ இருக்காது. 'வீட்டில் நமக்கு ஒரு துணை உண்டு' என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்... அவ்வளவுதான்!

'சண்டையைத் தவிர்க்கும் தம்பதி' (The Argument -Avoiding couple): இது இரண்டாவது வகை. 'சரி விடும்மா... நீ சொல்றபடியே பண்ணிடலாம்!' என்பது இந்த வகை தம்பதிகளின் உரையாடல் முடியும் புள்ளி. 'தேவையில்லாம எதுக்குச் சண்டை' என அடுத்தவர் சொல்வதை ஒப்புக் கொள்வது, அல்லது ஒன்றுமே பேசாமல் மௌனமாகி விடுவது இவர்களின் வழக்கம். எனவே, மனதிலிருப்பதை வெளிப்படையாக, அந்நியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள். திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலன்டாகிவிடுவார்.

சண்டைக் கோழி தம்பதி (The Argument-Avoiding Couple): 'எப்போ சண்டை வரும்' என்று காத்திருக்கும் மூன்றாவது வகை. 'சாப்பாட்டுல ஏதோ குறையுதே...' என்று எதார்த்தமாகச் சொன்னாலும், 'உங்க அம்மா சமைச்சா மட்டும்தான் உங்களுக்குப் புடிக்கும்' என்று சீறுவார்கள். பூதக் கண்ணாடி போட்டு தன் பார்ட்னரிடம் குற்றம் கண்டிபிடித்து சண்டை பிடிக்கும் சீரியஸ் கேஸ் இவர்கள். பெரும்பாலும் இவர்களின் உரையாடல்கள் மனக்கசப்பில்தான் முடியும். இவர்கள் பெரும்பாலும் நிம்மதியின்றி மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்£ர்கள்.

'நட்புத் தம்பதி' (The Friends/Partners Couple): இவர்கள் நான்காவது வகை! நல்ல நட்புடன் அலுவலகம், குடும்பம் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷ§வல் கப்பிள் என்று இவர்களைச் சொல்லலாம். ஆனாலும், இவர்களுக்கிடையே அழுத்தமான குடும்ப உறவு, தாம்பத்ய நெருக்கம் இருக்காது. இருந்தும், வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது.

'நெருக்கமான தம்பதி' (The Fully Intimate Couple): இவர்கள் ஐந்தாவது வகை. 'இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்' என்பதுவரை வெளிப்படையாக பேசுவார்கள். எந்த விஷயத்தையும் ஒருவருக்கு ஒருவர் மறைக்க மாட்டார்கள். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும்தான் இதன் ஹைலைட். அதனாலேயே ஆழமான குடும்ப உறவும், புரிதலும் இவர்களுக்கிடையில் இருக்கும். சொல்லப்போனால், இப்படி வாழ்வதற்கு அதிக பக்குவமும், அன்பும் தேவை. மிகச் சில தம்பதிகள்தான் இந்த வகைக்குள் வருவார்கள்!

இப்படி வகைப்படுத்தும் ரினாடா பாரிஸ், அனைவரும் இதில் ஐந்தாம் வகைக்கு முன்னேறுவதற்காக, தங்களுக்கு இடையேயான உரையாடலை அந்நியோன்யமாக எப்படி ஆக்கிக் கொள்ளலாம் எனபதற்கும் அற்புதமான ஆலோசனைகளையும் சொல்கிறார். அவை

முதலில், கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசும் பழக்கம் வரவேண்டும்.

உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம், மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்கவேண்டும். 'நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று நின்றால், நோ யூஸ்!

பொறுமையும் அவசியம். உங்கள் பார்ட்னர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். க்ளைமாக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா?! எனவே, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, நடுவில் குதிக்காதீர்கள். எந்த முடிவையும் இருவரும் கலந்து பேசி எடுங்கள்!

உங்கள் துணையின் நம்பிக்கைகளை, விருப்பு, வெறுப்புகளை புண்படும்படி விமர்சிக்காதீர்கள்.

''உங்களாலதான்..." என்று குற்றம் சுமத்திப் பேசாதீர்கள். குற்றம், அனுமார் வால் போல நீண்டு கொண்டே இருக்கும்!

மனம் திறந்து உண்மையைப் பேசுங்கள். ஒருவேளை நீங்கள் பேசியது பொய் என்று துணைக்கு தெரியவரும் பட்சத்தில், உங்கள் மீதுள்ள நம்பிக்கை சிதைந்து, பின் உங்கள் உரையாடல் எப்போதுமே 'ஹெல்த்தி'யாக இருக்காது!

சின்னச் சின்னப் பாராட்டுகள் மிகவும் முக்கியம்.

உங்கள் துணை பேசுவதை கேட்காதீர்கள் (!)... கவனியுங்கள்! அதென்ன வித்தியாசம்? அவர் பேசும் வார்த்தைகளை காதில் வாங்குவது, கேட்பது; மனதில் வாங்குவது, கவனிப்பது. அவர் என்ன சொல்கிறார், என்ன மனநிலையில் சொல்கிறார், என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் கவனித்தால்தான் புரியும். உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை இந்தக் கவனிப்புதான் சொல்லும்! அதிகம் கவனித்தால், அதிகம் அந்நியோன்யமாவீர்கள்!

அப்போ, கவனிப்போமா..?!

நன்றி : அவள் விகடன்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்




''ஒரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் எந்த காரியம் செய்தாலும் தன் மனைவியின் கருத்தைக் கேட்டே செய்வார். ஒரு நாள், 'நாம் மட்டும்தான் இப்படி மனைவியின் பேச்சைக் கேட்கிறோமா... அல்லது அமைச்சரவையில் உள்ள மற்றவர்களும் கேட்டு நடக்கிறார்களா..?' என்று அரசருக்கு சந்தேகம். அமைச்சர்களிடமே கேட்டுவிட்டார். 'நாங்களும் அரசர் வழியில் மனைவியரின் பேச்சைக் கேட்டே நடக்கிறோம்’ என்றார்கள் அத்தனை பேரும்.

அடுத்து, 'இந்த விஷயத்தில் குடி மக்கள் எப்படி?' என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்த அரசர் ஊரையே கூட்டி, 'மனைவி பேச்சைக் கேட்பவர்கள் எல்லாம் வலதுபுறமும்... கேட்காதவர்கள் இடதுபுறமுமாக செல்லுங்கள்' என்றார். ஒருவர் மட்டும் இடதுபுறமாகச் செல்ல... 'நீங்கள் ஒருவர் மட்டும்தான் மனைவியின் பேச்சைக் கேட்காதவர். பிடியுங்கள் பொற்கிழி பரிசை' என்று நீட்டினார் அரசர்.

உடனே, 'மனைவியின் பேச்சைக் கேட்காமல் வாங்கமாட்டேன்' என்று அவர் சொல்ல, அரசருக்கு கோபம் வந்துவிட்டது. 'பிறகு எதற்காக இடதுபுறமாக சென்றீர்கள்?’ என்று கேட்டார்.

'வீட்டிலிருந்து புறப்பட்டபோது, கூட்டத்தோடு கூட்டமாகச் செல்லாதீர்கள். தனியாக நில்லுங்கள் என்று என் மனைவிதான் சொல்லியனுப்பினார்' என்று பதில் தந்தார் அந்த நபர்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்ற உண்மையை உணர்த்தத்தான் இந்தக் கதையைச் சொல்கிறேன்.

ஆகையால் எல்லோரும் அவங்க அவங்க மனைவி சொல்றத கேட்டு நடக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது


செவ்வாய், 13 அக்டோபர், 2009

எதிர் துருவங்கள்



யாராவது அமுதம் வேண்டாம் என்று சொல்வார்களா? மதுமிதா சொல்வாள்!

ஆம்... 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்பதை தீவிரமாக மனதுக்குள் ஜபித்துக் கொண்டிருப்பவள் மதுமிதா. காரணம்... அவள் கணவன் திவாகர் அவளிடம் அன்பை வெளிப்படுத்தும் அதீத முறைகள்தான்!

"சர்ப்ரைஸ் கொடுக்கறேன்னு சில நாள், நான் எழுந்து கோலம் போடப் போறதுக்கு முன்னாடியே வாசல் கூட்டி, தெளிச்சு வச்சுடறார். தெருவுல பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?"

"எனக்கு பிங்க் கலர் பிடிக்கும்னு சொன்னேன்ங்கறதுக்காக ஒரே நேரத்துல பத்து பிங்க் கலர் சுடிதார் எடுத்துட்டு வர்றார். வேஸ்ட்தானே?"

"அவங்க அண்ணா, அண்ணிகிட்ட... 'நான் என் பொண்டாட்டிய செல்லமா 'ஏஞ்சல்'னுதான் கூப்பிடுவேன்'ங்கறார். மானம் போகுது"

- இப்படியாக நீளுகின்றன மதுமிதாவின் குற்றச்சாட்டுகள்.

"என் பொண்டாட்டி மேல உயிரையே வச்சிருக்கேன். அதை அவகிட்ட நான் பின்ன எப்படிப்பா எக்ஸ்பிரஸ் பண்ணுவேன்?

- டாஸ்மாக் கடை ஒன்றின் பக்கத்து டேபிளில் இருந்த முகம் தெரியாத நபரிடம் திவாகர் உளறிய வார்த்தைகள் இவை. டாஸ்மாக் போகும் அளவுக்குக் குடும்பத்தில் அப்படி என்ன குழப்பம் கும்மி-யடிக்க ஆரம்பித்துவிட்டது?

திருமணமாகி ஐந்து மாதங்-கள்கூட முடியவில்லை. மாலை மயங்கிய நேரங்களில் பூவோடு வந்தவனை, "எதுக்கு இவ்வளவு பூ? கொஞ்சமா வாங்கிட்டு வாங்-கனு சொன்னா... கேட்க மாட்டீங்களே!" என்றாள் மது.

அடுத்த நாள் வருத்தம் மறைத்து, "இன்னிக்கு நான் டின்னர் பண்றேன்" என்று ஆசையாகக் கிளம்பியவனை, "ஆம்பளையா... லட்சணமா இருங்க" என்றாள் கண்டிப்புடன்.

மற்றொரு நாள்... "உனக்குப் பிடிச்ச பாஸந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்" என்றவனை, "ஐயோ... இந்த அஞ்சு மாசமா நீங்க அதையே வாங்கிக் கொடுத்ததுல எனக்கு பாஸந்தியே வெறுத்திடுச்சுப்பா" என்றாள். இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருத்தங்கள் எழுந்தன அவர்களுக்குள். விளைவு... திவாகர் வாங்கி வந்த பூவின் வாசம் சில தினங்களாக தொடர்ந்து மறுக்கப்பட்டது. அவன் டாஸ்மாக் வாசம் பிடிக்கத் துவங்கிவிட்டான்.

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்குமாம். ஆனால், இங்கே அதற்கு நேரெதிர்.

திவாகர் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக குட்டிக்கரணம்கூட அடிக்-கும் ரகம். நண்பர்களுக்கு அவர்களின் குடும்ப போட்டோக்களைத் தேடிப் பிடித்து பிறந்த நாளுக்கு ஃப்ரேம் செய்து கொடுத்து, அவர்கள் சந்தோஷப்-படுவதைப் பார்த்து, தான் சந்தோஷப்படும் பிரியக்காரன். நண்பர்களுக்கே இப்படி சர்ப்ரைஸ்கள் கொடுத்து சந்தோஷப்படுத்துபவன், தன் மனைவிக்காக எத்தனை சர்ப்ரைஸ்களை தேக்கி வைத்திருப்பான்? அதன் வெளிப்பாடுகள்தான் இப்போது மதுமிதாவின் குற்றச்சாட்டுகளாக வடிவெடுத்து நிற்கின்றன.

மதுமிதாவும் அன்பானவள்தான். ஆனால், அவள் வளர்ந்த சூழலில் நிலவிய அன்பு பரிமாறல்கள் அத்தனையும் வேறு ரகம். எப்போதாவது அம்மாவைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் அப்பாவின் அன்பும், கல்யாண நாளில் மனைவிக்கு புடவை வாங்கிக்கொடுத்து 'நல்லாயிருக்கா?' எனும் அண்ணனின் அன்பும்தான் அவள் அறிந்தது.

ஆனால், திவாகர் காட்டும் அன்பு அனைத்துமே இவளுக்கு அதிர்ச்சி ரகம்தான். இருவரையும் ஊர் கூடி உறவு பந்ததில் இணைத்து வைக்க, முதலிரவு அன்று கைகளில் பால் ஏந்தி வந்தவளை, "ஒரு சேஞ்சுக்கு பீர் தரமாட்டீங்களா?" என்று திவாகர் கேலி செய்ய, 'ஐயையோ... ஒரு அயோக்கியன்கிட்ட மாட்டிக்கிட்டோமே' என்று அன்றே பதறிப்போனாள் மது. தொடர்ந்த நாட்களில் சந்தடி சாக்கில் புதுப் பொண்டாட்டியை முத்தமிட துடித்த திவாகரை ரவுடியாகவே பார்த்தாள். அவனின் சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாமே அவளுக்கு திகட்டச் செய்தன. தள்ளித் தள்ளிச் சென்றாள். ஆனால், அது எத்தனை நாளைக்கு நீடிக்கும். அன்று காத்திருந்தது... அவர்களின் இடைவேளைக்கான க்ளைமாக்ஸ்!

திவாகர் மேல் எழுந்த அதிருப்தியை மறக்க, டி.வி. சீரியல் பார்க்க ஆரம்பித்திருந்தாள் மது. சீரியலில் கை தவறி கதாநாயகி காபி டம்ளரை கீழே கொட்டி விட, 'பளார்' என கன்னத்தில் அறைந்தான் அவள் கணவன். மதுவுக்கு திவாவின் நினைவு வந்தது. அன்று ஆபீஸுக்கு கிளம்பியவன், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவள் கைதவறி சாம்பாரை கொட்டிவிட, "அட... சாம்பார்லகூட மார்டன் ஆர்ட் வரைவியா நீ?" என்றபடியே வேறு சட்டை மாற்றிக்கொண்டான்.

அடுத்து ஒரு சீரியல். உடம்பு முடியாமலிருக்கும் தன் மனைவியை என்னவென்றுகூட கேட்காமல் இருந்த அந்த சீரியல் கணவனைப் பார்த்தபோது, இவள் தலைவலிக்கு தைலம் தடவிவிட்ட திவாவின் விரல்களை நெஞ்சம் தேடியது.

இரவு இன்னுமொரு சீரியல். மளிகை வாங்கக் கொடுத்த நூறு ரூபாய்க்கு தன் மனைவியிடம் கறார் கணக்கு கேட்டுக்கொண்டிருந்தான் அந்த சீரியல் ஹீரோ. திருமணம் முடிந்த மாதமே மது பெயரில் பேங்க் அக்கவுன்ட் ஆரம்பித்து தந்த திவாவின் ஞாபகம் மட்டுமல்ல... அவன் சீக்கிரமாக வரும் மாலை நேரங்களில் தன்னைச் சுற்றி சுற்றி வருவது, காதுக்குள் 'ஏஞ்சல்' என்று கிசுகிசுப்பது, உள்ளங்கையில் முதல் முத்தம் வைப்பது என... ஒவ்வொன்றாக அவள் மனதுக்குள் மின்னின.

'எத்தனையோ பெண்கள் கணவனோட அன்புக்காக ஏங்கிக்கிட்டிருக்கும்போது, அன்பே கணவனா கிடைச்ச திவாவை புரிஞ்சுக்காம விட்டுட்டோமே' என்று முழு மனதாக வருந்தினாள் மது. வாசலில் திவாவின் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்தவள், இந்த கணத்துக்காகத்தான் காலமெல்லாம் காத்திருந்தது போல அவனைக் கட்டிக் கொண்டாள்.

"என்ன... மோகினிப் பேய் இன்னும் சாப்பிடாம இருக்கு?!" என்று வழக்கம் போல திவா கிண்டலடிக்க, "ம்ம்... ஜோடிப் பேய்க்காக காத்திட்டு இருக்கு" என்று தானும் அவன் மொழி பேசினாள்!

ஆம்! இங்கே எதிர் எதிர் துருவங்கள் சமபுள்ளியில் மையம் கொண்டுவிட்டன.

சனி, 10 அக்டோபர், 2009

33 சதவீதம்! (சிறுகதை) - ராஜ்கதிர்


திருமணத்திற்கு பின் நான் சந்திக்காத என் தோழியை, சில வருடங்களுக்கு பிறகு சந்தித்தே தீர வேண்டிய சூழ்நிலை... நான் கல்யாணம் செய்து கொள்ள போவதால் உருவானது. ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறகு, ஒரு ஆடவரின் நட்பை தொடர்வதில் பல சிக்கல்கள் உண்டு... அவளின் கணவனின் புரிதலில் உள்ளது. ஆனால், கணவனுக்கு, தன் நட்பை புரிய வைப்பது மட்டுமல்ல, தன் எண்ணத்தை, அதன் உறுதியை தெளிய வைக்கக்கூடிய அபார திறமை படைத்தவளே என் தோழி.
என் திருமண அழைப்பிதழ் கொடுக்க, அவர்கள் வீடு நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் நான்கு மணி நேர பயணம் செய்ய வேண்டும். ரயிலில் சக பயணிகள் அனைவரும், நிம்மதியாக உறக்கத்தில் மூழ்கியிருந்தனர். கண் மூடியவாறு சிந்திக்கலானேன்... மூடிய இமைகளுக்குள் என் வருங்கால மனைவியின் முகம், என் இதயத்தை மகிழ்வித்தது. என் மனைவியாக போகிறவளோடு, பலமுறை மொபைல் போனில் பேசி பழகியதில், அவள் என்ன மாதிரி எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேனோ, அதே அலைவரிசையில் செட்டாகி இருந்தாள்.பெண்கள் பத்தாம்பசலிகளாக இல்லாமல், சற்று துணிவான எண்ணம் கொண்டிருக்க வேண்டும்; எதற்கும் பயப்படாமல் போராடும் குணமும், தன் எண்ணத்தை உறுதியோடு வெளிப்படுத்தி, தன் மீது தவறு இல்லாத பட்சத்தில் எதற்காகவும், யாருக்காவும், தன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில், தேவையற்ற பிடிவாத குணமும் கொண்டிருக்காமல், அப்படியிருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று சில எண்ணங்கள் கொண்டிருந்தேன்.


நான் சந்திக்க இருக்கும் தோழியும் அவ்வித எண்ணங்களோடு இருந்ததால், எங்கள் நட்பு உண்டானது. அந்நாள் ஒரு குடியரசு தினம். அன்று மதியம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தபோது, ரோட்டில் ஒரு பெண்ணின் சப்தம். கதவை திறந்து பார்த்தால், கையில் செருப்போடு, ஒரு இளைஞனை அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
சற்று தள்ளி லேடீஸ் சைக்கிள், கீழே விழுந்து கிடந்தது. சைக்கிள் கேரியரில் கல்லூரி புத்தகம், டிபன் பாக்ஸ் இருந்தது. வெள்ளை நிற பாவாடை, தாவணி அணிந்து, இந்திய தேசிய கொடி குத்தியிருந்தாள்; கண்களில் கோபக்கனல் தெரித்தது.
"மடப்பயலே செருப்பு பிஞ்சிரும்டா...' என்று சொல்லி அடித்தே விட்டாள். அந்த இளைஞன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒடியே விட்டான்.


சில மாதங்களுக்கு பிறகு, நான் பயிலும் இந்தி வகுப்பில், அந்தப் பெண்ணும் சேர்ந்தாள். தயங்கி, தயங்கி பேச துவங்கினேன். சக மாணவனாக நினைத்து தான் பேசியதாக எண்ணினேன்; ஆனால், அவள் எந்த ஆடவனுடனும் வெகு சகஜமாக உரையாட கூடியவள் தான் என்று பின்னர் தெரிந்தது. அந்நிகழ்ச்சியை பற்றி கேட்டவுடன், "அந்த ராஸ்கல் என்கூட பேசியிருந்தாலோ, என்னை கிண்டல் பண்ணி இருந்தாலோ கூட எனக்கு கோபம் வந்திருக்காது. பொம்பளைய போகப் பொருளாத்தான் பார்க்க தெரிஞ்சிருக்கான்; நினைக்கிறான். சிரஞ்சில தண்ணி நிரப்பி, என் இடுப்புல அடிச்சான். கடவுள் பொம்பளைகள தன் காம உணர்வை தீர்த்துக்கிறதுக்காக படைச்சதா தான் எல்லா ஆம்பளைகளும் நினைக்கிறாங்க...
"சக மனுஷியா பார்க்காம, ஒரு அடிமையாத்தான் பெண்களை வைத்திருக்காங்க. உங்களுக்கு தெரியுமா... என் அம்மா கூட பேசி, நாலு மாதமாகிறது. அன்னிக்கு தெரு முனையில நின்னு ஒரு பையன் கூட பேசிக்கிட்டு இருந்தேன்னு, "எப்ப பாரு ஆம்பளை மாதிரி நெஞ்சை நிமித்துகிட்டு நடக்கிறேன்!'ன்னு சப்தம் போட்டாங்க.
"பெண்கள் என்றாலே, அடக்க ஒடுக்கமாத்தான் இருக்கணும்ன்னு சட்டமா என்ன? இந்த உலகத்தில், எங்க விருப்பப்படி நல்லவிதமா, சுதந்திரமா வாழ எங்களுக்கு உரிமை இல்லையா?
"என் பக்கத்து வீட்டு பையன், எனக்கு வைச்ச பெயர், "திமிரு பிச்சவ!' ஏன் தெரியுமா? அந்த செருப்படிபட்டவனோட நண்பன் இவன். என் அண்ணன், எனக்கு சூட்டிய நாமம், "அடங்காப்பிடாரி!' அவன் சட்டையை நான் துவைச்சிப் போடலையாம்.2009 வருஷம் முடியப்போது, இன்னும் எதுவும் மாறலைங்க. பாருங்க, 33சதவீதம் கேட்கிறாங்க. பூஜ்ய சதவீத உரிமையே பெண்களுக்கு இல்லேன்னு போன பிறகு...'


"ஏன்,எல்லாத்தையும் நீங்க மாத்துங்களேன்...'
"மாத்தத்தான் போறேன். என் சக தோழிகளை சேர்த்து, பெண்ணுரிமைக்காக போராடத்தான் போறேன்; என் வாழ்நாள் லட்சியமாவும், சபதமாகவும் எடுத்து செய்யத்தான் போறேன், பாருங்க!' "சரிங்க, வாழ்த்துக்கள்... பெரியாரம்மா...' என்றதற்கு, சிரித்து கொண்ட அந்த தோழியை, சந்திக்க தான் இந்த ரயில் பயணம். பணிநிமித்தமாக நான் வெளிநாடு சென்று விட்டதால், சில வருடங்களாக என் தோழியை நேரில் சந்திக்கவில்லை. அவர் திருமணத்திற்கு கூட நான் செல்லவில்லை; வாழ்த்து மட்டுமே அனுப்பினேன். ஒருமுறை போனில் பேசும் போது, தற்போது வசிக்கும் இடம் மற்றும் அவர் கணவரின் பணிகுறித்து கேட்டறிந்தேன்.
சென்னை வந்து, நண்பன் தங்கியிருக்கும் ரூமில் குளித்து உடைமாற்றி, அவனை அலுவலகத்தில் இறக்கி விட்டு, வண்டியில் என் தோழி குடியிருக்கும் ஏரியா நோக்கி சென்றேன்.
ஒரு கடையில் பழங்கள், வெற்றிலை பாக்கு வாங்கி கொண்டிருந்தபோது, எதிரே உள்ள ஓட்டலை அப்போது தான் கவனித்தேன். அந்த ஓட்டலிலிருந்து வெளியே வந்தது என் தோழியே தான்.


என் தோழியின் உடல் சற்று கனத்திருந்தது. முகமெல்லாம் சற்று புஷ்டியாக, கன்னம் உப்பியிருந்தது. கல்யாணமாகி, குழந்தை பெற்ற பிறகு, பெண்கள் உடலமைப்பில் ஏற்படும் மாற்றம், என் தோழியிடத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் என் தோழியின் நடையில், ஒரு மாற்றம்; வியந்தேன். ரோட்டில் ஒரு பெண்ணை அழைப்பது சரியல்ல என்பதால், அவர் செல்லும் வரை காத்திருந்து, வண்டியை மெதுவாக அவர் பின்னே செலுத்தினேன்.
ஒரு கையில் கூடை நிறைய காய்கறிகள், மறு கையில் ஓட்டலில் வாங்கிய பார்சல் என, நெற்றியில் வடியும் வியர்வையை கூட துடைக்க சிரமப்பட்டவாறே, மெதுவாக நடந்து கொண்டிருந்தார். ரோட்டின் ஓரத்தில் இருந்த பெட்டி கடை சென்று, அந்த கடையில் ஏதோ வாங்கி, தன் நடையை தொடர்ந்தார். அவர் வீடு செல்லும் வரை வண்டியை மெதுவாக செலுத்தி, காம்பவுன்ட் கேட்டை திறந்ததும், வண்டியை வேகப்படுத்தி கேட் அருகே நின்று, ""ஹலோ...'' என்றேன்.
"யாரோ?' என பார்த்தவர், ""என்னங்க... என்னை தெரியல...?'' என்ற என் குரலை கேட்டதும், ""ஓ... நீங்களா, என்ன இவ்வளவு தூரம்?'' என்றார். ""ஒரு நல்ல விஷயம் தான். உங்கள பார்த்து சொல்லணும்ன்னு தான் வந்தேன்.''
""சொல்லுங்க...'' என்னை அப்படியே வெளியே நின்னே பேசி அனுப்பி விடலாம் என்று நினைத்திருப்பார் போல. ""ஏங்க, இது உங்க வீடு தானே? உள்ளே கூப்பிட மாட்டீங்களா?''
ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தவர், ""சரி, வாங்க...'' என அழைத்தார்.
""உங்க நம்பருக்கு போன் பண்ணேன், கிடைக்கலையே...'' என்றவாறு வீட்டினுள் சென்றதும், ""ஏய், பொம்பள... டிபன், சிகரட் வாங்கிட்டு வந்திட்டியா?'' என்ற கரகர குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து, ""ஏய், பொம்பள... ஸ்கூலுக்கு நேரமாச்சு. எனக்கு யூனிபார்ம் மாட்டிவிடு...'' என்ற ஒரு மழலை குரல். கரகர குரல் என் தோழியின் கணவர் குரல் என்றும், மழலை குரல் அவர் குழந்தையின் குரலாக இருக்க கூடுமோ என, யோசித்துக் கொண்டே அந்த ஹாலிலே நின்று கொண்டிருந்தேன்.
ரூமிற்குள் சென்று வந்த தோழி, நான் நின்று கொண்டிருப்பதை பார்த்து, ""அங்க உட்காருங்க...'' என்று இருக்கையை காண்பித்துவிட்டு, தொலைக்காட்சியை ஆன் செய்து, உள்ளே சென்றார். அரைமணி நேரம், நான் அங்கே காத்திருந்தேன். என் தோழியே பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள். அவள் கணவருக்கும், மகனுக்கும் டிபன் கொடுத்து, மகனுக்கு உடை மாற்றி, தன் கணவர் சிகரட் பற்ற வைக்க லைட்டர் தேடி, சிகரட் பற்ற வைத்து, கணவரின் பாதணியை மாட்டிவிட்டு, தன் மகனுக்கு ஷூவை மாட்டினாள். லன்ச் பேகை எடுத்து வந்து, தன் மகனை அனுப்பிவிட்டு உள்ளே வந்த சில நொடிகளில், ""ஏய், பொம்பள...'' என குரல் கேட்டதும், படுக்கையறையில் உள்ள ஒரு பைலோடு வெளியே வந்து, தன் கணவரிடம் கொடுத்து விட்டு வந்தார். வீட்டிலிருந்து வெளியே போகும் போது, என் தோழியின் கணவர், ""ஹலோ, வாங்க...'' என்று சென்றது, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது; எங்கே பேசாமலேயே சென்று விடுவார் என்று தான் நினைத்திருந்தேன்.


""ஒரு நிமிஷம்...'' என்று கூறி, ரூமிற்குள் சென்று ஒரு டம்ளரோடு வந்து, ""இந்தாங்க, இதை குடிங்க...'' என்று கொடுத்தது கூட என்னை வியப்படைய செய்தது.
""சரி, இப்ப சொல்லுங்க. என்ன விசேஷம்?'' என்று கேட்டவாறு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
""என்னங்க... உங்க நடவடிக்கையில, முற்றிலும் மாற்றம் தெரியுதே. நான் பார்த்து வியந்த, பெருமைப்பட்ட யுவதியா நீங்க தெரியலையே, ஏன்?''
""அத விடுங்க... என்ன ரொம்ப முக்கியமான விஷயம்?''
""எனக்கு கல்யாணம்ங்க. அதான், உங்கள நேரில பார்த்து, அழைப்பிதழ் கொடுத்து போலாம்ன்னு வந்தேன். நிறைய அதிர்ச்சியா இருக்குங்க, இங்க வந்த பிறகு. நான் உங்க வாழ்க்கையை வேற மாதிரி கற்பனை பண்ணி வைச்சிருந்தேன். நீங்களும் ஒரு சராசரி இந்தியப் பெண்ணா இருக்கிற மாதிரி தான் தெரியறது...''
""கண்டிப்பா... உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியாது; என் வாழ்த்துக்கள். அப்புறம், நீங்க சொன்ன அந்த சராசரி இந்தியப் பெண்ணால தான் நம்ம இந்திய நாட்டோட கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் எல்லாம் காப்பாற்றப்படுது.


""நம்ம நாட்டு பெண்ணுக்கு கல்யாணத்திற்கு முன் பெத்தவங்களால அவுங்க சுதந்திரம் பறிக்கப்படுது; கல்யாணத்திற்கு பிறகு கணவனால. எப்பவும் இந்த நாட்ல பெண்களுக்கு சுதந்திரமோ, தனி மனித உரிமையோ இல்லைங்க; அவர்கள் விருப்பம் போல் பெண்களால வாழ முடியாது; வாழவும் விடமாட்டாங்க.
""மீறினால், குடும்ப கட்டமைப்பு சிதறும். நான் தனித்து தான் வாழணும். ஏகப்பட்ட களங்கத்தை சுமத்திருவாங்க. நான் சாப்பிடுறேனோ, இல்லையோ, என் கணவரையும், பிள்ளையும் நான் கவனிக்கணும்; என் கணவர் சொல்ற வேலையை ஒரு அடிமை போல் செய்யணும்.
""பெண்ணுரிமை... பெண் சுதந்திரம்ன்னு நான் பேசிக்கிட்டு இருந்தேன்னா... நான் வாழாவெட்டியாத்தான் வாழ நேரிடும். இது அனுபவப்பூர்வமா நான் கண்ட உண்மை. என் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு, நான் ஒரு மாதர் சங்கத்தில உறுப்பினராகி, பெண்ணுரிமை பேசிட்டு திரிஞ்சதால, எங்க தெருவுல, என்னை ராங்கிக்காரியா ஆக்கிட்டாங்க.
""என்னை பெண் பார்க்க வந்த இருபத்தி ஏழு மாப்பிள்ளைகிட்ட என்னை பற்றி என்னென்னமோ சொல்லி பயமுறுத்திட்டாங்க. எங்க குடும்பத்தால அத தாங்க முடியல. என்னை கொஞ்சம், கொஞ்சமா வெறுக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னை வேற ஒரு ஊர்ல கொண்டு போயி வைச்சு, ரகசியமா எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க.
""என் கணவரும் என்னை அடக்கி ஆள நினைச்சதால, அடிக்கடி எங்களுக்குள்ள சண்டை வரும். கடைசியா, ஒரு தடவை என் உரிமைக்காக சண்டை போட்டு, ஒரு வருஷம் நான், வாழா வெட்டியா இருந்தேன். ஆம்பளைகள், பெண்ணை அடிமையா வச்சிக்கிறதல தான் குறியா இருக்காங்க; பெண்ணுரிமை பற்றி வாய் கிழிய பேசுற ஆண்களோட வீட்ல கூட, அவன் பெண்டாட்டியை அடிமையாத்தான் வைச்சிருக்கான்.''


""எல்லா ஆண்களும் அப்படியில்லைங்க... பெண்கள சரிசமமா நினைக்கிற என்னை போல சிலர், இருக்கத்தான் செய்றாங்க...''
""இப்ப அப்படி தான் சொல்வீங்க; நாளைக்கு உங்க பெண்டாட்டி உங்கள எதிர்த்து பேசினா, நீங்க சொன்ன வேலையை செய்யாம போனா, அவளை வெறுக்க ஆரம்பிச்சிருவீங்க. ஏன், அவள டைவர்ஸ் கூட பண்ண துணிஞ்சிருவீங்க. ஒரு பெண் வாழவெட்டியா பிறந்த வீட்ல இருக்கிறது ஆயுள் தண்டனையை விட பெரிய கொடுமைங்க...
""என்னைப் பற்றின கவலையில, எங்க அப்பாவுக்கு உடம்பு ரொம்ப படுத்த ஆரம்பிச்சிருச்சு. என் கால்ல விழாத குறையா, "மாப்பிள்ளை கூட அனுசரிச்சு வாழ முயற்சி செய்!'ன்னு கெஞ்சினார். என் தங்கச்சி ஒரு படி மேலே போய், "கொஞ்சம் விஷம் இருந்தா, கொடுத்து என்னை கொன்னுடுக்கா...'ன்னு சொன்னாள்.
""என்னால அவளுக்கு கல்யாணம் ஆக மாட்டேங்குதுன்னு அழறா... அந்த ஒரு வருஷம் நரக வேதனை அனுபவிச்சேன். இந்த நாட்ல பெண்களுக்கு எங்கங்க சுதந்திரம், உரிமை இருக்கு? என்ன தான் பெண்கள் பெரிய படிப்பு படிச்சிருந்தாலோ, பெரிய பதவியில இருந்தாலோ அவுங்க ஆண்களுக்கு பின்னாடி தான் இருக்காங்க...
""ஒரு பெண் கலெக்டரா இருந்தா கூட, பின்னாடி நின்னு அவள இயக்குறது ஒரு ஆண். ஏன், ஒரு பெண் முதல்வர் கூட, தன்னிச்சையா ஏதாவது செய்ய முடிஞ்சதா? அவள் புருஷன் தானே எல்லாம் பார்த்தார். ஒரு பாஸ்போட் அதிகாரியா ஒரு பெண் இருந்தாங்களே, அவர் ஊழலுக்கு பின்னால இருந்த அவர் புருஷன் ஒரு ஆண் தானே?


""தப்பு செய்யற பெண்களுக்கு பின்னால நிக்கிறது கூட ஒரு ஆண் தான். பெண்கள் தன்னிச்சையா இயங்க முடியாது.பெண்கள் வேலைக்கு போறது கூட, அவள் சுதந்திரத்துக்காக இல்லைங்க; அவள் கொண்டு வர்ற பணத்துக்காக தான். ஒருவேளை, கோடி, கோடியா சொத்து, பணம் வைச்சிருக்கிற பெண்ணுக்கு வேணா தனி உரிமை, சுதந்திரம் இருக்கலாமோ, என்னவோ...?
""என் வீட்டுக்காரர் என்னை, "ஏய் பொம்பள'ன்னு தான் கூப்பிடுவார்; அவரைப் பார்த்து, என் மகனும் கூப்பிடுறான். அவர் அப்படி கூப்பிடுறத செல்லமா அழைக்கிறதா நான் நினைச்சிக்குவேன். அவுங்க அப்பா, அவர் அம்மாவை அப்படித்தான் கூப்பிடுவாராம்.
""நம்ம பாரத நாட்டில, பெண்கள் இப்படித் தான் இருக்கணும்ன்னு தலைவிதிங்க; இதை யாராலும் மாத்த முடியாது. நான் ஒரு சராசரி இந்தியப் பெண்ணா மாறினதுல என்னங்க ஆச்சரியம். தயவுசெய்து நீங்க, உங்க மனைவியை ஒரு அடிமையா நடத்தாம இருக்க, முயற்சி செய்யுங்க, என்ன?'' என்றார். தொலைபேசி ஒலிக்க, எழுந்து சென்று பேசிவிட்டு வந்தார். ""என் வீட்டுக்காரர்தான்... நீங்க போயிட்டீங்களா?ன்னு கேட்டார்.''
நான் வாங்கி வந்த பழங்களையும், அழைப்பிதழையும், என் தோழியிடம் கொடுத்து, ""கல்யாணத்துக்கு அவசியம்
வர முயற்சி செய்யுங்க...'' என்று, விடைபெற்று வெளியே வந்தேன்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ரெளத்திரம் பழகு!

'என்னவொரு ஆணவம் இருந்தா அந்தாள் எங்கிட்ட அப்படி கேட்டிருப்பான்..? திங்கற சோறு ஜீரணமாகாம கொழுப்பெடுத்துப் போய் அலையறான். எல்லாம் திமிர். பணத் திமிர். பதவித் திமிர்!'

சாருமதியின் மனது அடித்துக்கொண்டது. அவனை... அந்த மேனேஜரை அப்படியே சுட்டெரிக்க வேண்டும்போல் இருந்தது.

'படிச்ச படிப்பு வீணாகக் கூடாது, குடும்பத்தோட பொருளாதார தேவைனு பலதையும் மனசுல வச்சுக்கிட்டு வேலைக்கு கிளம்பற பொணுங்கள வட்டம் போடறதே இந்த மாதிரி சில ஆண் ஓநாய்களுக்கு வேலையாப் போச்சு. இதை நம்ம வீட்டுக்காரர்கிட்ட சொன்னா... ஆத்திரத்துல ஆபீஸுக்கு வந்து அவனோட சட்டயைப் பிடிச்சுட்டா..? வீண் பிரச்னையாயிடுமே..? ஒருவேளை, நம்மள வேலையை விட்டுடச் சொல்லிட்டா..? மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். குடும்பச் செலவுகளுக்கு எவ்வளவோ உதவியா இருக்கு. எவனோ செய்யற தப்புக்கு நாம ஏன் அதை இழக்கணும்? வேற என்னதான் செய்யறது'.

அவளுடைய மனம் ஆத்திரத்தாலும் இயலாமையாலும் கொதித்தது. அலுவலகத்தில் நடந்த அசிங்கத்தை தனக்குள் அசைபோட்டபடி வீடுவரை நடந்தே வந்துவிட்டாள்.

உள்ளே நுழைந்தவள், காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தவற்றைக்கூட ஒழுங்குபடுத்த மனமின்றி அப்படியே சோபாவில் சரிந்து விட்டாள்.

'மனுச மனமே அலங்கோலமா கெடக்கு. வீடு எப்படிக் கெடந்தா என்ன? அப்போ... அவன் ஆரம்பத்துல இருந்தே இந்த நெனப்போடதான் எங்கிட்ட பழகினானா? மேனேஜருங்கிறதுக்காக ஒரு அயோக்கியனுக்கு இவ்ளோ நாள் நான் மரியாதை கொடுத்திருக்கேனே... ச்சீ..!'

கடந்து வந்த நாட்களை அசைபோட்டாள்.

ஒரு வருடத்துக்கு முன்தான் திருமணமாகி கணவருடன் சென்னைக்கு வந்தாள் சாருமதி. சென்னையின் ஆடம்பர வாழ்க்கைக்கு கணவன் ரமேஷின் சம்பளம் போதுமானதாக இல்லை. அவளுக்கும் வீட்டில் தனியே இருப்பது கஷ்டமாக இருக்க, அருகிலிருந்த ஒரு கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்த்து விட்டான் ரமேஷ்.

மேனேஜர் ராகவனுக்கு பி.ஏ. என்பதால், அவனிடம் அதிக நேரம் செலவிட வேண்டிய கட்டாயம் சாருமதிக்கு. ஆரம்பத்தில் மிகவும் மரியாதையாகத்தான் இருந்தான். அதிகமாக ஆண்களின் பழக்கத்தை அறிந்திடாத, அனுமதிக்காத கிராமத்தில் வளர்ந்த சாருமதிக்கு, நட்பு என்ற போர்வையில் பழகத் தொடங்கிய ராகவனின் அழுகல் குணம் தெரியாமல் போய்விட்டது.

மதியம் இவளுடன் பகிர்ந்து சாப்பிட்ட ஒரு சில சந்தர்ப்பங்களில், ''என் வொய்ஃப் சமையல்தான் பெஸ்ட்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா, அதை இப்போ உங்களோட இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் தகர்த்துடுச்சு போங்க'' என்று அவன் சொன்னதைக்கூட, தன் சமையலுக்கான பாராட்டாக மட்டுமே பார்த்தாள்.

இன்னும்... ''இந்த நாவல்ல ஒரு கேரக்டரை படிச்சப்போ எனக்கு உங்க ஞாபகம்தான் வந்தது... நீங்களும் படிச்சுப்பாருங்க...''

''எப்படி சாரு உங்களால மட்டும் எப்பவுமே இப்படி ஃபிரெஷ்ஷா இருக்க முடியுது?''

''சாரு, இந்தக் கவிதையைப் படிச்சுப் பாருங்க... உங்களோட உண்மையான அபிப்ராயத்தை சொல்லுங்க..''

இப்படி அலுவலக வேலையின் இடையிடையே அவளுடைய உணர்வுகளை, ரசனைகளை மதித்துப் பேசுவதாக அவன் பேச்சுகள் அமையும்.

அவனுடைய இந்தப் பேச்சுகளை சாரு அனுமதித்ததற்கு தெரிந்தோ தெரியாமலோ கணவன் ரமேஷ§ம் ஒரு காரணமாகிப் போனான். ஆம்... ரமேஷ§க்கு எதிலும், எந்த ரசனையும் இருக்காது. அலுவலகம் விட்டால் வீடு, டி.வி., சாப்பாடு... என இன்றைய இயந்திர வாழ்க்கையின் பிரதிநிதி அவன். அவள் உடுத்தும் உடைகளைப் பற்றியோ, அவனுக்கென பிரத்யேகமாக அவள் செய்யும் சமையலைப் பற்றியோ அவன் எதுவுமே சொன்னதில்லை. அதனால்தான், அவளையும் கவனித்து கருத்துச் சொன்ன ஒரு நண்பரை (நண்பனாக அவள் நினைத்தவனை) அவளால் மறுக்க முடியாமல் போனது.

'ச்சே... ஒரு பொண்ணுகிட்ட காமத்தோட சாயல் இல்லாம கண்ணியமா பழகறது ஆண்களுக்கு ஏன் அவ்வளவு கஷ்டமா இருக்கு? இது இந்தப் பெண் சமூகத்துக்கே சாபமா?'

அந்த நொடியில் தன் நிலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் முகம் தெரியாத அந்த அத்தனை பெண்களுக்காகவும் வருந்தினாள் சாருமதி.

''சாரு... என்னாச்சும்மா? லைட்கூட போடாம இருட்டுல உட்கார்ந்திருக்கே! ஆர் யூ ஆல்ரைட்..?''

அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான் அலுவலகம் விட்டு வந்த ரமேஷ். கவலைகளை களைத்து எழுப்பியது போல இருந்தது அவளுக்கு அவன் ஸ்பரிசம். ஆரம்பித்துவிட்டாள்...

''என்னங்க... நாளையில இருந்து நான் வேலைக்குப் போகல.''

''ஓ.கே... நோ பிராப்ளம். என்ன ரீஸன்பா... ஏதாச்சும் பிரச்னையா?''

''வந்து... அந்த மேனேஜர் ராஸ்கல் எங்கிட்ட தப்பு தப்பா பேசறாங்க. கொஞ்ச நாளா அவன் பார்வையே சரியில்லை. 'நாப்பது வயசுக்கும் மேலான ஆளு... நாம அவசரப்பட்டு தப்பா நெனச்சுடக்கூடாது'னுதான் பேசாம இருந்தேன். ஆனா இன்னிக்கு...''

''ம்ம்... இன்னிக்கு என்னாச்சு? அழாம சொல்லு.''

''சாயந்தரம், 'லஷ்மி அண்ட் கோ ஃபைல் உங்கட்ட இருந்தா கொடுங்க சார்... அக்கவுன்ட்ஸ் டேலி செய்யணும்'னு கேட்டேன். அதுக்கு அந்தாளு, 'சாருவோட ஃபைலைக்கூட என்னோட வச்சுக்க ஆசைதான்... நீங்கதான் ஒண்ணும் சொல்லமாட்டேங்கறீங்க'னு சொல்லி, என்னைப் பார்த்து ஒரு மாதிரியா சிரிக்கறான். எனக்கு அருவருப்பா போச்சு. ஒண்ணும் பேசாம வேகமா கிளம்பி வந்துட்டேன். இனிமே அந்தாளோட முகத்துலகூட நான் முழிக்கவே மாட்டேன். பெண்களுக்கு பாதுகாப்பே கிடையாதுங்க...''

சாருவின் கண்கள் கோபத்திலும் அவமானத்திலும் பொங்கின.

ஒன்றுமே பேசாமல் சமையலறைக்குள் போன ரமேஷ், சூடாக இரண்டு டீ டம்ளர்களுடன் வந்தான். ''ம்... டீயை எடுத்துக்கோ சாரு...''

அவனின் அந்த ரியாக்ஷனை சாரு ரசிக்கவில்லை. 'என்ன ஆம்பள இவரு..? பொண்டாட்டி என்ன சொல்லிக்கிட்டு இருக்கா... இவரு டீ குடிக்கச் சொல்றாரே...'

எரிச்சலை அடக்கிக்கொண்டு இருந்தாள்.

தொடர்ந்தான் ரமேஷ்... ''நான் சொல்றதை அமைதியா யோசிச்சுப் பாரு. பெண்களோட பதுகாப்பு, அவங்களோட தைரியம்தான்!''

வந்து விழுந்த வார்த்தைகள் அவளை நிமிர வைத்தது.

''எங்க இல்லை பிரச்னைகள்? தினமும் பேப்பரை படி... புரியும். வயலுக்கு வேலைக்குப் போற பொண்ணை தோட்டக்காரன் 'வர்றியா'னு கேட்கறான். கட்டட வேலைக்குப் போற பொண்ணை மேஸ்திரி தப்பா பார்க்கறான். ஏன்... வெளியே போற பொண்ணுங்களுக்குத்தான் பிரச்னையா? வீட்லயிருக்கற பெண்களுக்கு மாமியார் கொடுமை, மாமனார் அத்துமீறல், குடிகார புருஷன்... இன்னும் எவ்வளவோ...''

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சாரு.

''மேனேஜர் தப்பா பேசினான்னு இன்னிக்கு நீ வேலையை விட்டுடலாம். நாளைக்கே காய்கறி விக்கறவன் தப்பா பார்த்தா..? வேற கடைக்குப் போவியா? அவனும் தப்பா பார்த்தா? இதுக்கெல்லாம் ஒரே தீர்வு... நீ தைரியமா இருக்கறதுதான். அதுக்காக உன்னை ஜான்சி ராணி மாதிரி போர்க்களத்துல இறங்கி சண்டை போடச் சொல்லல. ஆனா, உங்கிட்ட தப்பா நடந்துக்க நினைக்கறவங்ககிட்ட, உன்னோட நியாயமான கோபத்தைப் பேசு. முழு எதிர்ப்பையும் காட்டு. அந்தாள்கிட்ட நாக்கை புடுகிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டுட்டு வந்திருந்தா.. இந்நேரம் அவன் பயத்துலயும் அவமானத்துலயும் புழுங்கிட்டு இருந்திருப்பான். நீ இப்படி கண்ணீரும் குழப்பமுமா உட்கார்ந்திருக்க மாட்ட" என்று அழுத்தமாக சொன்னவன்,

"இதோ பாரு சாரு, 'விருப்பம் இருந்தா வேலைக்கு போÕனு உன்கிட்ட சொல்ல மாட்டேன். தைரியம், தன்னம்பிக்கை இருந்தா நாளைக்கு ஆபீஸுக்குப் போ...'' என்றான்.

உடம்பெல்லாம் ஏதோ முறுக்கேறியது போல உணர்ந்தவள், "என்னங்க... இந்த டீ ஆறிப்போச்சு. கொஞ்சம் சூடுபடுத்தித் தர்றீங்களா... ப்ளீஸ்...?" என்று கோரிக்கை வைத்து, சூடான டீயைக் குடித்து முடித்தவள்,

''இனிமே அவன் எங்கிட்ட தப்பா பேசட்டும்... ராஸ்கல்... கோபத்துலயே கொளுத்திடறேன்! உங்க வொய்ஃப் யாருனு காட்டறேன்!''

சாருவிடமிருந்து சூடு குறையாமல் வந்துவிழுந்த வார்த்தைகளை புன்னகையோடு வாங்கிக் கொண்டிருந்தான் ரமேஷ்.

விடியக் காத்திருந்தது இரவு!


சு.ஹேமலதா

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்





ஆகஸ்ட் இரண்டாம் தேதி தம்முடைய பிறந்த நாளை தனியாக (பாவம் பையன்!!! ) கொண்டாடிய மிஸ்டர் மணிகண்டன் அவர்களுக்கு துபாய் நண்பர்கள்(அருமை செல்வன் ,பாவே,பாலாஜி ,ஆத்தா மற்றும் வெற்றி ) சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். நிற்க!!! இனிமேல் இந்த அண்ணனின் அருமை பெருமைகளை பார்க்கபோகிறோம்.

நான் ரெடி ! நீங்க ???
பார்க்க கொஞ்சம் இல்ல இல்ல அதிகமாகவே நல்ல தான் இருப்பான்,என்ன பண்றது பிகர் தான் ஏதும்?? ஹலோ தப்பா எடுத்துகாதிங்க இன்னும் கல்யாண பொண்ணு ஏதும் மாட்டல. அதனாலேயே பையன் ஒரு தேவதாஸ் போலவே சுத்திட்டு இருக்கான்.
நீங்க வேணா உதவி செய்ங்க

அப்புறம்

ரொம்ப சீன் போடுவான் ,,எப்ப போன் பண்ணினாலும் ரொம்ப பிஸி னு சொல்லுவான். தப்பா எடுத்துகாதிங்க ரொம்ப கம்பெனிக்கு நல்ல உழைப்பான்,வாங்கிற சம்பளத்துக்கு அதிகமாகவே!!


பைனலா சொல்றதெல்லாம் இது தான்
ரொம்ப நல்லவன்
ரொம்ப அறிவாளி
ரொம்ப கெட்டிக்காரன்
ஆகையால் அடுத்த பிறந்த நாளுக்காவது நாம வாழ்த்து சொல்ல மறக்கக்கூடாது நண்பர்களே!!!!!

இப்போ லேட்டா சொன்னாலும் லேடஸ்ஸ சொல்லுவோங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணி ரெண்டு மூணு குழந்தை பெற்று மனைவியோடு சந்தோஷமா இருக்க வாழ்த்தும்


அன்பு நண்பன் இராயர்

வெள்ளி, 31 ஜூலை, 2009

மனைவி என்பவள்!!!!!!!




ஆபீஸ் புறப்படும்போது ஷு, சாக்ஸ் எடுத்து வைப்பதில் இருந்து, நடு இரவில் கரன்ட் கட்டானாலும் அலுப்புப் பார்க்காமல் எழுந்து விசிறிவிடும் வரை... ஆசை ஆசையாக பணிவிடைகள் பல செய்தாலும் மனைவி சுமதியை சற்று மதிப்புக் குறைவாகவே பார்ப்பான் ரகு.

ரகுவுக்கும் சுமதிக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. சுமதி, சின்ன டவுன் ஒன்றில் படித்தவள். திருமணத்துக்குப் பிறகுதான் சென்னை வந்திருக்கிறாள். ரகுவும் சென்னையில் பிறந்தவன் அல்ல. வேலை காரணமாக கடந்த பத்து வருடங்களாக சென்னையைப் பழகிக் கொண்டவன். பார்க்க கொஞ்சம் மாடர்னாகத் தெரிவான்.

சுமதியை நேரில் பார்த்து சம்மதம் சொல்லித்தான் திருமணம் செய்துகொண்டான். இருந்தாலும் இப்போதெல்லாம் 'தன் பர்சனாலிட்டிக்கு ஏற்றவளாக சுமதி இல்லையோ' என மனதுக்குள் சில நேரம் ஒரு நினைப்பு வந்துபோகிறது அவனுக்கு.

சுமதிக்கு திருமணத்துக்கு முதல் நாள்தான் பியூட்டிபார்லரே அறிமுகம். பெரும்பாலும் புடவை கட்டி பழகியவள். ரகு கேட்டுக் கொண்டால் சுடிதார் அணிவாள். ரகுவுக்கோ ஆபீஸ் நண்பர்கள் எல்லாம் அவரவர் மனைவியை ஜீன்ஸ் பேன்ட், குர்தா காஸ்ட்யூமில், இரண்டு பக்கமும் கால் போட்டு அழைத்து வரும் அந்த பைக் சவாரியை பார்த்து ஏக்கமோ ஏக்கம். சுமதியிடமும் மெள்ள சொல்லிப் பார்த்தான். "பேன்ட் போட்டு, அதுவும் ரெண்டு பக்கம் கால் போட்டு உக்காரணுமா? உங்ககூடதான் வர்றேன்னாலும் ரோட்டுல எல்லாரும் பார்க்க மாட்டாங்களா..? நான் மாட்டேன்பா'' என்று மறுத்துவிட்டாள்.

"இப்படி நீளமா ஜடை பின்னாம, ஷார்ட்டா யூ கட் பண்ணிக்கோ.''

"ஊருல எல்லாரும் என் முடியைப் பார்த்து ஆசைப்படறாங்க.. அதை எதுக்கு மாமா வெட்டணும்?''

"நான் 5.10... நீ 5.2. ஹய்யோ... ஹீல்ஸாச்சும் போட்டுக்கக் கூடாதா?''

"அத போட்டுட்டு நடக்கத் தெரியாதே. ஏற்கெனவே ஒரு தடவை ஸ்லிப் ஆயிருக்கேன்.''

"இது என்ன 'தொளதொள'னு சுடிதார். டைட்டா தைச்சுப் போடத் தெரியாதா?''

"உடம்பைப் பிடிக்கற மாதிரி சுடிதார் போடுறதெல்லாம் எனக்குப் பிடிக்காதுப்பா..!''

- இப்படியாக ரகுவின் எதிர்பார்ப்புகளும் சுமதியின் நழுவல்களும் நீண்டன.

விளைவு.. 'அவசரப்பட்டுட்டோமோ... சென்னையில வளர்ந்த பொண்ணாப் பார்த்து கல்யாணம் செஞ்சிருக்கலாமோ?' என்று மனதுக்குள் தடுமாறினான் ரகு.

அவனுடைய மேனேஜர் ஸ்ரீராம், அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தவர். அவருடைய மனைவி சென்னையில் படித்து வளர்ந்தவர். "ரகு... ஸாரி, உங்க கல்யாணத்துக்கு வர முடியல. நாளைக்கு சாயங்காலம் நானும் என் வொய்ஃபும் உங்க வீட்டுக்கு வர்றோம். லைட்டா ஏதாச்சும் டின்னர் போதும். செய்வாங்கதானே உங்க மனைவி..?''

- ஸ்ரீராம் கேட்டபோது ரகுவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் பொங்கினாலும், இவர்களுக்கு முன் பெருமையுடன் நிறுத்துமளவுக்கு சுமதி இல்லையே என்று தயங்கினான். இருந்தாலும் மறுக்கமுடியாமல், "வித் பிளஷர் சார்'' என்றான்.

ஸ்ரீராம் தம்பதிக்காக காத்திருந்த நேரத்தில், ஒரு தட்டில் ஜாக்கெட், குங்குமம், மஞ்சள், வெற்றிலை, பாக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுமதி.

"எதுக்கு இது..?'' - வெறுப்பாகக் கேட்டான் ரகு.

"முதல் முதலா உங்க மேனேஜர் வொய்ஃபோட வீட்டுக்கு வர்றாங்க. அவங்களுக்கு வச்சு கொடுக்கத்தான்..."

தலையில் அடித்துக் கொண்டான் ரகு. "அதெல்லாம் வேணாம். அவங்க உன்ன மாதிரி ஜாக்கெட் எல்லாம் போட மாட்டாங்க. எப்பவும் மாடர்ன் டிரெஸ்தான்'' - சுமதியை சுருக்கெனக் குத்தினான்.

"ஜாக்கெட் போடுறாங்களோ இல்லையோ, வர்றவங்களுக்கு வெச்சு கொடுக்கணும்கிறது சம்பிரதாயம்.''

"சொன்னா கேளு. என்னைக் கேவலப்படுத்தாத...''

'க்க்க்ர்ர்ர்ர்ர்....'

காலிங் பெல் அழைப்பு இருவரின் வாதத்துக்கு பிரேக் போட்டது.

'ஹாய்', 'பா....ய்' என்றே பழக்கப்பட்டுவிட்ட மானேஜர் தம்பதிக்கு... இரண்டு கையையும் சேர்த்து வணக்கம் சொல்லி சுமதி வரவேற்றது, பூரி, புலாவ் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்கு இட்லி, வடை செய்திருந்தது, மருந்துக்குக்கூட ஒரு சில வார்த்தைகளாவது ஆங்கிலத்தில் உரையாடாதது, கிளம்பும்போது விடாமல் அந்த ஜாக்கெட் அயிட்டங்களை தட்டில் வைத்துக் கொடுத்தனுப்பியது என... எல்லாவற்றையுமே ரகு தலைகுனிவாக உணர்ந்தான். மறுநாள் அலுவலகத்தில் நிறைந்த சங்கடங்களுடன் மானேஜர் ஸ்ரீராமை எதிர் கொண்டான்.

"என்ன சொன்னாங்க என் சிஸ்டர்'' என்றார் ஸ்ரீராம்.
சற்றே தடுமாறினான் ரகு.

"அதாங்க.. உங்க வொய்ஃப்! நேத்து எங்களை அவ்ளோ உரிமையா அண்ணா, அண்ணினு வாய் நிறைய உறவு சொல்லி கூப்பிட்டாங்க. அவங்க வீட்டைப் பத்தி அவளோ அழகா பேசினாங்க. ரொம்ப ஹோம்லி. எல்லாத்தையும்விட, நாங்க புறப்படும்போது அவங்க அன்பா கொடுத்த அந்த தாம்பூலம்... வெரி நைஸ்! என் வொய்ஃப்கூட அவங்களோட வேர்க்கடலை சட்னிக்கு ஃப்ளாட் ஆயிட்டா. யூ ஆர் வெரி லக்கி ரகு'' என்றபடியே இறுக்கமாக கைகொடுத்து ரகுவை அனுப்பினார் ஸ்ரீராம்.

தன் ஸீட்டில் வந்து அமர்ந்தவனுக்கு அந்த 'ஹோம்லி' சுமதியின் அழகு புலப்படத் தொடங்கியது; அசுர வேகத்தில் அது அவன் நெஞ்சமெல்லாம் படர்ந்தது. மனதுக்குள் அவளை ஒருமுறை ஆரத்தழுவினான். பத்தவில்லை. ஆபீஸ் எப்போது முடியும் என வாட்சையே பார்த்துக் கிடந்தான்!