செவ்வாய், 16 ஜூன், 2009

நூறு சிறந்த சிறுகதைகள்



கேணி இலக்கியச் சந்திப்பில் பேசுவதற்காக என் விருப்பக் கதைகளை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்த போது இளம் வாசகர்களுக்காக நான் முக்கியம் என நினைக்கும் சிறுகதைகளை அடையாளம் காட்டலாமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப் பட்டியல்

கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளைப் பட்டியிலிட்டிருக்கிறேன். இது தரவரிசைபட்டியல் இல்லை. மாறாக பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகளில் அமைத்த சிறந்த சிறுகதைகள் இவை. இவர்கள் தனித்துவமாக கதை சொல்லும் எழுத்தாளர்கள்.

என் நினைவில் உள்ள கதைகளிலிருந்து இந்தப் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபடல்களும் மறதியும் இயல்பாகவே இருக்க கூடும்.

இந்திய மொழிகளில் தமிழில் தான் இவ்வளவு மாறுபட்ட சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகின் சிறந்த சிறுகதைகளாக கொண்டாடப்பட வேண்டிய பல கதைகள் தமிழில் வெளியாகி உள்ளன. இவை ஆங்கிலத்தில் ஒரே தொகுப்பாக வெளியாகி உலக இலக்கிய பரப்பில் கவனம் பெற வேண்டும் என்பதே எப்போதும் உள்ள விருப்பம்.

இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன. இது புதிய வாசிப்பிற்கான அடையாளம் காட்டும் முயற்சி மட்டுமே. அக்கறை உள்ள வாசகன் நிச்சயம் இதிலிருந்து தனது வாசிப்பின் தளங்களை விரித்துக் கொண்டு செல்ல முடியும்.

நூறு சிறந்த சிறுகதைகள்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

****

எஸ்.ராமகிருஷ்ணன்

http://www.sramakrishnan.com/

திங்கள், 15 ஜூன், 2009

காதல்



ம்யாவுக்கும் ராம்கிக்கும் கல்யாணமாகி, முழுதாக மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. இன்றைக்கும் அவள் மனதில் குடிகொண்டிருக்கும் அந்த விநோத ஆசையைச் சொன்னால், கேட்பவர்கள் சிரிப்பார்கள்.
சின்ன வயதில் இருந்து நம் எல்லோரையும் போலவே நிறைய சினிமாக்கள் பார்த்து, தலையணைக்கு அடியில் மறைத்து வைத்து மாதாந்திர நாவல் படித்து வளர்ந்தவள்தான் ரம்யாவும். கதாநாயகன், கதாநாயகியிடம் 'ஐ லவ் யூ' சொல்லாத சினிமாவோ... நாவலோ உண்டா என்ன? ஏதோ அலுத்துப்போன வார்த்தைகளாக நாம் காட்டிக் கொண்டாலும் 'ஐ லவ் யூ' என்ற அந்த மூன்று வார்த்தைகளுக்கென்று ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது.சினிமா, டிராமாவெல்லாம் வேண்டாம். நிஜத்தில், நேரில், ஒரு ஆண்.. ஒரு பெண்ணிடம்.. 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையைச் சொன்னால், எப்படி இருக்கும்? என்ற கற்பனை பல இரவுகளில் அவளைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. ஆனால், 'எனக்கென ஒருவன் வருவான். அவனை என் அப்பா, அம்மா எனக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள். அவர்கள் நிச்சயித்த வண்ணம் அவனுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும். அவன் என்னிடம் திகட்டத் திகட்ட ஐ லவ் யூ சொல்வான்' என்பதே அவள் கனவுகளின் முடிவுரையாக இருக்கும்.

அந்த ஆசைதான் மூன்று வருடங்களாகியும் இன்னும் நிறைவேறாமல் அவளைத் துரத்திக் கொண்டிருக்கிறது. நம் ஊரில் நிஜமான திருமணம், சினிமா திருமணம் போலவா இருக்கிறது?

'சார், எனக்குக் கல்யாணம்' என்று இரண்டு மாதங்களாக பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி, வெட்கம் மரத்துப் போனது.

''என் பாஸ் வர்றார்.. கொஞ்சம் சிரிக்கக்கூட மாட்டியா?'' என்று ரிசப்ஷனிலேயே ராம்கியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது.. தன் வருமானம் பற்றியும், கடன்கள் பற்றியும் முதலிரவில் ராம்கி நீண்ட விளக்கங்கள் தந்தது..

- இப்படி அவளுக்கு வாய்த்தவை எல்லாமே சராசரி அனுபவங்கள்தான்.

ராம்கி மிக மிக பிராக்டிகலானவன். பிரபல கட்டட கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில் சீனியர் இன்ஜினீயராக இருக்கிறான். 'மூன்று வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லையே' என்ற நியாயமான ஏக்கத்தைத் தவிர அவனுக்குள் நிறைவேறாத ஆசை என்று எதுவும் இல்லை. சென்னையில் அவன் வாழ்ந்த 'பேச்சுலர்' வாழ்க்கையை ஒப்பிட்டால், இப்போது அவன் சொர்க்கத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். தன் வாழ்வையே மாற்றி, குடும்பஸ்தன் என்ற கௌரவத்தைத் தனக்குக் கொடுத்திருக்கும் தேவதையாகத்தான் அவன் ரம்யாவைப் பார்க்கிறான்.

ஆனால், அதை முழு நீள வசனமாக எழுதி வாசிக்கவா முடியும்? ''நான் வரணும்னெல்லாம் எதிர்பார்க்காதே.. நீ சாப்பிட்டுட்டுப் படுனு எத்தனை தடவை சொல்றேன்.. கேக்கறியா நீ? இவ்வளவு வீக்கா இருந்தா, வயித்துல குழந்தை எப்படித் தங்கும்?'' என்று அதட்டுவதுதான் அவனுக்குத் தெரிந்த அக்கறை!

அன்றும் அப்படித்தான். தான் அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்திருந்த லேடி டாக்டரிடம் போக மறந்ததற்காக கொஞ்சம் அதிகமாகவே கத்திவிட்டான் ராம்கி. கண்ணீர் பொங்கி வழிந்தது ரம்யாவுக்கு. வேகமாக உள் அறைக்கு ஓடியவள், கட்டிலில் விழுந்து குலுங்கி அழுதாள்.

''உன்னை சமாதானப்படுத்துறதுக்கு இப்போ எனக்கு டைம் இல்லை ரம்யா!''

- சொல்லிவிட்டு அவன் வாட்ச்சைப் பார்த்தபடியே கிளம்பி விட்டான்.

ரம்யாவுக்குக் கோபம் கோபமாக வந்தது. ராம்கி எப்போதும் இப்படித்தான். இதுவரை, அவர்களுக்குள் எத்தனையோ முறை சண்டை வந்திருக்கிறது. ஆனால், ஒருமுறைகூட அவன் அவளை சமாதானப் படுத்தியதில்லை. 'எந்தக் கோவமுமே ரெண்டு நாள்ல சரியாகிடும்! அது வரைக்கும் எந்தப் பதிலும் பேசாம, சும்மா இருந்தாலே போதும்!' என்பது அவன் எண்ணம். அதனால் வந்த அணுகுமுறை இது.

அவனோடு வேலை பார்ப்பவர்கள் வேண்டுமானால், இந்த அணுகுமுறையால் சந்தோஷப்பட்டிருக் கலாம். ஆனால், ரம்யாவை இந்த அணுகுமுறைதான் கொன்று எடுத்தது. 'என்னை சமாதானப்படுத்துறதுக்கு கூட நேரமில்லையாம். அப்போ அடுத்த மாசம் வரப்போற உன் பிறந்த நாளுக்காக உனக்கே தெரியாம கோட்-சூட் எடுத்துத் தைக்கக் கொடுத்திருக்குற நான், பைத்தியக்காரியா?'
- ரம்யாவுக்கு சாப்பாடு இறங்கவில்லை.

'அவன் வந்து பார்க்கும்போது நான் வீட்டுல இல்லைனா.. ம்ஹ¨ம், செத்துக் கிடந்தா எப்படி இருக்கும்?' விபரீதமாகப் போயின அவள் எண்ணங்கள்.

'இல்ல.. சும்மா போகக் கூடாது. பளிச்சுனு நேராவே நாலு வார்த்தை கேட்டுட்டுதான் போகணும் அப்பதான் அதுக்கு (!) உறைக்கும்' தோன்றிய உடனேயே போனை எடுத்தாள்.

வேலையின் இரைச்சலின் ஊடே செல்போனை எடுத்த ராம்கி, அப்படி ஒரு உணர்ச்சிவசப்பட்ட பேச்சை எதிர்பர்க்கவில்லை. ''மனுஷனாடா நீ..? மனசுனா என்னனு உனக்குத் தெரியாதா? நான் அழுதா, கோபப்பட்டா நீ சமாதானப்படுத்த மாட்டியா? தானா ரெண்டு நாள்ல சரியாகிடும்னு வெயிட் பண்ணுவியா? பளிச்சுனு ரெண்டு அடி அடிச்சா கூட எனக்கு சந்தோஷமா இருந்திருக்குமே! அது புரியலையே உனக்கு?'' என்று படு வேகமாகப் பேசியவள், பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டாள்.

'ஊருக்குப் போய் அப்பா, அம்மாவைப் பார்த்துட்டு ரெண்டு வாரம் கழிச்சுத்தான் வரணும்' - முணுமுணுத்தபடியே டிராவல் பேக்குக்குள் துணிகளைத் திணித்தாள்.

அரை மணி நேரத்தில் காலிங் பெல் அடித்தது.. திறந்தாள்.. 'முக்கியமான சைட்.. நான்தான் இதுல முழுப் பொறுப்புமே.. கம்பனிகிட்ட நல்ல பேர் வாங்கணும்..' என்ற அத்தனை பொறுப்புகளையும் தள்ளி வைத்துவிட்டு ராம்கி நின்றிருந்தான்.

சட்டென்று அவளைத் தள்ளிக் கொண்டே உள் நுழைந்தவன், அழுத்தமாக அவளை அணைத்தபடி பேசினான்.. ''உன்னை விட எனக்கு வேற எதுவுமே முக்கியம் இல்ல ரம்யா. நீ கோவமா இருந்தா, நான் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிடுவேன் தெரியுமா? இதெல்லாம் நான் சொன்னாதான் உனக்குப் புரியுமா... மரமண்டு!''

ரம்யா பதில் ஏதும் பேசாமல் அவன் சட்டையில் முகம் ஒற்றி தன் கண்ணீரைத் துடைத்தாள்.

''ஐ லவ் யூடா'' ராம்கியின் மனசுக்குள் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
அந்தப் பரவசம் மெள்ள மெள்ள மயக்கமாக உருவெடுக்க, அப்படியே கணவன் தோளில் சாய்ந்தாள் ரம்யா.

ராம்கி பயந்து போனான்.

நீங்கள் பயப்படாதீர்கள்.

எல்லாம் நல்ல சேதியாகத்தான் இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



Thanks: Aval Vikatan

ஞாயிறு, 14 ஜூன், 2009

உலக ரத்த தான தினம்



உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ரத்த தானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும் பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே ரத்த தானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக ரத்த தானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை ரத்த தானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் ரத்த தானத்தை ஊக்குவிப்பதாகும். வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை ரத்த தானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே ரத்த தானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க ரத்த தானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் ரத்த தானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் ரத்த தானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் ரத்த தானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும். இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.

இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி ரத்த தானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை ரத்த தானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் ரத்த தானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

ரத்த தானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக ரத்த தான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் ரத்த தானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விஷயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.


சனி, 13 ஜூன், 2009

அந்தரங்கம்-சிறுகதை (படித்ததில் பிடித்தது)


ஆனந்த் ராகவ்

லுவலக அறைக்குள் நுழைந்ததும், தன் இருக்கைக்கு எதிரே தீப்தி உட்கார்ந்திருந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்துக்குப் போகாமல் அங்கே அவள் வந்த காரணம் என்ன? ''என்னாச்சு? ஏதாவது பிரச்னையா? இல்லே, உடம்பு கிடம்பு சரியில் லையா?'' என்றான் கரிசனத்துடன்.

'இல்ல நிக்கி, இந்தப் பக்கம் ஒரு க்ளையன்ட் மீட்டிங் இருந்தது...'' சிரிப்பும் தவிப்புமாகச் சொன்னவளைச் சந்தே கம் தீராமல் பார்த்தான். ''மீட் பண்ண வேண்டிய க்ளையன்ட் வர கொஞ்சம் லேட்டாகும்போலிருந்தது. அதுவரைக்கும் இங்கே இருக்கலாமேனு வந்தேன்'' என்றாள், அவன் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டவள் போல!

தீப்தி. இப்போதுதான் உடம்பு வாசனை பழகிய ஆறு மாத மனைவி. அவனைப் போலவே எம்.பி.ஏ., 14 மணி நேர வேலை, அவசர வாழ்க்கை என்று சுழலும் பொருளாதார சுபிட்சம் உருவாக்கிய பிரஜைகளில் ஒருத்தி. அவனுக்குத் துளியும் பிடிக்காத கோல் கொப்பாவும் பாவ் பாஜியும் சப்புக்கொட்டிச் சாப்பிடுபவள். சமையல் செய்வதில் நாட்டம் இல்லாதவள். அவன் தாய்மொழி யான தெலுங்கைக் கற்றுக்கொள்ள எந்த ஆர்வமும் காட்டாதவள்.

அவள் பாதி, அலுவல் பாதி என்று இயங்க ஆரம்பித்தான். அவள்பாட்டுக்கு பேசிக்கொண்டு இருக்க, இன்டர்காம் தொட்டு யாரையோ விசாரித்தான். காபி வரவழைத்தான். யாரையோ கூப்பிட்டு, தன் அலுவல்களைப் பத்து நிமிடம் தள்ளிப்போடச் சொன்னான். கணிப்பொறியை ஆன் செய்தான்.

அவள் அதற்காகவே காத்திருந்தது போல இயல்பாக, ஆனால் அழுத்தமாக ஆரம்பித்தாள். ''பை த வே நிக்கில்... நான் இன்னிக்குக் காலைல தப்பா உனக்கு ஒரு மெயில் அனுப்பிட்டேன்'' என்றாள். அவன் குழப்பத்தோடு அவளைப் பார்த்தான்.

''நிர்மலா இமெயில் ஐ.டிக்கு அனுப்புறதுக்குப் பதில் நிக்கில்ங்கற ஐ.டிக்கு அனுப்பிட்டேன். என்ஐனு முதல் ரெண்டு எழுத்து டைப் பண்ணவுடனே லிஸ்ட் வரவும், அதில் நிர்மலாவை க்ளிக் பண்றதுக்குப் பதிலா நிகிலைக் க்ளிக் பண்ணிட்டேன். நிர்மலா மெயில் வரலைனு சொன்னா. சென்ட் பாக்ஸ்ல பார்த்தா, அது உனக்குப் போயிருக்கு'' எனச் சிரித்தாள்.

''ஹோ!'' என்றான் அவன் இயல்பாக. கம்ப்யூட்டர் உயிர் பெற்று ஜன்னல் முகம் காட்டி வழிவிட்டு, நீலத் திரையில் கட்டங்களாக ஐகான்களைச் சேகரித்தது.

''அந்த மெயிலை டெலிட் பண்ணிடு நிக்கி!'' என்றாள். ஷ்யூர்!'' என்று தலையாட்டினவனின் கண்களில் சந்தேகம் தேங்கியிருக்க, மறுபடி அவள் பேச ஆரம்பித்தாள். அவள் பார்க்க வந்த வாடிக்கையாளர் பற்றி... அந்த நிறுவனத்தின் வியாபாரத்தைப் பெற செய்கிற முயற்சிகள் பற்றி... அவள் நிறுவ னத்துக்கும் அவள் பதவி உயர் வுக்கும் அந்த கான்ட்ராக்ட் எவ்வளவு முக்கியம் என்பது பற்றி... பேசிக்கொண்டே போனவளை மேலோட்டமாகக் கவனித்துக்கொண்டு இருந்தான். ''உனக்கு நேரமாகலையா? எனக்கு இன்னும் அரை மணி யில் ஒரு மீட்டிங் இருக்கு!''

''யெஸ், கிளம்பணும்''என்று எழுந்தாள். காத்திருந்தாள். அவன் அலுவலக அஞ்சல் பெட்டியைத் திறந்து அலுவ லக அஞ்சல்களை நிரடினான். ''உன் ஜிமெயில் ஐ.டிக்கு வந்திருக்கும்'' என்றாள் கம்ப் யூட்டரின் திரையைப் பார்த்த படி.

''அதை நான் அப்புறமா தேடி டெலிட் பண்ணிக்கறேன். இப்ப ஆபீஸ் மெயில்ஸ் வந்து குவிஞ்சிருக்கும். ரிப்ளை பண் ணணும். நீ கிளம்பும்மா ஸ்வீட் ஹார்ட்!'' என்றான் அவ னுக்குள் உருவான லேசான எதிர்ப்பு உணர்வின் உந்து தலில்.

நின்றவள், போகாமல் மறுபடி உட்கார்ந்தாள். கேசத் தைப் பின்புறமாகத் தள்ளி விட்டுக்கொண்டாள். தன் கைப்பையை மேஜை மேல் வைத்தாள்.

''நிக்கி! ஐ வில் பி லாட் மோர் ரிலீவ்டு இஃப் யூ டெலிட் த மெயில் ஐ சென்ட்!'' என்று சிரித்தாள்.

அவள் சிரிப்பில் நிறைய தினுசு இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் பார்க்கும்போது ஒரு சிரிப்பு. அவன் உறவினர் களிடம் ஒரு தினுசுச் சிரிப்பு. அவனிடத்தில் வேறு மாதிரிச் சிரிப்பு. அவளின் தடுமாற்றத்தையும் படபடப்பையும் கணித்தவனுக்கு அந்த மின்அஞ்சலைப் படிக்க வேண்டும் என்கிற குழந்தைத்தனமான ஆர்வம் தோன்றியது. அந்தக் கடிதத் தில் அப்படி என்னதான் இருக்கிறது? இதற்காகத்தான் இங்கே வந்து தவமிருக்கிறாள். க்ளையன்ட் மீட்டிங் எல்லாம் பொய்.

''கமான் தீப்தி... யூ கேரி ஆன்! நான்தான் டெலிட் பண்றேன்னு சொல்றனே..!''

''அதை டெலிட் பண்ண ஒரு நிமிஷம் ஆகுமா டியர்?''

''ஆகாதுதான்! ஆபீஸ் வேலையை விட்டுட்டு அதை முதலில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதில் நீ இவ்வளவு பிடிவாதமா இருப்பதுதான் எனக்குப் புரியலை தீபு!'' அவளுக்கு இணையான பொய்ச் சிரிப்புடன் சொன்னான்.

''நான் யாருக்கோ எழுதினதை நீ படித்தால், எனக்குச் சங்கடமாய் இருக்காதா, நிக்கி?''

''கமான் தீப்தி! நான் அதைப் படிக்கப்போறேன்னு நீ முடிவு பண்ணிட்டியா?''

''அப்படிச் சொல்லலை நிக்...'' அவன் கைக்குள் போய்விட்ட தன் உடைமையை, அவன் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் நைச்சியமாக மீட்டெடுக்கும் ஆயாசமான முயற்சியில் முதலடி எடுத்துவைத்தாள் அவள். ''நான் உன் அந்தரங்கமான விஷயங்கள்ல தலையிடறேனா? உன் மெயில் ஐ.டி. பாஸ்வேர்டு என்ன... நீ யாருக்கு மெயில் அனுப்புறேன்னு ஏதாவது கேட்கிறேனா நிக்கி?

''ஆனா, இதையெல்லாம் உன்னிடம் பகிர்ந்துகொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை தீப்பும்மா!'' என்றான் இடைமறித்து.

''அப்படின்னா, என் அந்தரங்க மான விஷயங்கள் அத்தனையும் உன்னிடம் ஷேர் பண்ணிக்க ணும்னு எதிர்பார்க்கிறாயா டார்லிங்?''

''அப்படி எதிர்பார்ப்பது தப்பா தீப்தி?'' அவனையும் அறியாமல் சின்னதொரு விவாதத்துக்கு இட் டுச்சென்றது அவனது உள்ளு ணர்வு.

''கல்யாணம் ஆகி உன்னுடன் எல்லாத்தையும் பகிர்ந்துகொண்டாலும், எனக்கென்று சில ரக சியங்கள் இருக்கலாம் இல்லையா நிக்?''

''லைக் வாட் தீப்தி?'' பேச்சில் கொஞ்சமும் கோப உணர்வு தலையிடக் கூடாது என்று ஜாக்கிரதையுடன் தலையைப் பின்பக்கம் தள்ளி, இருக்கையில் நன்றாகச் சாய்ந்துகொண்டு நிதானமாக கேட்டான்.

''உதாரணமா, எனக்கும் என் தங்கைக்கும் சில ரகசியங்கள் இருக்கலாம். எனக்கும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்களுக்கும்! ப்யூர்லி கேர்ள்ஸ் டாக். எங்கள் கணவர்கள் குறித்து, பழைய நண் பர்கள் குறித்து, பழைய சம்பவங்கள் குறித்து நாங்கள் விவாதிக்கிற சில விஷயங்கள் உனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை... இல்லையா ஹனி?''

''கணவன் மனைவி உறவுக்கு என்று பிரத்யேகமாக எந்தப் புனிதத்துவமும் இல்லை என்கி றாய். அப்படித்தானே?''

''தெலுங்குப் பட டயலாக்எல்லாம் பேசாதே நிக்கி! எனக்கு பிரத்யேகமாய், அந்தரங்கமான விஷயங்கள் இருக்கும் என்பதை நீ அங்கீகரிக்கணும். அது உன் னைப் பற்றியே இருந்தாலும், அதுபற்றி கவலைப்படாத பெருந்தன்மை உனக்கு இருக்கணும்!''

'இது இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி இருக்கே?' என்று அவளுக் குப் பதில் சொல்லும்முன், தொலைபேசி ஒலித்தது. எடுத்து, ''வா, சுரேஷ்!'' என்றான். ஓர் இளைஞன் உள்ளே வந்து தீப்தியின் பக்கத்து நாற்காலியில் அமர்ந்து, சற்றே தயக்கத்துடன் நிகிலிடம் அன்றைய அலுவல் பற்றிப் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில், தீப்தி தீவிர யோச னையில் இருந்தாள்.

அவன் வெளியேறியதும் நிகில் மௌனமாக இருந்தான். ஆறு மாத உறவில் மணிக்கணக்காகப் பேசியபோது உணராத அவளின் இன்னொரு பரிமாணம் அந்தப் பத்து நிமிடங்களில் புலப்பட்டது போலிருந்தது. அவள் பிடிவாதத் தின் எல்லையைத் தொட்டுப் பார்த்துவிட வேண்டும்.

''தீப்தி, உன் அந்தரங்கத்தை நான் மதிக்க வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது போல, என் மேல் நம்பிக்கை வைத்து நீ நடந்துக் கணும்னு நானும் எதிர்பார்க் கலாம் இல்லையா? டெலிட் செய்றேன்னு சொன்னப்புறமும் போகாமல் உன் கண் முன்னா டியே அதைச் செய்யணும்னு எதிர் பார்ப்பது என் மேல் நம்பிக்கை இல்லாததால்தானே?''

''அது உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை ஹனி! என் மனச் சமாதானத்துக்காக!''

''அதில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறாய்?'' என்றான், அவள் கண்களைப் பார்க்காமல். அவனுள் பற்றி எரியும் ஆர்வத் தைக் கட்டுப்படுத்தி, மிக இயல்பாகக் கேட்பது போன்ற தோரணையைக் கொண்டுவர முயன்றான்.

''இல்லை நிக்கி! அது எதுவா வேணாலும் இருக் கட்டும். அதைச் சொல்லச் சொல்லி என்னைக் கட்டா யப்படுத்தாதே!''

''கட்டாயப்படுத்தவில்லை தீப்தி! நிர்மலாவுக்கு நீ எழுதி னதை நான் யதேச்சையா பார்த்தா என்ன ஆகிடப் போகுதுங்கறேன்? அதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகறே?'' என்று சிரித்தான். (சொல்லு, என்ன எழுதி யிருக்கே? என்னைப்பத்தி தானே? என்னைவிட நீ அதிகம் சம்பாதிப்பதையா? படுக்கையில் நான் உன்னை சந்தோஷப்படுத்தவில்லை என்றா? நிர்மலாவுக்கா அல்லது நிர்மல் குமாருக்கா?)

''நான் விவாதம் பண்ண விரும்பலை நிக்கி! அது உனக்கு எழுதினது இல்லை. அதனால் அதைப்பற்றி நீ தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமும் இல்லை!'' சலனமில்லாமல் சொன்ன அவளின் தீவிரம், அவனின் ஆணாதிக்க மனப்பான் மையை அசைத்து அறை கூவல் விடுத்தது. கெஞ்சிக் கூத்தாடிப் பெறுவாள் என்று நினைத்ததற்கு மாறாக அதட்டிக் கேட்கும் அவளது மனோபாவத்தை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறினான். தார்மிக பலம் இல்லாத தன் எதிர்பார்ப்பில் தெரிந்துகொள்வதன் ஆர்வம் மட்டுமே மிஞ்சியிருக்க, அவளை வேறு ஆயுதத்தால் வெல்ல வேண்டியிருந்தது.

''உன் அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது என்பது நம் காதலைவிட முக்கியமா னதா?'' என்றான் மென்மை யான குரலில்.

காதல் என்கிற வார்த் தைப் பிரயோகத்தில் அவள் முகம் பிரகாசமானது. அது அவள் அதிகாரம் செலுத்தும் களம். தீ மூட்டவும், தாக்க வும், தணிக்கவும் பழகியிருந்த களம். அவன் தோற்றுப்போனதை உணர்ந்த வேகத் தில் கைகளை நீட்டி மேஜை மேலிருந்த அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள். அவனை ஆழமாகக் கண்ணுக்குள் பார்த்தாள். ''நீ என்ன நினைக் கிறேன்னு எனக்குத் தெரி யும். சத்தியமா உன்னைப் பத்தி அதில் ஒண்ணும் எழுதலை. என்னை நம்பு'' என்றாள்.

அவன் மனதில் நெருடிக்கொண்டு இருந்ததை அவள் போட்டுடைத்ததில், அவன் மௌனமானான். இதற்கு மேல் என்ன செய்வது? நாக ரிகம் கருதித் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அவள் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ளும் காட்டுமிராண்டி மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி நடத் தையில் மேம்பட்டவனாக, நாசூக்கு நிறைந்தவனாக முகச் சாயம் பூசித்தான் ஆக வேண் டுமா? நிஜமாகவே அது நிர்மலா வுக்கு எழுதியதாக இருந்தால்?

கடகடவென்று ஜிமெயில் தளத்தைக் கொணர்ந்தான். தன் பெயரை அடித்தான். பாஸ் வேர்டை அடிக்கும் முன் எழுந் தான். ''நீயே செய்... என் பாஸ் வேர்டு சொல்றேன்'' என்றான். தோற்றுப்போகும் முன் அவளைச் சங்கடப்படுத்தும் எண்ணம் மேலோங்கி நின்றது அவனுக்கு. அவள் மறுத்தும் அவளைப் பிடிவாதமாக உட்காரவைத்தான். பாஸ்வேர்டு சொன்னான்.

அவள் மௌனமாக விசை களை அழுத்தினாள். மின் அஞ்சல் உயிர் பெற்று வரிசைப்படுத்த, அதன் நடுவில் அவள் பெயர் பளிச்சென்று ஒளிர்ந்தது. அதன் பக்கவாட்டிலிருந்த கட்டத்தைக் கிளிக்கி குப்பைத்தொட்டிக்குத் தள்ளினாள். அவன் காத்திருந்தாற் போல, ''சந்தோஷமா?'' என்றான். அவளோடு ஒரு ஆயுசு பூரா வாழ்க்கை வாழ்ந்ததன் ஆயாசம் ஆட்கொண்டது. ''ஒரு நிமிஷம்'' என்றாள் அமைதியாய். குப்பைத் தொட்டியை கொட்டிக் காலியாக் கினாள் சர்வ ஜாக்கிரதையாய்! அவன் பின்னால் நிற்பது தீப் பிழம்பு போல அவள் முதுகில் சுட்டது. தன் மௌனத்தால் அவளை இன்னும் வருத்தினான்.

''என் மேல் கோபம்தானே? எனக்குப் புரியுது'' என்றாள், அவனை ஏதாவது பேசவைக்கும் நோக்கத்துடன்!

''நாட் அட் ஆல்! நீ சொன்ன மாதிரி, அது எனக்கு எழுதப்பட வில்லை. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தார்மிக உரிமை எனக்கு இல்லை!'' தோல்வியை மறைத்துப் பாசாங் குடன் பெருந்தன்மையாகச் சொன்னான்.

''நிர்மலாவுக்குக் கொஞ்சம் ப்ராப்ளம்ஸ். விவாகரத்து பத்தி யோசிச்சுட்டிருக்கா. அதைப்பத்தி நாங்கள் எழுதிக்கொண்ட மெயில் உன் ஐ.டிக்குப் போனது தெரிந்தாலே, அப்செட் ஆகிவிடு வாள்! அதுதான், நான்...'' பலமில்லாத வார்த்தைகளில் பேச ஆரம்பித்தவளைப் பாதியில் இடைமறித்தான்...

''அதான், எனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று சொன்னேனே..!'' (கடிதத்தை அழித்துவிட்ட தெம்பில் பொய் சொல்கிறாள்.)

அவன் கையை இறுகப் பற்றி னாள். ''சரி, நான் கிளம்பறேன்... லேட் ஆயிடுச்சு!'' என்றாள். நகரில் புதிதாக ஓர் உணவு விடுதி திறந்திருப்பதாகவும், அந்த வார வெள்ளிக்கிழமை இரவு அங்கே போகலாம் என்றும் சொன் னாள்.

''உத்தரவு மகாராணி! தாங்கள் சொல்லி நான் ஏதாவது செய் யாமல் இருந்திருக்கிறேனா?'' என்றான். அவனைச் செல்லமாக கன்னத்தில் தட்டி, ''போடா ராஸ்கல்!'' என்று உதட்டைக் குவித்து முத்தமிடுவது போல அபிநயித்துவிட்டுப் புறப்பட்டாள்.

அலுவலகப் படிகள் இறங்கி வெளியே வந்து, மரத்தடி நிழல் மாருதியைக் கதவு திறந்து உட்கார்ந்துகொண்டாள். நீண்ட தாகப் பெருமூச்சுவிட்டாள்.செல்போன் எடுத்து ஆராய்ந்து அழுத்தி, ''ஹாய்... ஒரு சின்ன சந்தேகம். மெயில் ஒண்ணை தப்பா டெலிட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்ட்டி பண்ணிட்டேன். அந்த மெயிலை மறுபடி எடுக்கணும்னா முடியுமா?'' என்றாள்.

நிகில் தன் தொலைபேசியைத் தொட்டு, ''மூர்த்தி... ஒரு டவுட்! மெயில் ஒண்ணைத் தப்பா டெலிட் பண்ணிட்டேன். ட்ராஷ் கேனையும் எம்ப்ட்டி பண்ணிட் டேன். அந்த மெயில் எனக்கு வேணும். எப்படி எடுக்கறது? ஏதாவது வழி இருக்கா?'' என்றான்.

பூவுக்கு விலங்கு பூட்டுவதா?





உழைக்க வேண்டும்; உயர வேண்டும்; இதனால் ஊரும் உயரும்; உலகமும் உயரும். ஆனால் யார் உழைப்பது? யாருக்காக உழைப்பது? எந்த வயதில் உழைப்பது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சிந்திக்க வேண்டும்.

"பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி. பருவம் தவறிப் பயிர் செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிர்பாராத விளைவுகளே ஏற்படும். நன்மைக்குப் பதிலாக தீமைகளும், உண்மைக்குப் பதிலாகப் பொய்களும் விளைவதால் பயன் என்ன? பூக்களுக்குப் பதிலாக முட்களே முளைக்கும். நிலவுக்குப் பதிலாக நெருப்பே சுடும்.

குழந்தைத் தொழிலாளர் பெருகுவது தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் அவமானம்; மன்னிக்க முடியாத குற்றம்; நம்மை நம்பிப் பிறந்த குழந்தைகளை நாமே தவறு செய்யத் தூண்டலாமா? அவர்கள் அறியாமல் செய்த குற்றத்திற்குத் தண்டனைகளை அனுபவிக்க வேண்டியவர்கள் பெற்றோர்களே! இந்தப் பொறுப்பற்ற பெற்றோர்களுக்கே முதலில் பாடம் நடத்தப்பட வேண்டும்.

குழந்தைப் பருவம் என்பது வாழ்க்கைக்கான கல்வி கற்றல், மகிழ்ச்சியை அனுபவித்தல், தீமைகளிலிருந்து விலகிப் பாதுகாப்பாக இருத்தலாகும். இந்தக் குழந்தைப் பருவத்தை அனுபவிக்கச் செய்யும் பொறுப்பு பெரியவர்களுடையது. அதனைச் செய்யாமல் அவர்களைச் சுரண்டக் கூடாது; அவர்களது உழைப்பைத் திருடக் கூடாது.

புகழ்பெற்ற "ராய்ட்டர்' என்ற செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வில் குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களாக மூன்று நாடுகளைக் குறிப்பிட்டிருந்தது. அவை ஈராக், சோமாலியா மற்றும் இந்தியா, இந்தியாவுக்கு இந்த இழிநிலை வருவதற்கு என்ன காரணம்? குழந்தைகளிடம் நமக்குள்ள அக்கறையற்ற போக்குதான்.

உலகிலேயே அதிகமான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடும் இந்தியாதான். வீட்டுவேலை செய்வது, பேப்பர் சேகரிப்பது, எடுபிடி வேலை செய்வது போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் தொகை கூடுதல்தான்.

தொழிலகங்களில் வேலை செய்யும் குழந்தைகளுக்காவது வாரம் ஒருநாள் விடுமுறை கிடைக்கும். ஆனால் வீட்டுவேலை செய்யும் குழந்தைகளுக்கு ஓய்வும் கிடையாது; விடுமுறையும் கிடையாது. ஆண்டுமுழுவதும் உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஊதியமும் மிகக் குறைவு.

இவர்களில் பெண் குழந்தைகளே அதிகமாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலான ஏழைக் குடும்பங்களில் வீட்டிலுள்ள பிற குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுதல், சமையல் செய்தல், வீட்டைப் பராமரித்தல் என்பன பெண் குழந்தைகள் மீதே சுமத்தப்படுகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகள் படிக்கவும் முடிவதில்லை; பள்ளிப்படிப்பை முடிக்கவும் முடிவதில்லை.

இதைவிடத் திடுக்கிடச் செய்யும் மற்றொரு தகவல் ஆப்பிரிக்கக் குழந்தைகளைவிட இந்தியக் குழந்தைகளிடம் சத்துணவுப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்னும் அறிவிப்பாகும். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அங்குள்ள குழந்தைகளில் 25 விழுக்காட்டினர் சத்துணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் சுத்தமான குடிநீர் கிடைக்காமையால் ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகின்றனர் என்பது மிகப்பெரிய அவலம்.

இந்தியாவில் 10 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. 3 கோடி பேருக்கு இருக்க இடமே இல்லை. ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் குடிசை இடிக்கப்பட்டு தெருவில் நின்ற காட்சியை நினைத்துப் பார்த்தால் இதன் உண்மை தெரியும்.

குழந்தைத் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி 14 வயதுக்கு உள்பட்டவர்கள் குழந்தைகள் என அழைக்கப்படுவர். இவர்கள் சட்டத்தின் 3-ம் பிரிவில் இடம்பெற்றுள்ள 13 வகையான தொழில்கள் மற்றும் 57 வகையான தொழில் நடைமுறைகள் போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

குழந்தைகளைப் பணியில் அமர்த்துவோருக்கு 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். இந்தச் சட்ட நடைமுறைகளை மத்திய அரசும், மாநில அரசும் அவரவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்படுத்த வேண்டும்.

1987-ம் ஆண்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி தீமைகளை ஏற்படுத்தும் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படாமல் காப்பதற்குத் தேவையான அரசியல் சட்டப் பிரிவுகள் மற்றும் சட்டப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிக்கலான குழந்தைத் தொழிலாளர் முறை பற்றி இந்தக் கொள்கையில் விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் விளக்கப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கைத் திட்டம், குழந்தைகளின் குடும்பங்கள் பயன் அடையும் வகையிலான பொதுவளர்ச்சித் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அம்முறையை ஒழிப்பதை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களைச் செயல்படுத்துதல் என இந்தக் கொள்கையின்படி தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டங்களைத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தீமை ஏற்படுத்தும் தொழில்களில் ஈடுபட்டுள்ள குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கான தொடர்நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவில் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் குறைவேயில்லை. ஆனால் இவை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? உலகத்திலேயே இந்தியாவில்தான் குழந்தைத் தொழிலாளர் மிகுதியாக இருப்பதாக யுனெஸ்கோ கூறுகிறது. இல்லை என்று மறுப்பதற்கு உண்மை இடம் தரவில்லை.

இந்நாட்டின் அதிகாரப்பூர்வ கணக்கின்படி ஒரு கோடியே 30 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் 6 கோடி குழந்தைத் தொழிலாளர் இருப்பதாகத் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 1986-ம் ஆண்டில் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, இதுவரை 60 ஆயிரம் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு இப்போது குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் முனைப்புடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செயல்பட்டு வருவதாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 2007-ம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் சட்டம் மற்றும் பிற சட்டங்களின்கீழ் 2,13,522 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 989 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 231 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. ரூ. 19,89,575 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 1,041 குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டுவேலை உள்ளிட்ட பிற தொழில்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 479 குழந்தைத் தொழிலாளர்கள் உடனடியாகப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களையும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பு கூறுகிறது.

அரசாங்க அறிவிப்புகளைக் கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மை அதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது. அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை பொறுப்புள்ளவர்கள் கூறாமல் இல்லை.

பெரும்பாலான குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவதற்குக் காரணம் வறுமைதான் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். குடும்பத்தில் எல்லோரும் வேலைக்குப் போனால்தான் அரைவயிறாவது சாப்பிட முடியும். இந்நிலையில் பெற்றோரைக் குற்றம் கூறி என்ன பயன்? அவர்கள் வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கின்றனர்? இல்லாதபோது என்ன செய்ய முடியும்? இப்படியும் சிலர் கேட்கவே செய்கின்றனர்.

ஏழ்மை மட்டுமன்றி, இயற்கைச் சீற்றங்களின்போது பல குடும்பங்கள் வீடு, சொத்து, வாழ்வாதாரம் போன்ற அனைத்தையும் இழந்துவிடுவதால் அக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். உறவினர்கள் மற்றும் தரகர்களால் நகர்ப்புறங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் பெரும்பாலோர் கொத்தடிமைகளாக விற்கப்படுகின்றனர்.

பச்பன் பச்சாவோ அந்தோலன் அமைப்பு 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களையும், கொத்தடிமைகளையும் மீட்டுள்ளது; இது எளிய செயலாக இல்லை; உயிரையே பணயம் வைப்பதாக இருந்தது.

குழந்தைகள்தான் நமது உண்மையான சொத்துகள் என்றும், தேசத்தின் எதிர்காலம் என்றும் கொள்கை ஆவணங்கள் கூறுகின்றன. இந்தியாவில் உள்ள தொழிலாளர் சக்தியில் 55 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் திரிகின்றனர். இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நிதிநிலை அறிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. "அனைவருக்கும் கல்வி' என்னும் அரசுத்திட்டம் இன்னும் எல்லோருக்கும் சென்று சேரவே இல்லை. இப்போது படித்து வருபவர்களில் 50 சதவீதம் பேர் தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர்.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் தலைவரான சாந்தா சின்ஹா குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று கருதுகிறார். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, சத்துணவு வழங்குவது, கல்வி அளிப்பது ஆகியவை அரசாங்கக் கொள்கையின் அடிநாதமாக அமைய வேண்டும் என்றும் கூறுகிறார்.

"குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பது பெரியோர் பொன்மொழி. தெய்வத்தைக் கொண்டாடுகிறோம். குழந்தைகளைக் கொண்டாட வேண்டாமா? செதுக்க வேண்டிய சிற்பத்தைச் சிதைக்கலாமா? பூவுக்கே விலங்கு பூட்டலாமா?
"குழந்தைகளின் வருமானம் குடும்பத்துக்கே அவமானம்' என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கெடுப்பதற்கான உரிமை யாருக்கும் இல்லை; ஆளாக்க
வேண்டிய கடமை மட்டுமே அனைவருக்கும் இருக்கிறது

தயவு செய்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் இன்று முதல் சபதம் ஏற்ப்போம்

cartoon


அரசியல்வாதிகள்தான் முன்னேறியிருக்கிறார்கள். விவசாயிகள் இன்னும் அப்படியேதான் உள்ளார்கள். இன்னும் அறுபது வருடமானாலும் இந்திய விவசாயிகள் நிலை இப்படித்தான் இருக்கும். உண்மையை உணர்த்தும் கார்ட்டூன்.

நன்றி : விகடன்

வெள்ளி, 12 ஜூன், 2009

விவசாயம்

விவசாயியே வெளியேறு!


1942 ""வெள்ளையனே வெளியேறு'' என்ற விடுதலைக் குரல் இந்தியாவில் ஓங்கி ஒலித்ததன் விளைவால் தூங்கிய பாரதம் துணிவுடன் எழுந்தது. விடுதலை பெற்ற இந்தியாவில் இன்று நிகழ்வது என்ன?

ஆட்சியைப் பிடித்தவர்கள் கட்சிகளை மாற்றுகிறார்கள். மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவிக்காக கொள்கைகளைக் குப்பையில் கொட்டியபின்பும் சாயம் வெளுக்காத சில சமரசங்கள் அவர்களுக்குப் பணத்தை அள்ளித் தரலாம்.

எந்தக் கட்சி பதவிக்கு வந்தால் என்ன? யார் ஆண்டால் யாருக்கு என்ன லாபம்? யாராலுமே காப்பாற்ற முடியாத ஒரு கேவல நிலைக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.

ஆண்டுதோறும் விவசாயத்தைக் கைவிட்டு பெருநகரங்களின் சேரிகளில் குவியும் விவசாயிகளின் நிலை ஏறத்தாழ இலங்கை அகதிகளைவிடக் கேவலமாயுள்ளது. விவசாயிகளின் வாரிசுகள் இன்று விவசாயம் செய்யத் தயாராக இல்லை. 1980 - 89 காலகட்டத்தில் 5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள் 2004 - 05 காலகட்டத்தில் என்ன ஆனார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் திரட்டப்படுமானால் இந்த உண்மை வெட்டவெளிச்சமாகும்.

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் நிலை இன்னமும் மோசம். நகரங்களில் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவியல் நுட்பம் நன்கு தெரிந்த சிறு - குறு விவசாயிகளாவர். பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தாமாகவே வாழ்வை முடித்துக்கொண்டு விட்டார்கள்.

அரசுத்தரப்பு புள்ளிவிவர அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திலும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 1993-லிருந்து 2006 வரையில் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஊடகங்களின் தகவல்களின்படி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மூன்று லட்சம்.

2006-லிருந்து 2009 வரையில் மேலும் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்தியாவில் இவ்வளவு அரசியல் கட்சிகள் இருந்தும் எந்த ஒரு கட்சியாவது விவசாயிகளின் தற்கொலையை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஒரு தேசம் தழுவிய மாநாடு கூட்டியோ ஊர்வலம் நடத்தியோ ஏதும் ஒரு பொதுக்கூட்டத்தில் விவாதித்ததா? மாநில அளவிலாவது இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டதா? எதுவுமே செய்யப்படாததன் பொருள் என்ன? திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இந்தியாவில், விவசாயிகளை வெளியேற்றுவதும் ஒரு திட்டக் கொள்கையாக மாறிவிட்டதுதான் பரிதாபகரமான உண்மை நிலை. இது எவ்வாறு என்றால் அமெரிக்கா திட்டமிடுகிறது. அதை இந்தியா நிறைவேற்றுகிறது. அமெரிக்காவில் எவையெல்லாம் நிகழ்ந்தனவோ அவையெல்லாம் இந்தியாவில் நிகழப் போகின்றன.

ஓர் அரசு மேல்மட்ட அதிகாரியையோ, அரசுத்துறை விவசாய விஞ்ஞானியையோ பார்த்து, இந்திய விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டுப் பாருங்கள். ரெடிமேட் பதில்கள் நிறையக் கிடைக்கும்.

உற்பத்தித்திறன் குறைவதால் வருமானம் குறைகிறது. அதனால் தற்கொலை என்பார். விவசாயம் காரணமல்ல. திருமணச் செலவு காரணமாகக் கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கின்றனர். உண்மையை மூடி மறைக்கவே இப்படியெல்லாம் விவசாயத் துறையினர் காரணங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

பசுமைப்புரட்சி நிகழ்வதற்கு முன் குறிப்பாக 1960 - 69 பதிற்றாண்டில் விவசாய உற்பத்தித் திறன் குறைவாகத்தான் இருந்தது. அன்று எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொண்டதாக எதுவும் செய்தி இல்லையே. அன்றும் விவசாயிகளின் பெண்களுக்குக் கல்யாணக்கடன் இருந்தது. அதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

கடந்த 40 ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தியும் உற்பத்தித்திறனும் பன்மடங்கு உயர்ந்தும் கூட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? கடந்த 40 ஆண்டுகளாக உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற இலக்கு உலகளாவியதாக இருந்தது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா என்று உலகின் எல்லா இடங்களிலும் உற்பத்தியை உயர்த்துவது ஒரு பொதுவான லட்சியமே. வளர்ச்சியுற்ற நாடுகளில் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டு இயங்கும் இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று. இரு நாடுகளின் வேளாண்மைப் பொருளியல் ஒப்பிடக்கூடியதும் அல்ல. அமெரிக்காவில் 7 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அமெரிக்காவில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 70 லட்சம். ஒட்டுமொத்த அமெரிக்க சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமே விவசாயிகளின் எண்ணிக்கையாக உள்ளது.

இரண்டாவது உலகப் போருக்கு முன்பு அமெரிக்காவில் 3 கோடி விவசாயிகள் இருந்தனர். அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் விவசாயத் தொழிலைக் கார்ப்பரேட் என்ற வர்த்தகக் கூட்டணி கைப்பற்றியது. சுமார் 2.7 கோடி விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றியது. இன்றைய அமெரிக்காவின் விவசாயக் கொள்கை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவன நிகழ்ச்சி நிரலாக மாறிப்போனது.

2000-ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கு கடைசியாக எடுக்கப்பட்டபோது வேண்டுமென்றே விவசாயிகளின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தை எடுக்கவில்லை. அமெரிக்காவில் விவசாயிகளின் தொகை சுருங்குவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இன்று ஐரோப்பாவிலும் விவசாயிகள் அழிந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவிலும் சீனாவிலும் விவசாயிகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமாக விவசாயக் கொள்கைகளுக்கு மத்தியில் கணிசமாக உள்ளது. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 20 கோடி. உலக விவசாயிகளில் 10-க்கு நால்வர் இந்திய விவசாயிகள். இந்தியாவின் விளைநிலம் 139 கோடி ஹெக்டேர். விவசாயியின் சராசரி நில அளவு 1.4 ஹெக்டேர். இந்தியாவுடன் ஒப்பிட்டால் அமெரிக்காவின் சராசரி நில அளவு 2000 மடங்கு கூடுதல். இந்தியாவில் விவசாயம் வாழ்க்கை. அமெரிக்காவில் விவசாயம் வியாபாரம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்காவின் அனுபவம் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும் என்பதே விளங்காத புதிராக உள்ளபோது, இந்தியாவிலும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறும் எண்ணிக்கை பல கோடிகளைக் கடந்துவிட்டது. குறிப்பாக 1980-க்குப் பின் கிராமங்களைவிட்டு வெளியேறிய சிறு - குறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும்.

இந்தியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய உணவு அரிசி. அமெரிக்காவில் அரிசி ஏற்றுமதிச் சரக்கு. ""அமெரிக்காவில் அரிசியின் உற்பத்தித்திறன் 7 டன். இதுவே இந்தியாவில் 3 டன். ஆகவே இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவிலும் ஹெக்டேருக்கு 7 டன் அரிசி விளைவிக்க வேண்டும். இந்த அளவில் இந்திய விவசாயிகள் அரிசி உற்பத்தி செய்தால் போதும். நல்ல லாபம் வரும். நிலத்தைவிட்டு வெளியேற வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்தும் இல்லை. விவசாயப் பிரச்னைகள் எல்லாமே உற்பத்தித் திறனை உயர்த்தினால் போதும்...'' இப்படித்தான் நமது நிபுணர்கள் நினைக்கின்றனர். இது சரியல்ல.

அமெரிக்காவில் மொத்த அரிசி உற்பத்தியின் பணமதிப்பு 1.2 பில்லியன் டாலர். இந்த அளவில் அரிசி உற்பத்தி செய்ய 1.4 பில்லியன் டாலர் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரொக்கமாக இந்த அளவு மானியம் பெறுவதால் 7 டன் உற்பத்தித்திறன் சாத்தியமாகிறது. இந்திய விவசாயிகளுக்கும் இந்த அளவுக்கு மானியம் வழங்குவது சாத்தியமா? இந்த அளவில் மானியம் பெற முடியாத சூழ்நிலையில் நிபுணர்களின் பேச்சைக்கேட்டு அதிகம் முதலீடுகளைக் கொட்டி அதிக உற்பத்தி செய்தும் அதற்கான சந்தையும் விலையும் இல்லாமல் நஷ்டமடைந்து கடனாளியாகி முடிவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுதான் நிஜம்.

நமது விவசாயக் கொள்கை எப்படி உள்ளது என்றால், ""விவசாயிகள் எப்படியாவது கடனை உடனை வாங்கி புதிய முறை விவசாயத்தைக் கடைப்பிடித்து உற்பத்தியை உயர்த்தி முடிவில் விற்க வழியில்லாமல் தற்கொலை செய்து செத்துவிடு அல்லது நிலத்தை வந்த விலைக்குக் கார்ப்பரேட்டுகளிடம் விற்றுவிட்டு வெளியேறு என்று கூறுவதுபோல் உள்ளது''.

ஆமாம். இன்று இந்திய விவசாயத்தில் அமெரிக்காவைப்போல் கார்ப்பரேட்டுகள் நுழைந்துவிட்டனர். இன்று அமெரிக்க உபதேசத்தை வேதமாகக் கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் அமைச்சர்கள் விவசாயத்தை லாபகரமாக மாற்ற ஏற்றுமதிக்குரிய மாற்றுப்பயிர்த்திட்டத்தை முன்வைக்கின்றனர். கொய்மலர், வெள்ளரிக்காய், கண்வலிக்கிழங்கு, மூலிகைகள் என்ற வரிசையில் பல வகைப் பயிர்கள் உண்டு. இவற்றைப் பயிரிடும் தகுதி உணவு விவசாயம் செய்யும் ஒன்றே முக்கால் ஏக்கர் பேர்வழிகளுக்கு இயலாது. கார்ப்பரேட்டுகள் அல்லது கார்ப்பரேட்டுகளின் பக்கபலம் உள்ள பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே லாபம் உண்டு.

ஏற்றுமதி எத்தர்களால் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து ஏமாந்துபோன விவசாயிகள் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் உண்டு. அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு தென் அமெரிக்க நாடுகளில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்து கார்ப்பரேட் பயன் அடைந்தார்கள். ஆனால் உணவு உற்பத்தி குறைந்து அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து உயிர் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறு - நடுத்தர விவசாயிகள் வெளியேறி விட்டனர்.

இதேபோக்கு இந்தியாவில் தென்படுகிறது. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய அறிவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்கப் பாரம்பரியத்தை ஏற்கும் நிலை புதிய புதிய நவீன ரசாயன - இயந்திரத் தொழில் நுட்பங்கள் மூலம் அறிமுகமாகி விட்டதால் இந்திய மண்ணில் இனி பாரம்பரிய விவசாயிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

இனி எதிர்காலத்தில் இந்திய விவசாயம் முழுமையாகவே கார்ப்பரேட்டுகளின் வசமாகிவிடும். வேறு வழியில்லாமல் விவசாயிகள் வேகமாக சொந்த மண்ணைவிட்டு உள்ளூர் அகதிகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


Most Talented Baby,,watch it